அன்றொரு நாள்
இன்று மஹாத்மா காந்தியின் ஜன்மதினம். உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். இந்த இடுகையை பற்றி சிந்தனை எழுந்தபோது, தொலைக்காட்சிகள், அயோத்யை பிரச்னை, கோர்ட்டார் தீர்வு, நிலவ வேண்டிய சாந்தி என அலசிக்கொண்டிருந்தன, ஸெப்டம்பர் 30, 2010 அன்றைய சாயுங்காலையில். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். அறிகுறிகள் நன்கு அமைந்துள்ளன. கடந்த 36 மணி நேரத்தில், உலகளவில், 2073 கட்டுரைகள் இந்தியாவில் சாந்தி நிலவுவதை, மக்களின் சாதனையாக, புகழ்ந்தன.
ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு.
அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி. நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ?
காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து அறுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர். சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் - ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.
சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்லெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள். கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
நண்பர்காள்! இது சென்னை. வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.க. அவர்களின் ‘தேசபக்தனின்’ சாது அச்சுக்கூடம்.) தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெருங்கூட்டம், அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்கிறது. மாபெரும் தொழிளாலர் படை ஒன்று, பல் மைல்கற்களை கடந்து, பேரலையாகவே வந்தடைந்தது. தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.க. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார். அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இது நான் கண்டுகொண்ட அனுபவம்.
படிச்சாப்போல இருக்கே என்று சிலர் சொல்றது காதில் விழறது! அதுக்காக விட்றதாவது? இது பற்றி நான் சொன்னதை ஸுபாஷிணி ஒலிபதிவு செய்த பிறகு தானே, மின் தமிழுக்கே வந்தேன்! இண்டிக் ரூட்லெ வேற போட்றுக்கேன். ஸோ வாட்? பேராசிரியர் நாகராஜன், பவள சங்கரி, சந்தானம், முனைவர் ராஜம் அவர்கள் எல்லாம் அப்றம் தானே வந்தாஹ. படிக்கட்டுமே, பிடிச்சா.
இந்த கூட்டம், களிறு போல், கடற்க்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும் அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். திலகர் திடம். புனித பூமி. தற்காலம் 'அழகு' படுத்தப்பட்டு உரம் இழந்தது. தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.க.வை கைது செய்வாஹ என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது, பஞ்சாப்பில், ஒரே வாரத்தில். ஏப்ரல் 13, 1919 ஜாலியன்வாலா படுகொலை! இந்த ஒரு வாரத்தில், இந்தியாவின் வரலாறு எப்படி மாறிவிட்டது பாருங்கள்.
மஹாத்மா காந்தியை நினையுங்கள். இன்று நீங்களும் நானும் தின்னும், '...மக்கள் அத்தனைபேரு நிகராம்...' என்னும் வெற்றிலை,'...அம்மை உயிர் என்னும் முலையினில் உணர்வு எனும் பால் வண்னமுற வைத்தெனக்கே...' எனப்படும் உண்ணும் சோறும், '...உங்கள் அரசு ஒருவன் ஆள, நீர் ஓடிப் போந்து இங்கண் இறைதல் இழுக்கன்றோ...' என பருகும் நீரும், அண்ணல் அளித்த பிச்சை. எல்லாரிடம் போய் சொல்லுங்கள். குழவிக்கு, அன்பு எனும் தேனிழைத்தே புகட்டுங்கள்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
02 10 2010
No comments:
Post a Comment