இன்னம்பூரான் பக்கம் -14
ஒரு நாட்டின் வரலாறு அதனுடைய வளர்/தேய் பிறைகளை பாரபக்ஷமின்றி ஆதாரத்துடன் பதிவு செய்தால் தான், அந்த நாட்டின் மக்கள் அது அளிக்கும் படிப்பினைகளை புரிந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் ஒரு படி ஏறி, வரலாற்றையே படைக்கலாம். இன்றைய சமுதாயத்திற்கு நேற்றைய சமுதாயத்தின் அனுபவப்பாடங்கள் நேரிடையாகத் தெரியாது. நேற்றைய சமுதாயமும், அந்த பிரச்னையை எதிர்கொண்டது என்பதும் உண்மை. இப்படி பல தலைமுறைகள் வரலாற்றின் உதவியால் மட்டுமே, சுயவரலாற்றை படைக்க முடியும்.
நம் இந்தியா விடுதலை பெற்ற வரலாறே மகத்தானது. பிரிட்டீஷாரின் கலோனிய ஆட்சியின் நன்மை, தீமைகளை நடுவு நிலையில் நின்று அலசி பயன் பெறுவது 1947ல் இயலாதது. இன்று இயலும். அத்தனை கசப்புகளை நாம் அனுபவித்து விட்டோம். பல தலைமுறைகள் வந்து போன பின், தள்ளி நின்று, பாரபக்ஷமில்லாமல், நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளை, வரலாற்று பதிவுகளை அணுக முடிகிறது. ஒரு உதாரணம். இந்தியா, பிரிட்டீஷ் ஆட்சியிலக்கணமாகிய நாடாளுமன்ற தேர்தல் அமைப்பை (வெஸ்ட் மினிஸ்டர் மாடல்), மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டது. மற்றும் பல நிர்வாக நுட்பங்கள் – தணிக்கை, வேவு இலாகா, அமைச்சரவை மாடல், நீதித்துறை ஆகியவை. வரலாறு படிக்காவிடின், இவை எப்படி தெரிய வரும்?
அதா அன்று. பிரிட்டீஷ் கலோனிய ஆட்சிக்கு முன் இந்தியா இருந்த விதம் முதற்கொண்டு, அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன் வரை, நம்முடைய வரலாறு நமக்குத் தெரிய வேண்டாமா? அசோக சக்கரவர்த்தியின் பெருமிதம் தெரிய வேண்டாமா? சாலையோரம் மரம் நடுவதைத் தவிர அவர் நடத்திக்கொடுத்த மஹாத்மியங்கள் யாவை? சரி. அது பழங்காலம். இன்றைய நிலைமைக்கு வருவோம்.
மக்கள் ஆட்சி, குடியரசு, ஜனநாயகம் என்ற சொற்தொடர்கள் மக்களின் ஆளுமை, நிர்வாகம், தலைமை பொறுப்பு ஆகியவற்றை சுட்டினாலும், அவை நேரிடையாக நடப்பதில்லை. அது இயலாத காரியம். எனவே தேர்தல், பிரிதிநிதிகள், சட்டசபை, அமைச்சரவை, முதல்வர்/பிரதமர் என்று எல்லாம் அமைப்புகள் நிறுவப்படுகின்றன. அரசியல் சாஸனம் என்று ஒரு மக்களாட்சி கையேடு வழித்துணையாக உதவுகிறது. இந்த பின்னணியில் ஒவ்வொரு பிரஜையும், பிரிதிநிதியை பொறுக்கி எடுக்கும்போது வரலாறு (நிறையும்,குறையும்) படைக்கிறான்/ள். மூன்று உதாரணங்கள் – பெருந்தலைவர் கே.காமராஜ் அவர்களின் தகுதியை பற்றி மக்களிடையை ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால், தேர்தலில், முன்பின் அறியாதப்பட சீனிவாசன் என்ற இளைஞர் தேர்தலில் அவரை கெலித்தார்; இந்தியாவின் மனசாட்சியாகத் திகழ்ந்த அண்ணல் காந்தி ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை; தேர்தலில் களங்கத்தின் மறு பெயராக அமைந்து விட்டது திருமங்கலம் என்ற ஊர். இந்த மூன்று வரலாறுகளும் ஜனத்தொகையின் செயல்களையும், பலாபலன்களையும் பிரதிபலிக்கின்றன.
தற்கால இளைஞர் சமுதாயம் நாளைய தலைவர்கள். பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகப்படிப்புகள் அவர்களின் அறிவை பெருக்கி, சிந்தனையை வளர்த்து, தாரதம்யம் பகுத்து, ஜனநாயகப் பணிகளில், வாக்காளராகவும், தேர்தலில் போட்டியிடும் நபர்களாகவும், பிரதிநிதிகளாகவும், ஆட்சி நிர்வாகம் செய்பவர்களாகவும் செயல்பட உதவும் என்றாலும், அவரவர் தொழில்/ஊழியம்/ மேற்பார்வை/ முதலாளித்துவம் ஆகிய சுய முன்னேற்றத்துக்கு உதவும் என்றாலும், அவை வாழ்வியல் அனுபவத்திற்கு அடுத்த படி தான் உதவும். கல்வியும் வேண்டும். வாழ்க்கைப் பாடங்களும் வேண்டும். அதனால் தான் குமாஸ்தா வேலைக்கு கல்வித்தகுதி வரையறை விதிக்கப்பட்டாலும், ஜனநாயக கடமைகள் ஆற்ற வயது ஒன்று தான் வரையறை – வாக்காளரிலிருந்து பிரதமர் வரை. கடந்த 65 வருடங்களாக இந்திய குடியரசின் வரலாறு தந்து வரும் படிப்பினைகளை – நமது அரசியல் சாஸன பரிபாலனம், நிர்வாகப்பிரிவுகள், அவற்றின் சுதந்திரம், இணைந்து செயல்படுவது, திட்டங்கள், சிக்கல்கள், தீர்வுகள், சாதனைகள், பலவீனங்க, மர்மங்கள், ஊழல்கள் என்ற பற்பல சக்கரங்களை, அக்கு வேறு, ஆணி வேறு என பிரித்துப்போட்டு அலசி, அவற்றின் வரலாற்றை பிரஜைகள் யாவரும் உன்னிப்பாகப் படித்துத் தெளிவு பெறாவிடின், ஜனநாயகம் அம்பேல்; சட்டத்தின் உன்னதம், அபாயத்தில்; நிர்வாகத்திறன் இழப்பு; சமுதாய பின்னணி. இவையெல்லாம் உத்தரவாதம். யதேச்சதிகாரம் தலையெடுக்கும். தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆவான்.
தேவையா?
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/c223.0.403.403/p403x403/644641_408163212572503_924161016_n.jpg
பிரசுரம் & நன்றி: http://www.atheetham.com/?p=4495
No comments:
Post a Comment