இன்னம்பூரான்
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லையென்றால், பிரேமைக்குத் தளை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? இல்லை கனிவு கட்டற்ற அரவணைப்பு ஆகிவிடுமோ? விஷ்ணுவுக்கு சகஸ்ரநாமம் என்றால் பிரேமைக்கு லக்ஷார்ச்சனையே செய்து விடலாம். பிரேமை மனம் என்னும் சுரங்கத்தில் ஜனித்து, அலைந்து, திரிந்து, திக்குத்திசை தெரியாமல் தொலைந்து, மீண்டு/ மீட்கப்பட்டு, நிரந்தரமாக மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு சஞ்சீவி; சிரஞ்சீவி. அவள் ஒரு தொடர்கதை; அமரகாவியம்.
பெற்றெடுத்த அன்னை தான் பிரேமையின் ஊற்று, நீரோட்டம், பிரவாகம். ரத்த பாசமென்பது உள்ளம் உருகி, உடலும் சிந்தி, உருவும், உயிரும் அருளும் பாக்கியம் என்றால், அது அன்னையின் கொடையே. அவள் மறைந்த பின் ஆண்டாண்டு
தோறும் நினவு நாளை அனுசரிக்கும் போது, மனம் தத்தளிக்கிறது. உள்ளம் பதறுதடா! அவளை நினைக்காத க்ஷணமொன்று உண்டோ? உடன் பிறந்தோரை சஹோதரன், சஹோதரி என்கிறது சம்ஸ்கிருதம். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்று பொருள். அதனால் மட்டுமா சகோதர வாஞ்சை?
பொருள் என்றால் என்ன பொருள்! சொல்லின் புரிதலை நாடி, தேடுவதும் பொருள் தான்.
திரைகடலோடியும் தேடும் திரவியமும் பொருள் தான். திவாகரமும், நிகண்டும், அகராதியும் சொல்லும் பொருள் எல்லாவற்றிற்கும் மேலான பொருள் ஒன்று உண்டு.
பிரேமையினால் தளை கழண்டுபோக, சுகிர்த்து மகிழ்ந்த தலைவன் பரிசம் போட ‘பொருள்’ தேடி செல்ல விழைகிறான். ‘ஒரு பொருளை தேடும் நீ விலை மதியா பொருளையல்லவா தொலைத்து விடுவாய்.’ என்று நைச்சியமாக அவனை பயமுறுத்தி, அவனை தடுத்தாட்கொண்டு விடுகிறாள், தலைவியின் பாங்கி. அவளுக்கு அல்லவோ தெரியும், தலைவியின் பிரேமையின் அருமை. கூட்டுக்களவாணியாயிற்றே!
“கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ—” என்று ஒரு போடு போட்ட பாங்கி, ஒரு குண்டையும் வீசி அவனை கலங்கடித்தாள்.
“… விடமீன் போல் தொழுதேந்தும் வயங்கிய கற்பினாள்
தடமென் தோள் பிரியாமை பொருளாயன் அல்லதை…” என்று.
இன்றைய சினிமா தமிழில்:
“மிஸ்டர்! நீ எந்த ஊருக்குப் போவையோ? எந்த மீன் கிட்ட சிக்குவையோ? எம்.எஸ். நடிச்சாங்களே அந்த சகுந்தலை சினிமாவின் ஹீரோ (வில்லன்?) துஷ்யந்தன் மாதிரி ஹீரோயினை மறந்திடுவாயோ? யார் கண்டா? அவள் விரகதாபத்தில் துடித்து மடிந்து போனால், யாரடா பொறுப்பு? அவ தாங்கமாட்டாடா கண்ணு. உங்கப்புராணை! போகாதே! போகாதே! என் ஃப்ரெண்டின் ஃப்யூச்சர் கணவா!”
“கடன் இறந்து…அல்லதை…’ என்ற பிரேமபாணம் கலித்தொகையில் செலவு அழுங்குவித்தல் என்ற பகுதியில் இவ்வாறு வருகிறது:
மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?…
கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
தடமென்தோள் பிரியாமை பொருள்
(கலித்தொகை 2 : அடிகள் 12, 20, 21, 22)
செலவு என்றால் பயணம். அதை நடக்க விடாமல் செய்வதே அழுங்குவித்தல். பாங்கி உணர்த்தும் விலை மதியா, திரும்ப கிடைக்காத ’பொருள்’ தலவியின் இளமை. அது மட்டுமல்ல. அவளின் விரகதாபம் அவளை கொன்றுவிடுமோ என்று சொல்லி ‘மிரட்டுகிறாள்’. அவனும் செலவை தவிர்த்து விடுகிறான். ஒரு பிரமேயம் போதாதா, பிரேமைக்கு! பிரேமை இனிக்கும்; தகிக்கும்; இழுக்கும். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாத சமாச்சாரமா? என்று கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் வாஞ்சைக்குத் திரும்புகிறேன். ‘ஒரே வயிற்றில் பிறந்தோர்’ என்பது மட்டுமல்ல. ஒரு கூட்டில் வாழ்ந்த பார்ப்புகள் அல்லவா. அதனால் ஒரு பிரேமை. பல வருடங்களுக்கு முன் பிருதிவி ராஜ் நடித்த ‘படோசி’ (அண்டை வீட்டுக்காரன்) என்ற சினிமா பார்த்தது ஞாபகம் வருகிறது. கலோனிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பரஸ்பர பிரேமையை இழந்த ஹிந்து-முஸ்லீம் ‘படோசி’. எனவே பிரேமைக்கு பரந்த இயல்பும் உண்டு. அது தான் மனித நேயம். தற்கால அரசியல் வசனமல்ல.
இனி இறை மீது காதல், கனிவு, அன்பு, பிரேமை. ‘குசலம்’ படித்தவர்களில் பலர் ஒரு நுட்பம் பற்றி பேசவில்லை. திருஞானசம்பந்தர், தன்னை தேடி வந்த தகப்பனிடன் வினவியது: ‘…பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.’ குளக்கரையில் அழுது கொண்டு நின்ற திராவிட சிசுவுக்கு தங்கப்பாலாடையில் அடிசல் போட்டிய அம்பாள் நல்லாள். அது பொருத்தமே. கிருபாகரனோ அந்த தோணியப்பர். அவருடைய ‘குசலம்’ விஜாரிக்க வேண்டாமோ? திருஞானசம்பந்த்ரின் மோன நிலையில் சுவாமியும் பிரேமைக்குரிய உறவினன் தான். அதான் ‘நலம். நலம் அறிய அவா.’
அடுத்த கட்டம் மனதுக்குக் கஷ்டம், நம் போன்ற சராசரிகளுக்கு. தோணியப்பர் திவ்ய தம்பதிக்கு குழவியாக இருந்த போதே தெய்வீகசம்பந்தமாகிவிட்ட திருஞானசம்பந்தருக்கு 16 வயதில் இகலோக சம்பந்தம் பேசினார்கள். திருநல்லூர் நம்பியாண்டாரின் பெண்ணை இவருக்கு திருமணம் முடிக்க வந்த சுற்றத்தையும், மணமகளையும் கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்ததோ பெருமணம். எல்லாரும் கூண்டோடு கைலாசம்.
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. [520]
“இறைவனிடத்துக் காதல் கொண்டு, மனம் கசிந்து, கண்ணீர் நிறைத்து” அந்நிலையில் ஓதுகின்றவர்களை வீடு பேறுவறச்செலுத்துவது (யாதெனில்) நான்கு வேதங்களைக்காட்டிலும் மெய்பொருளாக உள்ளதும், இறைவனுடைய பெயராக உள்ளதுமாகிய ‘நமசிவாய’ என்று சொல்லப்படும் திருஐந்து எழுத்து.”
~ அ.ச.ஞானசம்பந்தன்
இப்போது சொல்லுங்கள், பிரேமையின் பிரமையை பற்றி.
பிரேமையுடன்,
இன்னம்பூரான்
25 01 2013
உசாத்துணை: அ.ச.ஞானசம்பந்தன் (2005) இன்னமுதம்: பக்கம் 26.
No comments:
Post a Comment