Monday, April 29, 2013

உன்மத்தம் :: 1


உன்மத்தம் :: 1


Sat, Mar 16, 2013 at 8:20 AM


உன்மத்தம் :: 1
  1. Thursday, March 14, 2013, 5:00
  1. 1 comment

இன்னம்பூரான்

‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’
‘பித்தா’ என்ற இந்த தெய்வம் தந்த ‘முதல்நற்றமிழ்’ சொல் என்னை எழுபது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் வித்யாசாலையில் காலை பிரார்த்தனை இவ்வாறு தொடங்கும்; உரக்கக் கோரஸாக, பல சுவரபேதங்களில் பாடுவோம்; பொருள் அறிந்ததில்லை. பாலு சாரிடம் பெருமானை ‘பித்தன்’ என்று விளிப்பது முறையோ என்று கேட்டேன். சொன்னது அப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தது; மறந்து விட்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கு சென்றபோது, தலைமை ஆசாரியர் ‘பழைய மாணவரா’ என்று கனிவுடன் வினவி, பிரார்த்தனைக்கு அழைத்துச்சென்றார். அதே கோரஸ். நானும் கலந்து கொண்டேன். ஏதோ ஒரு ஈரப்பசை கண்களில். அது நிற்க.
பெருமான் தனக்கு இட்டுக்கொண்ட விருது, இது. ஆலாலசுந்தரத்துக்கு மந்திரமாக உபதேசிக்கப்பட்டது. சுந்தரர் ஆட்கொள்ளப்பட்டது, திருவெண்ணைநல்லூர் பெருமானால். ‘தாட்பூட் தஞ்சாவூர்’ என்றெல்லாம் அதட்டிவிட்டு, சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி விட்ட மறையோன், திருவெண்ணைநல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார். பின்னர் தன் கோலம் காட்டி, தரிசனம். சொற்றமிழால் பாடுக என்று ஆணை. திகைத்து நின்ற மாஜி மாப்பிள்ளையிடம் பெருமான் ‘மணப்பந்தலில் என்னை பித்தனோ மறையோன்..’ என்றல்லவா நிந்தித்தாய். ‘பித்தா’ என்றே தொடங்கு என்றார். பதிகம், கோரஸ், மீள் கோரஸ், இன்றைய ‘உன்மத்தம்’ தொடர்… அகரவரிசை அன்பர்கள் முதல் திருமுறையிலேயே திருஞானசம்பந்தர் எருக்கத்தம் புலியூரில்,
‘விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ஆண்அலி ஆகும் பித்தா பிறை சூடி…’
என்று தோத்திரம் செய்ததை முன் வைப்பர்; எப்படியும் எல்லாரையையும் பைத்தியமாக அடிக்கும் பித்தத்தின் தலைக்காவேரி இறையருள் தான் என்பதையும் பார்ப்போம்.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. (6.25.7)
காதல் கொள்வதே பித்துப்பிடித்தாற்போலத்தான். பேரும், உருவும், ஊரும் அவளை மயக்கி, பெற்றோரை மறக்கச்செய்து, மரபு, வாழ்நெறி, அன்றாட நடவடிக்கை, தன்னிச்சை எல்லாம், தலைவனை நினைத்த மாத்திரம் காணாமல் போய்விடுகின்றன. ‘தேவாரம்’ என்ற இணையதளத்தில் கூறியப்படி,
‘… இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது… இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க… சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்…’
பிச்சி ஆனாளே, தலைமகள். அது காதலா? மோகமா? அல்லது பக்தியின் உன்மத்தமா? என்று நீங்களே தன்னுள்ளத்தைக் கேட்டு அறிந்து கொள்ளவும். பித்தனின்’ உன்மத்தத்தின் உத்தமத்தை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள் அரிது. உன்மத்தங்கள் தான் எத்தனை வகை? எத்தனை வண்ணம்? அது மனோபாவமா அல்லது மோனமா அல்லது வெறும் மோகமா? வெறும் மோகமென்று ஒன்று உண்டா என்ன? மஹாகவி பாரதியார்’…கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!…’ என்று மன நிறைவுடன் பாடியதில் என்ன குற்றம் கண்டீர், ஐயா? அல்லது கோதா பிராட்டியார் ஶ்ரீரங்கநாதனை மோஹித்ததில் உன்மத்தம் தலைக்கேறவில்லையா? தலபுராணம் என்று அதை ஒதுக்கவா பார்க்கிறீர்கள்? நம் ஶ்ரீரங்கபெளராணிகையை கேட்டால், அவர் செப்புவார்,
 ‘…ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். “என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?”
“சுவாமி, தங்கள் கருணையே கருணை!”
ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.
இப்படியும் ஒரு பிச்சியா!
தற்கால இலக்கியத்தில் தேடுவீர்களானால், இதை படியும்: ‘உமக்கு சிவகாமியின் சபதம் தெரியுமோ? ‘உன்மத்தத்தை’ ‘சித்தபிரமை’ என்கிறார், கல்கி. தன்னுடைய ‘சித்த பிரமை’ தெளிந்த பின், அதை ‘பக்தியின் முதிர்ச்சி’ என்கிறார், ஆயனர் வாயிலாக. கேளும்.
*
‘… ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!” என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்… கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள். சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்” என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று’.
*
மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக, வள்ளலார்,
‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
என்றார். ‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது.
அவன் தான் பிறை சூடிய பித்தன். தோடுடைய செவியன். ஆடிய பாதம். திருவாரூரில் அஜபா நடனம்; திருக்குவளையில் பிரம்மத் தாண்டவம்; நாகையில் பாராவாரதரங்க நடனம்; திருமறைக்காட்டில் ஹம்ச நடனம்; திருவாய்மூரில் கமல நடனம்; திருக்காறாயில் குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடிய காளி தாண்டவம்;
திருநள்ளாற்றில் உன்மத்த நடனம்.
உன்மத்தம் தலைக்கேற, ஏற, தொடர் நீளும் போல் இருக்கிறது. உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை மற்றும் பதித்து, கட்டுரை நீண்டுவிட்டதற்கு சால்ஜாப்புக்கூறி, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.
 ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 -(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
(தொடரும்)
pastedGraphic.pdf

உசாத்துணை:

பிரசுரம் & நன்றி: http://www.vallamai.com/?p=33338
காப்புரிமை: இன்னம்பூரான்


Geetha Sambasivam Sat, Mar 16, 2013 at 12:03 PM

இது ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டம் கொடுத்திருந்த நினைவு.   குறிப்பாப் பிச்சியைக் குறித்துச் சொன்ன நினைவு.

திவாஜி Sat, Mar 16, 2013 at 12:26 PM





2013/3/16 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
இது ஏற்கெனவே படிச்சுப் பின்னூட்டம் கொடுத்திருந்த நினைவு.   குறிப்பாப் பிச்சியைக் குறித்துச் சொன்ன நினைவு.
​deja vu!​

Swarna Lakshmi Sat, Mar 16, 2013 at 5:25 PM



அருமையான தொடர் இ சார், தொடருங்கள்!! 



Rathinam Chandramohan Sat, Mar 16, 2013 at 5:34 PM


Thiruchitrambalam.

Miga Arumai Ayya. Excellent
Chandramohan


shylaja Sun, Mar 17, 2013 at 4:56 AM

பாரதியின்  சின்னஞ்சிறு கிளியே  பாடலில் உன்மத்தம்  கண்டிருக்கிறேன் ..உங்கள்  இந்த இடுகை  அருமை  இ சார்..்  விரைவில் இன்னும் விவரமாக எழுத வருகிறேன்


ஷைலஜா


Tthamizth Tthenee Sun, Mar 17, 2013 at 9:27 AM



உம்மைப் படித்தாலே  உன்மத்தம் தலைக்கேறும் போல் இருக்கிறது
ரசிகப் பெருமக்கள்  அதிகமாகிக் கொண்டே போவதன் மர்மம்  இதுதானோ?
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Sun, Mar 17, 2013 at 11:33 AM


2013/3/17 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
உம்மைப் படித்தாலே  உன்மத்தம் தலைக்கேறும் போல் இருக்கிறது
~கூடு விட்டு கூடு பாயும் உன்மத்தம் என்றாலும், இங்கும் தேங்கும்; அங்கும் தங்கும். 

ரசிகப் பெருமக்கள்  அதிகமாகிக் கொண்டே போவதன் மர்மம்  இதுதானோ?
~ அப்டியா? ஆச்சரியமான தகவல். 
 அன்புடன்,
[Quoted text hidden]

Gopalan Venkataraman Sun, Mar 17, 2013 at 1:31 PM


அறிஞர்களின் "உன்மத்தம்" குறித்த கலந்துரையாடலின் இடையே அடியேன் புகுந்ததற்கு மன்னிப்பை வேண்டுகிறேன். இந்த "உன்மத்த" நிலை குறித்து பாரதி பாடியிருப்பது தவிர, அபிராமி பட்டர் அனுபவித்த நிலைமையை எடுத்துக் காட்டாகக் காட்டலாம். தஞ்சை மராத்திய மன்னன் ஆடி அமாவாசைக்காக பூம்புகார் சென்று கடலாடிவிட்டுத் திரும்புகையில் திருக்கடவூரில் அபிராமி சந்நிதிக்கு வருகிறான். அங்கு சுப்பிரமணிய பட்டர், அன்னையின் பேரருட் காட்சியில் மனம் ஈடுபட்டு "உன்மத்த" நிலையில் இருந்தார். பின்னர் மன்னன் இன்று என்ன திதி என்றதையும், அதற்கு உன்மத்த நிலை மாறாத நிலையில் பட்டர் இன்று பெளர்ணமி என்றதையும் அனைவரும் அறிவர். இத்தகைய நிலை சிலருக்குச் சில நேரங்களில் ஏற்படுவது உண்டு. Thanjai V.Gopalan (privarsh@gmail.com)

Innamburan S.Soundararajan Sun, Mar 17, 2013 at 2:22 PM
To: mintamil@googlegroups.com
அன்பின் தஞ்சை கோபாலன்,
உங்கள் வருகையினால், இழை மேன்மை அடைகிறது.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

shylajaSun, Mar 17, 2013 at 4:02 PM



கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்...
இ சார்!  திருவாசகம்  நினைவுக்கு வருகிறது.   மிக அருமையான இடுகை இது.முழுவதும் அப்போ  வாசிக்கமுடியவில்லை...  இப்போ  ரசித்து வாசித்தேன்...தொடரவும்


sk natarajan Mon, Mar 18, 2013 at 1:28 AM

அருமை
தொடருங்கள் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
________________________________________________
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/0/02/உன்மத்தம்.jpg
இன்னம்பூரான்
29 04 2013

No comments:

Post a Comment