அம்பா! நீ இரங்கலாகாதா?
*
1941: ஒரு நாள் அதிகாலை. கும்பகோணம் ஐயங்கார் தெரு. மேற்கு மூலையில் சம்பத்து மாமாவோட திண்ணைப்பள்ளி. கிழக்கு மூலையில் கறுப்பு ராமாஞ்சு வீடு, அண்ணா பட்டு ஸ்வாமிகளுடன். அவர் தான் பிரபல வைணவ சான்றோன் வைகுண்டவாசி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். என் அப்பாவுக்கு மாப்பிள்ளைத்தோழன், அவர் கல்யாணத்தின்போது. எங்கள் குடும்பத்திற்கு ஆச்சார்யன். அருகாமையில் இருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி பகவத்பாதாள் ‘பெரியவா‘ சந்திரசேகரசரஸ்வதி மகானின் தூதுவர், அம்பேத்காரிடம். தெருவின் மத்யபாகத்தில் தான் சிவப்பு ராமாஞ்சு வீடு. அவர் தான் வைணவ சான்றோன் வைகுண்டவாசி ஸுதர்ஸனம் வாஜபேயம் கோடிகன்னிகாதானம் ராமானுஜ தாத்தாச்சாரியார். சாக்ஷாத் என் வேத அத்தை ஆத்துக்காரர். நாலு வேதம் அத்யனனம் பண்ணவர். கரதலையாக ஒப்பிப்பார், மனசு இருந்தால். எனக்கு ‘பழேத்து நாமத்தின்‘ அருமையை உணர்த்தியவர். சில காலம் முன்பு அவரது புத்திரர்கள் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடினார்கள். அவர் தான் இந்த பாமர கீர்த்தியின் கதாநாயகனின் தோப்பனார். இரண்டு ராமாஞ்சுவும் காஞ்சி காமகோடி மடத்துக்கு வாடிக்கையாக போய் வருவார்கள்.
நம் கதாநாயகன், குளிச்சி,கிளிச்சுப்பிட்டு, அழகிய திருநாமத்துடன், சந்தியாவந்தனம் எல்லாம் செய்து விட்டு, கதிரவன் ‘இளநீர்’ கதிர் விடும்போதே, ஓடி விடுவான். சம்பத்து மாமாவோட திண்ணைப்பள்ளிக்கு, ரகுவீரகத்யம் கற்றுக்கொள்ள. ஆத்துக்கு வந்து அப்பாவிடம் சந்தஸுடன் ஒப்பிக்கவேண்டும். மயில் சிலிர்த்துக்கொள்ளுமே, அந்த மாதிரி பீற்றிக்கொள்வான், மற்றவர்கள் கேட்டால். எனக்கு பொறாமையாக இருக்கும். எனக்குத்தான் ஸத்ருக்ன கத்யம் கூட தெரியாதே. ஒரு நாள் நானும் திண்ணைப்பள்ளிக்குப் போனேன், இவன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று. சம்பத்து மாமா ‘நீ வரக்கூடாது. உங்கப்பன் ஏன் உனக்கு பூணல் போடவில்லை’ என்று கேட்க, நான் ‘நீங்க தான் போட்டுவிடுங்கோளேன்’ என்று சொல்லப்போய், சிவப்பு ராமாஞ்சுக்கு ரொம்ப திருப்தி. ஆனால், என்னை கோவிச்சிண்டார், அத்தை கிளுகிளுக்க. அத்தைக்கு எல்லாமே கேலி. அதான் பிள்ளையாண்டானுக்கும் வந்துடுத்து. அக்கா ராஜம்மா கல்யாணத்தின் போது தான் இவனுக்கு பூணுல் போட்டார்கள். மறுநாள் காலையில் அத்திம்பேர் அவனை அக்னிசந்தானம் பண்ணணும் வாடான்னு கூப்டறார். அவன் வாயை பொத்திண்டு அழறான்! பூணலை காணும்! என் தாத்தா இன்னம்பூர் பட்டாமணியம் ராஜம் அலையஸ் ஸெளந்தரராஜ ஐயங்கார் சமயசஞ்சீவி. டக் என்று தன் பூணலை கழற்றி அவனுக்கு அணிவித்து பேரனை உய்வித்தார். தாத்தாவைப்போல பேரன்!
*
1945: நன்னா பாடுவான், கீ கொடுத்தமாதிரி. கொஞ்சம் ஙொண ஙொண என்று மூக்கால் பாடினாலும். ஆலாபனையெல்லாம் பிரமாதம். பிடித்த கீர்த்தனை: அம்பா! நீ இரங்கலாகாதா? இப்போ எனக்கு பொறாமை ஜாஸ்தி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் எட்டாம் வாய்பாட்டை முணமுணப்பது போல் ‘பனை மரமே! பனை மரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?’ என்ற ஒப்புவித்தல். அவன் பாடினால் ரசிப்பார்கள். நான் பாடினால் சிரிப்பார்கள். அப்ப வந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இன்னும் போகவில்லை. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெஸ்ஸுக்கு இன்னொரு பிரமேயம். எனக்கு இரண்டுங்கெட்டான் வயசு. அவனுக்கு அரும்பு மீசை பருவம். ரகசியமாக வசீகர கலை என்ற புத்தகம் படிப்பான். கொஞ்சம் சொல்லுவான். ரொம்ப மறைச்சுடுவான். எப்போ பார்த்தாலும் பொண்டுகளை பற்றித்தான் பேச்சு. பொறாமையாக இருக்கும்.
*
1951: நான் தர்மமிகு சென்னையில் பட்டணப்பிரவேசம் செய்த வருடம். அந்த அரிய நிகழ்வுக்கு அவன் தான் சர்வாதிகாரி. ஒரு தடவை மின் தமிழில் எழுதியிருந்தேன். இப்போ அதை காணோம். ஒரு டப்பா வண்டியை இரவல் வாங்கிக்கொண்டு, எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்தான். என்னை நிழல் மனிதனாக வைத்துக்கொண்டு, ஸ்டோன் நைல் படவாகினியை அடக்கி வைத்தான். நாளாவட்டத்தில் சென்னையின் எல்லா பரிமாணங்களையும் எனக்கு புரியவைத்த புண்ணியம் அவனை சார்ந்தது. அதான், இப்போ தகரியமா லண்டன் உலா வர முடிகிறது. ஒரு மூன்று வருடங்களில், ‘செல்ஃப் இல்யூமினேஷன்’ (சுயம்பிரகாசம் மாமா நடத்தியது.) தட்டச்சு நிலையத்தில், இவன் தயவால் பரிச்சியமான பெண்கள் எல்லாருடைய பெயர்களும், அந்தக்காலத்து முகாரவிந்தங்களும், பசுமையாக நினைவில் உள்ளன. இதையெல்லாம் கண்டு வியந்த என் தந்தை அவனுக்கு ‘ஜகதலபிரதாபன்’ என்று நாமகரணம் செய்தார்.
*
1955: என் திருமணத்தின் போது, இவன் அடித்த லூட்டியை பார்த்த பெண்ணை பெற்ற ஐயங்கார் மாமிகள் எல்லாரும் இவனை வளைத்துப்போட பார்த்தார்கள்; பெண்களும் தான். பிற்காலம் கெலித்தது பட்டு. இவன் கல்யாணம் பிரமாதம். சமையலுக்கு வந்தவர்கள் சாமான்யமாக கிடைக்காத அஸ்கா சர்க்கரையை அமுக்க, அதை எஜமானி அம்மாள் பிடிக்க, அவர்கள் ஸ்ட்றைக் செய்ய, வீட்டு பெண்மணிகளே அருமையாக சமைத்து விருந்தோம்பினார்கள். கோமளவல்லி & ஶ்ரீநிவாஸன் வயலின் கச்சேரி.
*
1986: நான் அஹமதாபாத் நகருக்கு மாற்றலாகி வந்த போது, அவன் அங்கிருந்தான். நளபாகன். அவன் எங்களுக்கு நல்வரவு கூறி, ஒரு நாள் செய்து அளித்த அக்கார வடிசல் இன்றும் இனிக்கிறது. என் பெண் சொல்றமாதிரி,’ நெய் பெய்து முழங்கை வழி வார...’
*
1994: அவனுடைய பையர் ஶ்ரீனிவாஸனுக்கும் ஶ்ரீமதிக்கும் விவாகம் 20 05 1994. அந்த நன்னாளன்று அவன் கொடுத்த வடூவூர் ராமனின் உத்ஸவ கோல சித்திரம் இன்று போர்ட்ஸ்மத் பூஜை அறையில்.
*
2009: அவனுடைய சதாபிஷேகத்துக்குப் போயிருந்தேன். அவனுக்கு ஒரே குஷி. நான் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். ‘வாயை மூடு. கொன்னுப்பிடுவேன்’ என்றான். ஏனென்றால், ஒத்தரை ஒத்தர் ப்ளாக்மைல் செய்வது தொன்று தொட்டு வழக்கம். அத்தனை பயம், அவனுக்கு.
*
1933லிருந்து நாங்கள் சேக்காளிகள். உறவை நாங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எங்கள் இரு குடும்பங்களும் நகமும், சதையுமாக இருந்தன. உற்ற துணை என்றால், அவனுக்கு நான்; எனக்கு அவன். எத்தனை சுகதுக்கங்களை பகிர்ந்து ஆறுதல் கண்டிருக்கிறோம். ஓடோடி வந்து உதவியிருக்கிறோம். பிரச்னை என்றால் ஆலோசனைக்கு அவன் எனக்கு;நான் அவனுக்கு. இத்தனைக்கும் எங்கள் வாழ்வியல் அலை வரிசைகள் வேறு வேறு. மனோபாவமோ ஒன்று.
***
2012: இன்று கிடைத்த செய்தி. 25 09 2012 அன்று கண்ணன் என்ற ஸுதர்ஸனம் வாஜபேயம் கோடிகன்னிகாதானம் ரங்காச்சாரியார் ஆச்சார்யன் திருவடிகளை அடைந்தார். சாதம் அளிஞ்சு போனமாதிரி, மனசு குழம்பிக்கிடக்கிறது. வாழ்க்கையின் பல தளங்களை, இன்பமும், துன்பமுமாக, சுகமும், துக்கமுமாக அனுபவித்து, நீண்ட நாள் வாழ்ந்து மூப்பு அடைந்த பின் தான் அத்தான் கண்ணன் மறைந்தான். ஆனாலும் என் துக்கம் தாங்கொண்ணா துக்கம் தான். அவனுடைய குடும்பத்திடம் உபசாரம் கேட்பதை விட வேறு ஒன்றும் வெளிப்படையாக செய்ய இயலவில்லை.
அவனுடைய ஆத்மா சாந்தியடைக என்று மனதார வேண்டிக்கொண்டாலும், அது சம்பிரதாயமாக படுகிறது.
இன்னம்பூரான்
27 09 2012
பி.கு. இது முழுதும் நிஜம். கற்பனை கிஞ்சித்தும் இல்லை.
No comments:
Post a Comment