இன்னம்பூரான் பக்கம் 16
“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
‘சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும் நமக்கு உறுதுணை என்ற பிந்திய தொடரின் பீடிகை, வேறு ஒரு இடத்தில் சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாயிற்று. அவற்றின் சாராம்சம்:
பொது அங்கீகாரம் (conformity) ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. நிரந்தரம் அடைந்த பொது அங்கீகாரம் அதற்கு முரண். சிந்தனைக்கு அதை மாற்றியமைக்கும் திறன் உண்டு. அதனால் தான், காலத்துக்கேற்ற பொருத்தம்/புதிய கோணங்கள்/காரண காரியங்களை கண்டு கொள்வது ஆகிய கட்டாயங்கள் ஏற்படும்போது, பொது அங்கீகாரம் சிந்தனையை குலைக்கக் கட்டைப் பஞ்சாயத்து செய்கிறது. மூடநம்பிக்கைகள் அதனுடைய தூண்களாக அமைந்து விடுகின்றன.
விவேகமற்ற அரசியல் மேலாண்மையை கட்டுக்குள் வைக்க சமுதாயத்துக்குத் துணிவு இல்லாததால், தத்துவ விசாரணையின் பிதாமகன் என கருதப்படும் சாக்ரடீஸ் அரசாணைக்குட்பட்டு நச்சு அருந்தி தன்னை மாய்த்துக்கொண்டார். ‘காசே தான் கடவுளடா!’ என்ற பழம்பெருச்சாளிகளை நிந்தித்த ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார். ‘‘சாந்தி நிலவவேண்டும்’ என்ற மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பொது அங்கீகாரத்தின் மூளைச்சலவையின் ஆதிக்கம் வலிமை மிகுந்தது. அதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள, நாம் ஒரு குகையில் நுழைவோமாக.
நீண்டதொரு இருட்டுப்பாதையில் ஓட்டமும் நடையுமாக நடை நடந்து ஒரு கும்மிருட்டு குகைக்குள் செல்கிறீர். அதனுடைய முட்டுச்சுவர் பெரிது; அகலமானது; நீண்டது. மானிடர்கள் பலர், அதில் விலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கழுத்துக்குக்கூட அசையமுடியாத தளையிறுக்க, அவதிபடுகிறார்கள். எதிரில் உள்ள மற்றொரு சுவர் ஒன்று தான் காட்சி. ஒருவரை ஒருவர் பார்க்ககூட முடியாது. வலியும் வழக்கமாகி போய்விட்டது. விடுதலையில்லை என்பதும் உறுதியாகி விட்டது. அவர்களுக்கு இது பழக்கமாகி விட்டது. ஆயுசு பரியந்தம் இதே நிலை, ஜனித்ததிலிருந்து. இயல்பு ஆகிவிடும், காலாகாலத்தில். இந்த முட்டுச்சுவருக்கு பின்னால் ஒரே பிரகாசம். கொழுந்து விட்டு எரிகிறது தீ. அங்கிருந்து சற்றே தொலைவில் சூடில்லா பிரதேசம். அங்கு மக்கள் வந்து போய் கொண்டு இருக்கிறார்கள்; தலையில் சுமை; வாயெல்லாம் பல்;அப்படி பேச்சு. இவர்களில் நிழல்களை கைதிகள் பார்க்கிறார்கள். பேச்சொலியின் எதிரொலியை கேட்கிறார்கள். வாழ்நாள் முழுதும் இதே கதி என்பதால், அவர்கள் மனதில் இந்த நிழல்களும் எதிரொலியும் உண்மை நிகழ்வுகளாக பதிந்து விடுகின்றன. என்ன தான் எடுத்துச்சொன்னாலும் அது விபரீதம் தான். சுருங்கச்சொல்லின், இந்த நிழலுலகம் அவர்களுக்கு நிதரிசன உலகு. மற்றதெல்லாம் மாயை. எப்பாடுப் பட்டோ, நீவிர் ஒரு கைதியை விடுவித்து, பிரகாசமான பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறீர்கள். ஒளி அவன் கண்ணை குத்துகிறது. முடங்கிக்கிடந்த கைகால் அசைய மறுக்கிறது. ஒன்றும் புரியவில்லை. காலம் செல்ல, செல்ல, அவனுக்கு துணிவு பிறக்கிறது, துளிராக. வெளியுலகம் அவனை ஈர்க்கிறது. நிழலை மறந்து அசலை அனுபவிக்கிறான். எதிரொலியின் விகாரம் மறைந்த இசைஒலி அவனுக்கு அமுதமாகப்படுகிறது. உம்முடன், அடித்துப்பிடித்துக்கொண்டு சகபாடிகளை உய்விக்க ஓடோடி வருகிறான், இருட்டுக்குகைக்குள். அவர்களோ இவனுடைய தீர்க்க தரிசனத்தை எள்ளி நகைத்து, அவனை நாடுகடத்தவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வருகிறார்கள்.
(தொடரும்)
உசாத்துணை: The Myth of the Cave.
சித்திரத்துக்கு நன்றி
http://qiq.ru/media/npict/ 1008/original/amazing_animals_ wallpapers_full_hd_1080p_ 709421.jpegMore Posts
No comments:
Post a Comment