‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6
ஜனவரி 8, 2013 அன்று திரு. ஶ்ரீரங்கம் மோஹனரங்கம் ஹிமாலய மலைச்சாரலில், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் சிறார்கள் பள்ளி செல்லும் கடினமான பாதையை பற்றியும், தந்தையர்களின் கல்வி அளிப்பதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றியும் ஒரு அருமையான விழியத்தை காண்பித்து, ‘... இந்தக் குழந்தைகளும், அவர்களது தந்தையும் கல்விக்காகச் செய்யும் சாதனையைவிட உலகில் வேறு எந்தச் சாதனையும் எனக்குப் பெரிதாகப் படவில்லை... எந்த நேரமும் பனித் தரை உடையலாம். அது முழுக்க ஆறு. ஆழமான ஆறு. அதன் உறை படலத்தின் மீதுதான் நடந்து வரவேண்டும். ஏதாவது எக்குத்தப்பாய் கால் வைக்கும் போது உடைந்தால் ஆற்றின் ஆழம் பனிக்கல்லறை...’ என்று வியந்து பேசினார். அவர் கூறியதை வழிமொழிந்து, அதே விழியத்தை நம் எல்லாருக்கும் முன்னுதாரணமாக, இத்துடன், நன்றி கூறி, இணைக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியின் மேன்மையை பற்றியும், அதனுடைய ஆசிரிய பெருமக்களின் வேள்வியை பற்றியும் நண்பர் கதிர் எழுதிய மடல் மகிழ்ச்சி அளித்தது. பத்து வருடங்களாக, பெங்களூரு கோரமங்கலா பகுதியில் இயங்கி வரும் ராயல் பரிக்கிரமா பள்ளியை பற்றி ஒரு ஊடகச்செய்தி: எல்.கே.ஜி. யிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வந்த வி.ஐ.பி. விருந்தினருடன் சகஜமாக அளவளாவினர்; அவர்களில் பெரும்பாலோர் சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் (marginalized) வீட்டு சிறார்கள்; வந்தவர்,அவர்களின் தட்டுத்தடுமாறாத ஆங்கில உரையாடலையும், பல விஷயங்கள் அறிய விரும்பும் ஆர்வத்தையும் கண்டு வியந்து போனார். அந்த தன்னார்வபள்ளியின் இலக்கு, சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் வீட்டு சிறார்களுக்குக் கல்வி அளிப்பதில் புரட்சிகரமான ஆக்கப்பூர்வ வழிமுறைகளைக் கையாளுவதே. அதன் நிறுவனர் சுக்லா போஸ் அவர்கள் பள்ளி அறை, வசதி, கணினி ஆகியவை போதாது; ஆர்வமும், சூழலும் தான் முக்கியம் என்கிறார். அந்த பள்ளிக்கு நான்கு கிளைகள்; மூன்று அனாதை இல்லங்களிலிருந்து, 69 சேரிகளிலிருந்தும் மாணவர்கள் படிப்பதாக, ஹிந்து இதழ் கூறுகிறது. மாணவர்களுக்கு இலவச கல்வியும், சத்துணவும், அடிப்படை மருத்துவ வசதியும் அளிப்பதோடு நிற்காமல், வயது வந்தோர்களுக்குக் கல்வியும், தையல் வகுப்புகளும் நடத்துகிறார்கள். கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம். இவர்களில் சிலர் மத்திய/மாநில அரசுகளின் உயர் பதவில் வகித்தால், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்று எழுத நினைத்தவுடன் மற்றொரு செய்தி.
ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு முஸொளரியில் ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு பாடம் எடுத்தது ஒரு படிக்காத மேதை; ஆந்திர விவசாயி திருமதி. ஐதலா லலிதாம்மா அவர்கள். அவருடைய திறனும், அனுபவமும்: பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயம், மழைநீர் சேகரிப்பு; தரமான இயற்கை உரமும், வித்துக்கள் தயாரிப்பு. செல்வமும் ஈட்டினார். இதையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.
இந்த செய்திகள் ‘பாரத தேசமென்று பெயர் சொல்ல’ துணிவை கொடுக்கின்றன.
‘இந்த சட்டத்தின் (RTE Act) அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.’ என்று போன இழையில் சொன்ன நான், அநாவசியமாக அருமை நண்பர் செல்வனுடன் முட்டி மோதியதால், திசை மாறிய இழை குலைந்தே போய் விட்டது. தவறு என்னுடையது; ஆர்வமிகுதியின் விளைவு. மேலும், சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு, ‘...மார்ச் 31 கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’ என்று கேட்க எனக்கு உரிமை யாதும் இல்லை. திரு.செல்வனிடமும், மடலாடும் தோழர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த சட்டத்தின் அடிப்படையை அரசு தளத்திலிருந்து எடுத்து, இணைப்பதுடன், என் தற்காலிக பணி முடிந்தது; அடுத்து இவ்விழை தொடர்ந்தாலும், கல்வி உரிமையை பற்றி பேசுவதை தவிர்த்து விடுகிறேன்.
நன்றி, வணக்கம்.
05 04 2013
No comments:
Post a Comment