20 01 2010
“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2
இந்த ஹிந்தி கார்யாலாவின் முக்கிய சலுகை: ஃபேஸ்புக் போன்ற அரசு சமூக தொடர்புகள். சென்னையில் உள்ள ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலிருந்து ஒரு தொடர்பு அதிகாரி என்று ஒருவருக்கு அதிகப்படி பொறுப்பு. அவர்கள் எல்லாருக்கும் தலை மாந்தர் இந்த ஆஃபீஸர் இன் ஓவரால் சார்ஜ். மாதம் ஒரு முறை எல்லாரும் சந்தித்து, ஹிந்தி பரப்ப வேண்டிய தலை போகும் பணியை சிறப்புற செய்வது பற்றி விவாதிக்கவேண்டும். முந்திரிப்பருப்பு, மைஸூர்பாக், பக்கோடா, டீ/காஃபி என்னுடைய உபயம், அரசு செலவில். ஏன் வரமாட்டார்கள்?
ஆக மொத்தம், தெரிந்தவர்கள் பல துறைகளில் இருப்பதாலும், தலை மாந்தன் என்ற சிறப்பு துணை போனதாலும், புதிய உறவுகள் முளைத்தன. கற்றோனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்றால், தொடர்பு உள்ளவனுக்கு கேட்டதெல்லாம் நடக்கும் என்பது உறுதியாச்சு. அடக்கி வாசித்ததாலும், ஏற்புடைய வகையில் பரஸ்பர உதவி என்று இயங்கியதால், அன்றைய கால கட்டத்தில், அனேகருக்கு உற்ற நண்பனாகிவிட்டேன் என்றால் மிகையாகாது. அந்த கால கட்டத்தில், அங்கும் இங்கும் வேண்டப்பட்ட ஆள் இல்லை யென்றால், டெலிஃபோன் கிடைக்காது: ரயில்வே ரெசெர்வஷன் செய்யமுடியாது; ஸ்கூல் அட்மிஷன் கஷ்டம். க்வார்ட்டார்ஸ் கிடைக்காது; தகுந்த டாக்டர் சிக்க மாட்டார்; எண்ணில் அடங்கா, அன்றாட இன்னல்கள், பின்னல்கள், சிக்கல்கள். ஏ.ஜீ.யே, அந்த பீ.ஆர்.ஓ வை (Public Relation Officer) கூப்பிடு என்ற அளவுக்கு, செல்வாக்கு. இது பொறுக்குமோ, தெய்வத்திற்க்கு?
என்னை சித்தரஞ்சன் ரயில்வே எஞ்சின் தொழிற்சாலைக்கு டிபுடி சீஃப் ஆடிட்டராக மாற்றி விட்டார்கள். டைம் லைன் 1960. சில மாதங்களே தணிக்கை செய்ய கற்றுக்கொள்வதற்குள், ஹிந்தி சீட்டிங்கை, டீச்சிங்கா ரசவாதம் செய்வதற்குள், பொதுநல அதிகாரநுட்பங்கள் கற்றுக்கொள்வதற்குள், ஜ்யோதி பாஸு அவர்களின் பிரதேசத்துக்குப் பக்கம், பயணம், புது அனுபவங்களை நோக்கி. கிட்டத்தட்ட, இந்த சமயத்தில் தான் ஒரு ஞானஸ்நானம் எதிர்பாராத விதமாக, நடந்து முடிந்தது..
யானும், காசிக்குப் போன பார்ப்பனன் தனக்கு பிடிக்காத கத்திரிக்காயை தியாகம் செய்த மாதிரி, ஒரு மாதிரியான! 'துறவறம்' பூண்டேன். சமயோசிதமாக, இன்று வரை யாரிடமும் சொன்னதும் இல்லை.
அது சரி, நான் சஸ்பென்ஸ் வைச்சா, ஷைலஜாக்கூட, பெண்ணேஸ்வரன் கூட, 'இன்னா சமாச்சாரம்?' ந்னு கேக்கலையென்றால், இங்கு பனி உருகறமாதிரி, சுரத்து இறங்கிவிடுகிறது. சான்றாக, 'சிம்லா போன கதை' என்றேன். கமுக்கம். ஸீல் போட்ட டெண்டரை பிரிப்பது என்றேன். கம். இந்த துறவறம் பற்றி கேட்காவிட்டால், மண்டையே வெடித்து விடும் போல தோற்றம். முனைவர் திருவேங்கடமணி கூட காஷ்ட மெளனம்! ஒய்?
இன்னம்பூரான்
|
No comments:
Post a Comment