=அன்றொரு நாள்: ஏப்ரல் 1:
‘சிக்’ என பிடித்து...!
இன்று நமது இல்லத்தில் ஒரு விருந்து. ஜே ஜே கூட்டம். மாப்பிள்ளைக்கு டென்யூர் கிடைத்தது பிரமேயம். வெளியூர்களிலிருந்தெல்லாம், வந்திருந்தார்கள். பெரும்பாலும் பேராசிரியர்கள், புலவர்கள், ஆய்வாளர்கள். ஒரு குடும்பம்: தந்தையும், தாயும், விடலை மைந்தன் சார்லீ ப்ரெளனும். சோடா பாட்டில் கண்ணாடி என்றாலும், அவனுடைய கண்கள் துறு துறுத்தன. போன தடவை வந்த போது, இங்கிருந்து கான்சாஸ் போகும் வழியில் இருக்கும் பூந்தோட்டம் (Garden City) என்ற அவர்களின் ஊருக்கு போயிருக்கிறேன். அவர்கள் வீட்டில் நாலு குதிரையும், 12 நாய்களும் இருந்தன. கிராமத்து மக்கள். விவசாயம். செல்வந்தரே ஆயினும் போலா பாலா; வெள்ளந்தி; சூது வாது அறியாதவர்கள். அன்புடன் விருந்தோம்பினார்கள். அவர்களது நாய்களில் ‘பப்பா’ புஷ்டியான நாய். நல்ல உயரம், தடிமன். வயது என்னமோ நாலு மாதம் தான். என்னிடம் ஈஷிக்கொண்டது. நாங்கள் இருந்த ஆறு மணி நேரமும், என்னை விட்டு நகரவில்லை. அவர்களே வியந்தார்கள்.
இந்த வருடம் இங்கு வந்தபோது, தந்தையும், தாயும், சார்லீ ப்ரெளனும், ஏதோ இனம் தெரியாத வகையில் மாறி இருந்தார்கள். ‘லொட‘ ‘லொட‘ வென்று பேசவில்லை. எப்போதும், ஆழ்ந்த யோசனையில்.‘பப்பா’ எப்படி இருக்கிறான்? என்று கேட்டேன். போச்சுடா! வெள்ளம் பெருக்கெடுத்தது. சார்லீ ப்ரெளன் ஒரு அசகாய வேலை செய்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். இந்தியனாக இருந்தால், அவனுடைய அம்மா, அவனுடைய புகழ் பாடி, நம் கழுத்தை அறுத்திருப்பாள். ஃபெரன்ச்க்காரன் என்றால். அவனுடைய அப்பா, ஊடகத்தில் வந்த புகழ்மாலைகளை உரக்கப் படித்து கை தட்டியிருப்பார். ஆங்கிலேயனாக இருந்தால், சீதோஷ்ணம் பற்றி மட்டும் பேசி விட்டு, ஒரு ஒயின் பாட்டிலை கொடுத்து விட்டு, அந்த செலவுக்கு ஈடாக உண்டி அருந்தி விட்டு, ஹாய்யா போயிருப்பார்கள். இது அமெரிக்காவாச்சே. ஒரு உரையாடல்;
சார்லீ ப்ரெளனின் அப்பா, நான் & சார்லீ ப்ரெளன்:
சா.ப்.அ: ‘பப்பா’ எப்படி இருக்கிறான்? என்றா கேட்டீர்கள்? அது பெரிய கதை.
நான்: (கவலையுடன்) என்ன ஆச்சு?
சா.ப்.அ: அவனுக்கு என்ன? ஜாலியா இருக்கான். சார்லீ ப்ரெளன் அவனை பிரபலம் ஆக்கிவிட்டான். ஸ்டீவ் ஜாப்ஸ் கூட மடலாடினான். சார்லி! நீயே சொல்லு. எனக்கு இந்த கணினி சமாச்சாரம் தெரியாது. குதிரை பல்லை பார்க்க மட்டும் தெரியும்.
சார்லீ ப்ரெளன் வட்ட வடிவில் ஒரு சின்ன விஷ்ணு சக்கிரம் மாதிரி வைத்திருந்தான். அதை ஒரு சுழற்றுச் சுற்றினான், பாருங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் அவனுக்கு எழுதிய மெயில்கள் எல்லாம் உதிர்ந்தன. அடுத்த சுழற்றில் பப்பா குலைத்தான்; வாலாட்டினான். ஒவ்வொரு சுழற்றிலும் அண்ட சராசரங்கள் பவனி வந்தன. நான் மின் தமிழில் வந்த கீதை,கீதை புரட்டு, கீதா சாம்பசிவம் சொன்ன விஸ்வரூப தரிசனம், வகொவியின் இடைச்செருகல் கருத்து எல்லாவற்றையும் சொல்லி, பஞ்சாதியும் ஓதி, அவனை வாழ்த்தினேன். மாமிக்கு ரொம்ப குஷி. மர்மங்கள் அவிழ்ந்தன.
இனி வருவது முக்கியம். படிக்கத் தவறாதீர்கள்.
அந்த பையன், கூகிளாண்டவரை புறமுதுகு காட்டும் வரை விரட்டி விட்டு, ஒரு புதிய இணைய தள சாதனையை கண்டு பிடித்திருக்கிறான். ஒரு பெரிய கம்பெனியிடம், மிலியன் கணக்கில் பேரம் பேசி விற்று விட்டான். அது நாளை அமல் ஆகும். அவனுடைய காட்டில் மழை. பூந்தோட்டத்து பையனா? கொக்கா? ஒரு ஷரத்து போட்றுக்கான். நாளைக்குள், யார் வேண்டுமானாலும் இலவசமாக அதை பெற்றுக்கொண்டு, ஆயுசு பரியந்தம் உபயோகிக்கலாம், பப்பாவுக்கு நன்றி நவின்று. இணையதளம், மெயில் பாக்ஸ் (8 ஜிபி), தேடு பொறி, கிருமி நாசினி, தமிழ் (மற்றும் 23 மொழிகள்) யுனிகோட், சம்பாஷணை, ஆடியோ, வீடியோ, கீடியோ எல்லாம் ஒரே க்ளிக்கில். கை பேசி கனெக்க்ஷன் உண்டு. எல்லாம் சுயம்பு பணி. அவனிடன் நம் எல்லாருக்கும் (வல்லமையை சேர்த்து, 1231 நபர்கள் ) அனுமதி வாங்கி விட்டேன்.
இணைப்பு தகவலுக்கு, கையேடு பெற, தத்க்ஷண உதவி பெற, முதல் உசாத்துணையை அணுகுக. அதில் கிருமி நாசினியை (வைரஸ் ப்ரொடெக்க்ஷன்) அவன், வணிக அணுகுமுறை கருதி, இணைக்க வில்லையாம்.அதற்காக, டச்சு மொழியில் இணைய தளம்: இரண்டாவது உசாத்துணை.
இனி உங்கள் பாடு: பப்பா பாடு.
வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்
01 04 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment