7/21/2009 5:29 PM
நூறு வருஷங்களுக்கு முன்னால்- 3
என் அத்தை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRJvbZd5-Kwuqt0lOjvLHysO5JDSpu66iRIm-UdSNQI4WzPqmdQTQywl3z-FayXUg_M0DWyHujF7-klGhddii_FWgTPOSxZnQdAT3VgfG411YZDBZUfV8Ko1R5Mt54HZAWZCQVHt5cVpk/s1600/Grand+Tales.jpg
பின்னோக்கி பயணிக்கும்போது, வருடங்களை துல்லியமாக நிறுவவேண்டுமா, என்ன? நினைவலைகள் கடந்த/நிகழ்/வருங்காலத்துக்கு அப்பாற்பட்டது. அதன் காலத்தின் கண்ணாடிக்கு உயிரோட்டம் உண்டு. அது அலை பாய்ந்து இங்குமிங்குமாக, இப்போதும் அப்போதுமாக, அப்படியும் இப்பிடியுமாகத் தான் திரியும். நாம் என்னவோ வரலாற்று திறனாய்வில் இறங்கவில்லை. மனம் போனபடி போக விட்டு விடுங்கள். உங்களுக்கு புண்ணியம் உண்டு.
ஒரு கீர்த்திமான், சென்னையில் இருந்தார். பிரபலமான வக்கீல்; நீதியரசர். வள்ளல். இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு. பல மொழிகள் அவருக்கு சரளம். தமிழின் மீது காதல் என்றே சொல்லலாம். எக்காலமும், அவரை சுற்றி ஒரு குழாம், ஏன், குழாங்களே இருக்கும். கட்சிக்காரர்கள், சக வக்கீல்கள், புலவர்கள், பண்டிதர்கள், வேதம் ஓதுபவர்கள், நாலாயிர பிரபந்தங்களை, சாங்கோபாங்கமாக இசையுடன் பாடும் கோஷ்டி, சைவத்திருமுறைகளை ஓதுவார்கள் இத்யாதி. இத்தனைக்கும் நடுவில், அவரோடு நிழல் மாதிரி தொடர்ந்தவர், ஒரு தமிழ்ப்புலவர். இருவரின் இணைப்பிரியா உறவு விநோதமனாது என்று கூட சொல்லலாம். பொழுது விடிந்தால், இரவு படுக்கும் வரை வக்கீலுக்கு பல ஜோலிகள். புலவருக்கோ இலக்கியம் மற்றுமே குறி. சாப்பிடுவதும் ஒன்றாக. கோர்ட்டுக்கு போகும் போது, இரண்டாமவர் வழித்துணை; வெளியூர் பயணம் என்றால் கேட்கவேண்டாம். இருவரும் அயராமல் பேசிக்கொண்டே இருப்பார்கள், கம்பராமாயணத்திலிருந்து, கலம்பகம் வரை, சிலப்பதிகாரத்திலிருந்து சிலேடைகள் வரை; அகநானூற்றுலிருந்து அம்மானை வரை. வக்கீலுக்கு இந்த சம்பாஷனைகள் டானிக் மாதிரி.
இப்பிடியிருக்கும் போது, ஒரு நாள், வக்கீலின் அத்தை போய்விட்டாள், மேலுலகத்திற்கு. மூதாட்டி வயதானவள்; பிராமண வீடுகளில், ‘கல்யாணச்சாவு’ என்பார்கள். அபரக்கிரியைகளெல்லாம், முறைப்படி, கொஞ்சம் தூக்கலாகவே, நடந்தன. வீடு பூரா, உற்றார், உறவினர்கள், சுற்றத்தார்கள் எல்லாரும், விதரணையாக பதிமூன்று நாட்களும் சாப்பிட்டார்கள். குழாங்கள் கூட ‘டேரா’ போட்டன. வைஷ்ணவாளா! சுபஸ்வீகாரத்தன்று பாசுரங்கள் ஒலித்தவண்ணம் இருந்தன. தற்காலம், ‘சுபம்’ என்று சுருக்கமாக சொல்லி, ‘சட்’ என்று முடித்துவிடுகிறார்கள். ஆஃபீஸுக்கு போகவேண்டும் அல்லவா! இந்த நிகழ்வில் ஒரு நெகிழ்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘the mourning period is over’. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமல்லவா! வக்கீலுக்கு என்னமோ உள்ளூர தாங்கொண்ணாத்துயரம். வளர்த்து ஆளாக்கியவள் அல்லவா! அவர் காட்டிக்கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு, ‘இது தாண்டா வாழ்க்கை’ என்ற சமாதானம். அவரைப் பார்க்கும்போதெல்லாம் ‘சூ’ கொட்டுவதுடன் சரி. நாலாயிர திவ்ய பிரபந்தங்களை கோஷ்டி தக்க இசையுடன் பாடிய பிறகு, கவிகள் தாங்கள் எழுதி வந்த வடமொழியில் எழுதி வந்திருந்த ச்ரமஸ்லோகங்களை வாசித்தார்கள். அலங்காரங்கள், தண்டி தோற்றார் போங்கள்; அப்பிடி மிகை, தொகை எல்லாம். கேட்க நன்றாக இருந்தன. பொருளும், கருத்தும் ஆழம். உணர்ச்சியென்னமோ ஆப்ஸெண்ட். இணைபிரியா நண்பர், இறுதியில் வந்து எளிய தமிழில் ‘என் அத்தை’ என்று ஒரு கவிதை பாடினார். பீடிகையெல்லாம் சரி. ஒரு சான்றோரின் வாக்கைப் பார்ப்போம். அக்டோபர் 1937ல் எழுதப்பட்டது.
என் அத்தை
“பித்தை1 தனைக்கோதிப்
பின்னிப் பெருமணிப்பூ
கொத்தை முடித்துக்
குலவத்திலகம் இட்டு
தந்தை மொழிபயிற்றித்
தாலாட்டிச் சீராட்டி
அத்தை தனைப்போல
ஆதரிப்பார் ஆரேயோ! 1
முத்தைப் பழித்தொளிரும்
மூரல்2 முதிரை3வகை
மத்தைக் கொடுகடைய
வந்த நறுவெண்ணைய்
சத்தைத் தரும் நெய்
தயிர்பால் இவற்றுடனே
அத்தை தனைப்போல்
அமுதளிப்பார் ஆரேயோ! 2
முத்தை மணியை
முழுக்கனகச் சங்கிலியின்
கொத்தை அணிந்து
குழை அணிந்து பட்டுத்திப்
புத்தைத்4 தடுக்கும்
புதல்வன்இவன் என்றெண்ணி
அத்தை தனைப்போல்
அலங்கரிப்பார் ஆரையோ! 3
“ஆதரித்தாள், அமுதளித்தாள், அலங்கரித்தாள். எப்படிப்புத்திமதி கூறினாள் என்று பார்ப்போம்.”
இத்தைச் செய்யாதே
இதனை இயம்பாதே
சொத்தைப் பரிபாலி
சோம்பித் திரியாதே
வித்தை விரும்பென்று
நாளும் விதம்விதமாய்
அத்தை தனைப்போல்
அறிவுறுப்பார் ஆரேயோ! 4
“ஆசீர்வதிக்கும்போது ஏற்படுகிற ஆத்திரம் தான் என்ன?”
வித்தை தலைஎடுக்க
வேண்டாதார் கண் முன்னே
மெத்தைப் பெரு வீடு
கட்டி விபவமுடன்
சொத்தைப் பெருக்கிச்
சுகமான வாழ்வைஎன
அத்தை தனைப்போல
ஆசிசொல்வார் ஆரேயோ! 5
வித்தை அளித்து
விபவம்மிக உண்டாக்கி
தத்தை மொழியாள்
தனிமணமும் செய்வித்து
“இந்த இடத்தில் ஆர்வம் துள்ளிக் குதித்துப் பொங்கி வருகிற அதிசயத்தைப் பார்க்கவேண்டும்.”
எத்தைத் தருவ (து)
எனஇன்றி, எல்லாமும்
அத்தை தனைப்போல்
அருள்செய்வார் ஆரேயோ! 6
“அடுத்த கவிதையில்...எதுகை மாறுகிறது. மாறுகிறதனால் உண்டான பயனும் தெரிய வரும்.”
“என்னத்தை கண்டாய்
இளம்பிள்ளை நீயறியாய்
சொன்னத்தைக் கேளாய்!
“இந்த கோபமெல்லாம் எப்படி இளகி விடுகிறது, அடுத்து வரும்வார்த்தையில்!”
துரையே” எனக்கொஞ்சிக்
கன்னத்தை முத்தம் இட்டு
கட்டி அணைத் (து) எனக்கு
என்னத்தை போல
இதம் சொல்வார் ஆரேயோ! 7
“இந்த கவி கடாக்ஷத்தினால் வந்தது. புலவருக்குச் சம்பந்தம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். இனி கடைசிக் கவியில், உற்றாரை எல்லாம் விலக்கி விட்டு இதயத்தில் தனியிடம் அத்தைக்கு அமைக்கிற அழகு தனியான அழகு.”
“முத்தைப் பழிக்கும்
முளைமுறுவல்க் காதலியும்
பித்தைத் தரும்செல்வப்
பிள்ளை களும் பின்னவனும்
தந்தைக்(கு) இணையாகத்
தங்கைகள் தாம் இருக்க,
அத்தை தனைப்போல்
அரியவர்தாம் ஆரேயோ!” 8
----------
1. தலைமுடி. 2. அன்னம். 3. பருப்பு. 4. புத்திரன் இல்லாதவர் போகும் நரகம். 5.பல். 6. மயக்கத்தை.
-----------
“இந்த பாடல்களைக் கேட்டால் யாருக்குத்தன் மனம் கலங்காது, கண் கலங்காது? அத்தையின் மனதில் தோன்றிய ஆசைகளையும், கிளர்ச்சிகளையும், மலையிலிருந்து விழும் அருவிபோல் எவ்வளவு அழகாகத் துள்ளி துள்ளி இறங்க செய்கிறார் புலவர். ஸ்ரீமான் ஐயங்காரின் இதயத்துக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து விடுகிறார். பாடல்களில் உள்ள எதுகைகள் எல்லாம் ‘அத்தை! அத்தை! என் அத்தை! என்று ஏங்குகின்றன. கதறுகின்றன. நம்முடைய இதயங்கள் போலவே தமிழ்ச்சொற்களும் அத்தையை நோக்கி செல்கின்றன. ஆயிரக்கணக்கான வருஷங்களாக பழுத்தது தமிழ் என்பதைச் சுவைத்தே உணர்ந்து விடுகிறோம்...என்ன எளிமை, என்ன இன்னிசை, என்ன ஆர்வம்! இம்மூன்றும் சேர்ந்தால் தானே கவி...”
“கிரியைகள் முடிவாகும் பதின்மூன்றாம் நாள் சாயங்காலம் வைதிகமுறைப்படி பிரபந்த பாடல்கள் பாடினார்கள். பிறகு அங்கு வந்த சம்ஸ்கிருத பண்டிதர்கள் தாம் பாடியிருந்த சரமசுலோகங்களை வாசித்தார்கள். அவை எல்லாம் முடிந்த பிறகு, பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார் சபைக்கு வந்து, தம் பாடி வந்த ‘என் அத்தை’ என்ற தமிழ் பாடல்களை பாடினார்.அவ்வளவு தான். எல்லோருக்கும், உட்காந்திருந்தவர்,நின்றவர், ஆண் பெண் எல்லோருக்குமே கண்ணிலிருந்து கண்ணீர் துளிக்க ஆரம்பித்துவிட்டது. அத்தையம்மாள் இறந்து போன அந்தத் தருணத்தில் கண்ணீர் வராத எங்களுக்குப் பதிமூன்றாம் நாள் கழிந்த பிறகு மனங் கலங்கிக் கண்ணீர் பெருகிவிட்டது.
அத்தை முறை கொண்டாடதவர்களே கண்ணீர் விட்டார்கள் என்றால், அத்தை கொண்டாடும் உரிமையுடைய எங்கள் பாடு இன்னதென்று சொல்லவேண்டியதில்லைதானே!”... பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியாருக்குத் தமிழ்ப் பாஷையே வந்து பாடும்படி தூண்டி உதவியும் புரிந்த்தது என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு எளிமை, அவ்வளவு பாவம், அவ்வளவு சொல் வாய்ப்பு.
ஸ்ரீமான் ஐயங்கார்: ஸ்ரீ. வி.வி. ஸ்ரீனிவாஸ ஐயங்கார்(1871-1954)
கவி: ஸ்ரீ. பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார்
சான்றோர்: ஸ்ரீ. டி.கே.சி. சிதம்பரநாத முதலியார் (1881-1954)
ஆதாரம் & நன்றி: தீப.நடராஜன், காவ்யா சண்முகசுந்தரம்: (தொகுப்பு): ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் (2006): சென்னை: காவ்யா: ப. 304-310
பின் குறிப்பு: இந்த சிறு கவிதையை ஃபிரேம் போட்டு வைத்திருந்த வி.வி.எஸ், டி.கே.சி.க்கு வாசித்து, கண்ணீர் உகுத்தார். இந்த தொகுப்பை விட்டால், மின் - தமிழை விட்டால், இது வேறு எங்கும் கிடைப்பது அரிது.
(என் அத்தையும் வருவாள்)
இன்னம்பூரான்
அற்புதமான பகிர்வு. நன்றி. அத்தை தொடர்ந்து வரக் காத்திருக்கேன்.
அற்புதமான பதிவு!
எனக்கு உண்மையில் அத்தை இல்லை. ஆனால், பூவணநாதர் கோயில்தான் அத்தைவீடு.
அத்திம்பேர் ஆதரவிற்கு சொல்ல வேண்டாம்;-) அத்தைமடி மெத்தையடி என்று
சௌந்தர்யநாயகி. கேட்பானேன்!!
வாழ்க அத்தைமார்கள் (நல்லவேளை, என் பெண்ணிற்கு நிறைய அத்தைகள் இருந்து
அன்பைப் பொழிகின்றனர்).
கண்ணன்
2009/7/21 Innamburan Innamburan <
innamburan@googlemail.com>:
"...நேரத்துக்கு நேரம் பதமாகி, மெதுவாகி, மிருதுவாகி, உணர்ந்து உருகி,அன்று சொன்னதுதான் இன்றுவரை, என்றுமே நம்மைக் காக்கும் மந்திரம், தாங்கும் தென்பு, ந்ம் தஞ்சம் என்று தெரிகிறோம்."
- லா. ச. ரா: 'பாற்கடல்'
இன்னம்பூரான்
2009/7/21 N. Kannan
<navannakana@gmail.com>
சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRJvbZd5-Kwuqt0lOjvLHysO5JDSpu66iRIm-UdSNQI4WzPqmdQTQywl3z-FayXUg_M0DWyHujF7-klGhddii_FWgTPOSxZnQdAT3VgfG411YZDBZUfV8Ko1R5Mt54HZAWZCQVHt5cVpk/s1600/Grand+Tales.jpg
இங்கே பார்த்தீர்களோ? எழுத்துக்கள் சரியாக வரையப்படவில்லை.
ReplyDeleteஇங்கே நன்னாயிருக்கே. நூறு வருஷங்களுக்கு முன்னால்- 2ல் பிரச்னை. சரி செய்து விடுகிறேன்.
Deleteஇ
எனக்கு இப்படி ஒரு அத்தை இல்லையேனு இருக்கு. :(
ReplyDeleteஎனக்கு மூன்று அத்தைகள். நான் பாக்கியசாலி. மூவரும் இந்த அத்தை மாதிரி தான்.
Deleteஇ
கண்ணீர் பெருகாமல் இந்தக் காவியத்தை வாசிக்க முடியவில்லை.
Deleteஅருமை.
நன்றி, வல்லிசிம்ஹன். அந்த காவியத்தை முதலில் படித்தபோது, என் மனமும் கலங்கியது, என் அத்தையை பற்றியும், அவள் பிறப்பதற்கு முன் அவர் எப்படி அறிந்திருந்தார் என்று நினைத்த்து.
ReplyDeleteஇன்னம்பூரான்