அன்றொரு நாள்: மே 3:
பாட்டீ!
எனக்கு ஒரு அத்தான் இருந்தார். அவருடன் தெருவில் நடந்தால், தாமதம் மிகுந்து விடும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று, ‘படி கோணல்’/‘முற்றம் சிறியது’/‘ஓடுகள் சரியாக அடுக்கப்படவில்லை’, அது, இது என்று குற்றம் குறை சொல்லுவார். அவர் ஒரு கட்டிடக்கண்ட்ராக்டர். ஒரு பிரதமருக்கு இந்த மாதிரி ஒரு குணம். எந்த பெண்மணி வந்து போனாலும், உடையின் பார்டர் அமைப்பை உற்று நோக்குவார். அது பழகிப்போய் விட்டது. ஒரு காலத்தில், அவர் காஜா தைத்து, பெண்ணாடை தையல்காரராக பிரமோஷன் ஆனவர் தானே!
அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. சில இங்கே. ஆயிரக்கணக்கான ஜனம் உள்ள கூட்டத்தில் அவர் பேசுவது, அவரது வீட்டின் முன்னறையில், சாதாரணமாக அளவளாவுதல் போல் எளிமையாக இருக்குமாம். ஒரு உதாரணம்:
‘எம் தலைமுறையின் உழைப்பு வரப்பை உயர்த்தியது. எம் குழந்தைகள் தர்மயுத்தம் செய்தனர். எம் பேரக்குழந்தைகள் நிம்மதியாக வாழவேண்டும்.’ ஒரு கடுமையான போர். நாட்டின் தலைமை, இவரிடம். ஜெயித்தது யார் என்பது தெளிவாக புரியவில்லை. இரு தரப்பும் மார் தட்டினர். இவர் உரைத்தது: ‘வாகை சூடுவதில் எமக்கு நிறைவு இல்லை. ஒரு புதிய வகை பருத்தி காய்த்ததா? பழங்கள் கனிந்தனவா? அதுவல்லவோ மனமகிழ்ச்சி தரும்’ .
அவரோ பெரிசு. அவருடைய அணுகுமுறை வியப்பை அளிக்கும். காரியம் சித்தியாகும். மனோதிடம் பாறாங்கல் மாதிரி. நேசமோ கனிவானது. வாசாலகம். கையில் செக்-லிஸ்ட். ராஜதந்திரமும், ஊடக ஆதரவும் அவருக்கு வலது/இடது கை. தொட்டதெல்லாம் பொன்னும், கன்னும் (gun). அவ்வாறு இருந்த போதிலும், போர்த்தலைமையில் நிகரற்றவரெனினும், இவருடைய கொள்கை: ‘அண்டையும், அயலும், அன்புடன் இயைந்து வாழவேண்டும்.’ அவருடைய ஆதங்கம்:’ நாம் ‘சாந்தி’ என்றால் அது ‘சமர்க்களம்’ என்று எதிரொலிக்கிறதே. வெற்றி நிச்சியம் என்றாலும் யுத்தம் வேண்டாம்’ என்பதே. 1948 ல் ஆண் வேடம் போட்டு, எதிரியான ஜார்டான் மன்னர் அப்துல்லாவிடம் சமாதானம் நாடி சென்ற வீராங்கனை அல்லவா?
இது எனக்கு நினைவூட்டுவது:புறப்பொருள் வெண்பாமாலை:பாடாண் திணை; துறை உடனிலை: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. அகம் என்றால் கள்ளக்காதல், புறம் என்றால் கத்திச்சண்டை என்ற குறுகிய அளவில் தற்காலத்து தமிழுலகம் புரிந்து கொண்டது என்று தோன்றுகிறது. ஐயா! அப்படியில்லை. ‘பாடாண்துணை’ பகுதிக்குப் போனால் அரசதர்மம், நீதியின் மேன்மை, சான்றோர், அமைதி எல்லாம் புரியும். ஒரு பார்வை:
‘... நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
நீல் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;...’
இழையில் எழுதியிருந்தேன்.
அவர் சொன்னது: எனக்கு இவருடன் பேசுவதில் தான் இணக்கம் இருந்தது. மிகவும் மனவலிமையுடைய போராளி அவர். அதனால், அவருக்கு சமாதானத்தின் அருமையும், பெருமையும் தெரியும். அவர் என் பேரக்குழந்தைக்குக் கொடுத்த பரிசிலை, ஆசையுடன் எடுத்துச் செல்கிறேன்.’
கோல்டா மீர் என்ற இஸ்ரேல் பிரதமர், இந்தியாவின் இந்திரா காந்தி, இங்கிலாந்தின் மார்கெரட் தாட்சர் மூவரும் ஆளுமை செலுத்துவதில் நிகரற்றவர்கள். இவர்களுக்கு இணையான ஆண் மேலாண்மை காணக்கிடைப்பது அரிது. இன்று திருமதி கோல்டா மீர் அவர்களின் ஜன்ம தினம். மே 2, 1896 அன்று பிறந்தவர், அவர்.
இன்னம்பூரான்
03/06. 04. 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment