அன்றொரு நாள்: ஏப்ரல் 7
யார் இந்த ‘ஹூ’ ‘ஹூ’?
உடல் நலம் பேணுவது நலம். மனநலம் பயக்கும். உயிர் பலம் நீளும். தனி மனிதத் தற்காப்பு மட்டும் இயலாத காரியம். சமூகம் இணைந்து இயங்கினால் தான் பயனுண்டு. மருத்துவத்தில் வருமுன் காப்போன் ஆக இருக்கும் துறை: Social and Preventive Medicine. அத்துறை வல்லுனர்கள் குறைவு, வரும்படி குறைவு என்பதால். எனினும், தன்னார்வத்தொண்டு செய்பவர்களுக்கு, இங்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. இனி ஒரு விதி செய்திடுவோம் ~மின்தமிழ், தமிழ்வாசல் சமூகங்களில். திவாஜி தலைமையில், அவருக்கு அதிக வேலை கொடுக்காமல், கீதா சாம்பசிவம், ஸ்வர்ணலக்ஷ்மி, மற்றும் ஆர்வம் தெரிவிக்கும் அன்பர்களில் இருவரும், யானும் உள்ள குழு அமைத்து, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‘ என்ற உபசமூகத்தை நடத்துவோம். அதனுடைய அடிப்படை கோட்பாடுகள் மூன்று: 1. தனக்குத் தெரியாத விஷயத்தை அடித்து பேசலாகாது. 2. மருத்துவ விஞ்ஞானம் தான் ஆணிவேர். அதில் மாடர்ன் மெடிஸின், ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம் பாரபக்ஷம் கிடையாது. 3. ஆதாரங்களையும், அனுபவங்களையும் சரி பார்த்த பின் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வழி நடை: இக்குழுவின் காரியதரிசி: ஸ்வர்ணலக்ஷ்மி. குழுவினர் தமக்குள் ஆராய்ந்து கொண்டதின் சாராம்சத்தை, அவர் வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ வெளியிடுவார். திசை மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள். அப்படி யாராவது புகுந்து விளையாடினால், குழு ராஜிநாமா செய்து விட்டு போய்விடும்.
நான் இப்படி ‘ஹூ‘ ‘ஹா‘ செய்வது சமீபத்தில் ஷஷ்டியப்தபூர்த்தி (மணி விழா) கொண்டாடிய WHO என்ற ஐ.நா.வின் உருப்படியாக இயங்கும் சர்வதேச அமைப்புக்கு, அதனுடைய 64 பிறந்த தினமாகிய ஏப்ரல் 7 தேதியை ‘சுகாதார விழா‘ வாக கொண்டாடி, மகிழ்ந்து, நன்றி தெரிவிக்க.
அதனுடைய சாதனைகளில் சில:
அந்த அமைப்பின் முகவுரையே ஒரு மனித வாழ்வியல் நிர்ணயத்துக்கு முரசொலி; 1980ல் முதன்முறையாக,உலகெங்கும், ஒரு நோயை (வைசூரி) முற்றிலும் தடை செய்வதில் வெற்றி கண்டது; ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் 2 வியாதியுடன் போராடுவதில் கணிசமான முன்னேற்றம்; உலகெங்கும் துரிதமாக பரவிய சுவாச வியாதிகளுக்கு, சுறுசுறுப்பான நிவாரணம்; தொடக்கத்திலிருந்து, பரவலான சமுதாயங்களில் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள், கண்காணிப்புகள்; அவற்றின் மூலமாகிய 1907ல் பாரிசில் துவங்கிய சர்வதேச சுகாதார மையம், 1922ல் ஜெனீவாவில் துவங்கிய உலகளாவிய ஆரோக்கிய மையம், 1926ல் சிங்கப்பூரில் தொடக்கப்பட்ட தகவல் மையம். மேலும் பல சாதனைகள். தவிர, வருடாவருடம், தேர்ந்தெடுக்கப்பட்டப்பிரிவில், சிறப்பு சேவைகள்.
2012 வருட சிறப்பு பிரகடனம்: “ஆரோக்கியம் தீர்க்காயுசு.” சின்ன சின்ன ஆசை:
- அவ்வப்பொழுது, குறைந்தது 8-10 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று தன் உடல் நிலையை பரிசோதித்துக்கொள்வது;
- தட்டு, தடங்கல் இல்லாமல் தேகப்பயிற்சி செய்வது. காசு, பணம் செலவு செய்யாமல், கையை, காலை ஆட்டி, உடலை கெட்டியாக வைத்துக்கொள்வது எளிது.
- சுத்திகரித்த நீர் பருகும் வழக்கம் தொற்றிக்கொள்ள வேண்டும்.
- பால் சாப்பிடு; பழம் சாப்பிடு, டாக்டர் சாம்பசிவம் அவர்கள் 60 வருடங்கள் முன்னால் திருச்சி கண்காட்சிகளில், பிரசாரம் செய்தது படி.
- பச்சை கறிகாய்களும் சாப்பிடு.
என்னுடைய தகுதியென்று ஒன்றுமில்லை. எனக்கு ஆதாரம் உள்ள ஆரோக்கிய செய்தி மையங்களிடமிருந்து ஆய்வின் அடிப்படையில் அறிவுரைகள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை பகிர்ந்து கொள்ள விருப்பம். ஏதோ கர்மவினையாக, வாழ்நாள் முழுதும் தீவிர வியாதிகளுடன், என் சுற்றத்தில், அதி தீவிர சண்டை போட்ட அனுபவமும் உண்டு. நான் ‘நம் ஆரோக்கிய மையக்குழு‘ வின் உறுப்பினர்களை, அவர்களின் அனுமதி கோராமல் வெளியிட்டது ,அவர்கள் மீது யான் வைத்திருக்கும் மரியாதையினால். இந்த இழையை அவர்களுக்கும் தனி மடலாக அனுப்பியிருக்கிறேன்.
யாவரும் நலமுடன் நீடூழி வாழ்க.
இன்னம்பூரான்
07 04 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment