அபூர்வ சகோதர்கள்
நகமும் சதையும் போல இணை பிரியாத தோழர்கள், அவர்களிருவரும். லாரா சொல்கிற மாதிரி,
‘அவர்களின் அன்யோன்யம் மற்றவர்களுக்கு முழுதும் புரிய வாய்ப்பில்லை. இவனுக்கு அவன், அவனுக்கு இவன் என்று தான் இவர்களின் படைப்பின் சிறப்பு.’ ஜேன் டஃப்ஃபி சொல்கிறார்,
’இருவரும் சேக்காளிகள். இவனில்லாமல் அவன் வேலை ஆகாது. அவனில்லாமல் இவன் வேலை ஆகாது.’ மாத்யூ ஜோன்ஸ், ‘தியோ லியாமுடன் இணைந்ததே தெய்வச்செயல். லியாம் இன்று நடப்பதைக் கண்டு மிகவும் உவகை கொள்வான். எதையும் செம்மையாக செய்யவேண்டும் என்று எப்போதும் விரும்பும் அவனுக்கும், தியோவுக்கும், இந்த கெளரதை ஏற்புடையதே.’ என்று இருவரையும் புகழ்ந்து பேசினார்.
ஆம். லியாம் டஸ்கரும் தியோவும் அபூர்வ சகோதர்கள் தான். மார்ச் 1, 2011 ஒரு துக்க நாள். என்ன கொடுமையடா? மறைந்திருந்து சுட்டுத்தள்ளுவது. நிழல் யுத்தம். பகைவன் யார் என்பது கூட குழப்பம். ஆஃப்கனிஸ்தானில், கண் முன் தோன்றாத ஒரு கயவாளியால், லான்ஸ் கார்ப்பொரல் லியான் டஸ்கர் சுட்டுக்கொல்லப்பட்டான். சில மணி நேரத்துக்குள், காக்காய் வலிப்புப் போன்ற இனம் தெரியாத கடுமையான வலியினால் துடித்து, துடித்து, தியோ இறந்து விட்டான்.
டஸ்கர்-தியோ டீம் இருவருடங்களாக ஆஃப்கனிஸ்தானில் ஒளித்து வைத்த வெடிகள்,வழியில் புதைத்து வைத்த வெடிகள், குண்டு தயாரிக்கும் இடங்கள் ஆகியவற்றை தேடி கண்டுபிடித்து ஒழிக்கும் அரும்பணியில் ஈடுபட்டிருந்தனர். தியோவின் அசாத்திய திறனால் 14 தடவை கணக்கற்ற படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதை விட பெரிய சாதனை அங்கு நிகழ்ந்ததில்லை. இன்று லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் தியோ கெளரவிக்கப்பட்டான். அமரனாகி விட்ட தியோவுக்கு விக்டோரியா க்ராஸ் என்ற மெடலுக்கு சமானம் எனப்படும் PDSA Dickin Medal வழங்கப்பட்டது. அவன் தரப்பில் பெற்றுக்கொண்டவள் க்ரேஸ் என்ற ராணுவ வீராங்கனையாகிய நாயும், அவளது இணை பிரியா தோழன் மாத்யூ ஜோன்ஸும். 1943 லிருந்து வழங்கப்படும் இந்த மெடல் பெறும் 2010லிருந்து 2012 வரை யாருக்கும் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மையத்தின் தலைவரும், ராணுவத்துறை அதிகாரியும், இது தங்களுக்குத் தான் கெளரவம் என்று சொல்லிக்கொண்டனர்.
ஆம். தியோ ஸ்ப்ரிங்கர் ஸ்பேனியல் இனத்தை சார்ந்த ராணுவ வீரனாகிய நாய். இது வரை இந்த மெடல் பெற்றவர்கள்: 28 நாய்கள், 32 புறாக்கள், மூன்று குதிரைகள் & ஒரு பூனை. மனித நேயமிருக்கிறதோ இல்லையோ, மிருகங்களும், பறவைகளும் மனிதநேயர்கள். அவர்கள் எல்லாரையும் பற்றியும், மற்றும் பல விலங்கினங்களின் மேன்மையை பற்ரியும் எழுத ஆவல். பார்க்கலாம்.
இன்னம்பூரான்
25 10 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment