அரசமரமும் அடிவயிறும்! -1
- Monday, October 17, 2011, 8:50
இன்னம்பூரான்
“மத்திய அரசு கிராமீய சுகாதாரச் சேவையையும், துவக்கப் போகும் நகர்ப்புறச் சுகாதாரச் சேவையையும், 13-வது ஐந்தாவது திட்டத்தின் போது இரண்டற கலந்து இயக்கும். அது வரை அவை தனித், தனிப்பாதையில். 2005-ல் துவக்கப்பட்ட கிராமீயச் சுகாதாரச் சேவை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு… நகர்ப்புறச் சுகாதாரச் சேவைக்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்… எல்லா நகரவாழ் மக்களுக்காக இயங்கும். சேரி வாழ் ஏழைகளுக்கு மேலும் கவனிப்பு…”
~ மத்திய அரசின் அறிவிப்பு (க்கமாக): அக்டோபர் 14, 2011
அரசமரம் அரசின் ஆளுமைக்கு உவமை. அடிவயிறு, ஆலாய்ப் பறக்கும் (அண்ணல் காந்தியின்) தரித்ரநாராயணனுக்கு உவமை. மேற்படி அறிவிப்பு புதிதாக என்ன செய்ய உத்தேசிக்கிறது? ஒரு பின்னோட்டம் (நீங்கள் பின்னூட்டமிடாவிடினும்!): ‘கிழக்கிந்திய கம்பெனியின் அறிவிப்பு:1621 ‘ இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள், தரத்திலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, குணம் தருவதிலும் சரி, இங்கிலாந்தில் கிடைப்பதில்லை. மருந்து வாங்க இங்கு வாருங்கள்…உணவு இங்கு மிக சிறந்தது..மருத்துவ மாணாக்கர்களின் பயிற்சி சிறப்பாக தொடங்கிய வருடம்: 1827.( ஆதாரம்: அருமை நண்பர் டாக்டர் டி.வி.எஸ். ரெட்டி:1947: The Beginnings of Modern Medicine in Madras).
1964-ல் என் தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிக்கலான அறுவை சிகிச்சை நடந்தது. எல்லாம் உயர்தரம். ஆபரேஷன் சார்ஜ் ரூ.15. நோ சிபாரிசு. அக்காலம் அரசியல் பிரமுகர்கள் அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் வருவார்கள் – ராஜாஜி. 2008 – 2010: நான் தனிமனிதனாக, கீழ்ப்பாக்கம் (டயபெட்டீஸ்) ராயப்பேட்டை (இருதய நோய்), ஜெனரல் ஆஸ்பத்திரி (குடல் வியாதி) குறிப்பிட்ட துறைகளில், அநாமதேயமாக கவனித்தேன்
எல்லாம் திருப்திகரம். நெரிசல், வசதிக் குறைவு, சுகாதாரக் குறைவு. மற்றபடி பரவாயில்லை. நல்ல கவனிப்பு, பாரபட்சமில்லாமல். க்யூ. 2011: ஒரு டாக்டரின் பொறுமையின்மையால், என் உடல் நிலை தீவிரமாகத் தாக்கப்பட்டது. அரசு டாக்டர், சொந்தக் கச்சேரி. ஒரு தனியார் மனையில் ஒரு நோயாளி இரட்டை விலையில் ஒரு சாதனம் வாங்கச் சொல்லி கட்டாயப் படுத்தப்பட்டார். மற்றொருவருக்கு கடுமையான டெஸ்ட்டுகள் செய்ய வேண்டும்; புற்று நோய் என்றனர், தனியார் ஆஸ்பத்திரியில். அடையார் புற்று நோய் ஆஸ்பத்திரியில் இவற்றை புறக்கணித்து விட்டார்கள், தேவையில்லை என்று.
சரி. ஏழைகள் படும் பாடு பார்ப்போம். 1980-களில் ஒரு கிராமத்தில் சின்ன அரசு சுகாதார மையம், மயானத்துக்கு அருகில். டாக்டர்கள் ஊருக்குள் தனியார் ஆஸ்பத்திரியில். 1997: சென்னை: எங்கள் தெரு துப்புரவுப் பெண் தொழிலாளியைக் கார்ப்பரேஷன் பிள்ளைப் பேறு மையம் கொண்டு செல்கிறோம். நல்ல கவனிப்பு. நோ லஞ்சம். பல நிகழ்வுகளைத் (1621 ~ 2011) தொகுத்து இங்கு அளித்ததின் காரணம்: மேற்கூறப்பட்ட மத்திய அரசு அறிவிப்பு 30 ஆயிரம் கோடி என்ன முப்பது பைசா பொறாது. காகிதத்தையும் மசியையும் வீண் அடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, நேரு, மஹாத்மா என்று சகஸ்ரநாமங்கள் வேறு. தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீடு என்று வரிப்பணத்தை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்தார்கள்.
நான் காணும் குறை யாது? சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு இந்தியாவில் அடித்தளம் நன்றாகத்தான் இருக்கிறது. மேல் கட்டிடம் தான் சோபை இழந்து, சாயம் கலைந்து, காரை பெயர்ந்து, செங்கல் துருத்தி, அலங்கோலமாக இருக்கிறது. அவற்றைச் சீர் செய்து, பராமரிப்பதை விட்டு விட்டு, புதிதாக அஸ்திவாரம் தோண்டுவானேன்? பின்னர் மேல் கட்டிடம் சோபை இழந்து, சாயம் கலைந்து, காரை பெயர்ந்து, செங்கல் துருத்தி, அலங்கோலமாக இருக்கிறதே என்று அலறி, 2016-ல் ராகுல் காந்தி சுகம் ஆதாரம் திட்டம் (இது கற்பனை) போடுவானேன்? திட்டம் போடுவதற்கு முன், கட்டுக்கோப்பாக, வாய்மையுடன் இயங்குங்கள். கட்டம் கட்டுங்கள். கட்டிடத்தைப் பராமரியுங்கள். அரசுப் பணிகளை உரிமையுடன் மக்கள் கேட்பதற்கு முன் கொடுத்துப் பழகுங்கள்.
‘தணிக்கையென்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடர் விழிப்புணர்ச்சியின் ஒரு கோணம். தட்டிக் கேட்டு ‘ஆடியவள் குற்றமா? முற்றம் குற்றமா? என்று நிர்ணயிப்பது. ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற தொடர், அரசின்/ சமுதாயத்தின்/மக்களின்/ தனியாரின் செயல்பாடுகளில் அதர்மம் ஓங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதைப் பற்றி. ‘அரசமரமும் அடிவயிறும்!’ என்று, இன்று தொடங்கும் தொடர் ஆளுமை செய்யும். மத்திய அரசு/ மாநில அரசுகளைப் பற்றி. வாசகர்களுக்கு ஆர்வம் தராத, விழிப்புணர்ச்சியைத் தூண்டாத கட்டுரைகள் வாரா.
(தொடரும்?)
இன்னம்பூரான்
17 10 2011
|
No comments:
Post a Comment