அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 2:
வரவேற்பு அறை: தேநீர், கேக்கு, பிஸ்கோத்து: வாண்டு மடியில் உட்கார்ந்துக்கொண்டான்.
சூ: அப்றம், அடுத்த கதவை திற. அங்கே இருக்கறது ராக்ஷஸ நாய். பொல்லாது. தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்து முடி போன்ற காதுகள். மெல்ல தூக்கி, நான் கொடுத்த பொன்னாடை மேல் உட்காரவை. அப்றம் அங்கெ இருக்ற பெட்டியை திற. நிறைய பொன் காசுகள் இருக்கும். வேண்டியதை எடுத்துக்கோ.
கதீஜா ‘தங்கக்காசு’, ‘தங்கக்காசு’ என்று குதிக்கிறாள். எல்லாம் கும்மி அடிக்கிறதுகள், வாண்டு சொல்றான், ‘அதுகள் எல்லாம் பொண்டுகள்!’ கட கடவென்று சிரிக்கிறான்.
சி: அம்மா மாயாஜாலி! அதெல்லாம் சரி தான். உனக்கு என்ன இதில் லாபம்? பங்கு கேட்பாயா?
சூ: எனக்கு தம்பிடி வேண்டாம். அங்கே ஒரு சின்ன ஓலை குடுக்கை இருக்கு. அதிலெ சிக்கிமுக்கிக்கல்லும், தீ பத்தவைக்க பஞ்சும் இருக்கு. என்னுடைய பாட்டி மறந்து போய் விட்டுட்டா. அதை கொண்டா. போதும்.
சரி என்றான் சிப்பாய். கயிற்றை கட்டிவிட்டாள், மாயாஜாலி. கம்பளம், சால்வை, பொன்னாடையெல்லாம் சுருட்டிக்கொடுத்தாள். அவற்றையும் இடுப்பில் சுற்றிக்கொண்டான்.
எல்லா பசங்களும் சிரிக்கிறது. என்னவென்று சொல்லமாட்டேன் என்கிறதுகள்.
சிப்பாய் இறங்கினான்.
சாந்தி: கிளு கிளு என சிரித்துக்கொண்டே: புடவை தடுக்கிடப்போறது!
எல்லாரும் ஒரு ரவுண்ட் ரகளை.
மாமி அடக்கறா.
நான்; சொன்னப்படியே, அந்த சிப்பாய் முதல் கதவை திறந்து, அந்த நாயை கம்பளத்தில் அமர்த்தி, எல்லா ஜேபிகளிலும் செப்புக்காசுகளை நிரப்பிக்கொண்டான். அடுத்தபடியாக, இரண்டாவது கதவை திறந்து, அந்த பெரிய நாயை சால்வையில் அமர்த்தி, எல்லா ஜேபிகளிலும் இருந்த செப்புக்காசுகளை கொட்டிவிட்டு, வெள்ளிக்காசுகளை நிரப்பிக்கொண்டான். அப்புறம், மூணாவது கதவை திறந்து, அந்த ராக்ஷஸ நாயை பொன்னாடையில் அமர்த்தி, எல்லா ஜேபிகளிலும் இருந்த வெள்ளிக்காசுகளை கொட்டிவிட்டு, பொன் காசுகளை நிரப்பிக்கொண்டான்.
படு குஷி. ஊரையே வாங்கலாம். அத்தையும் வாங்கலாம். இத்தையும் வாங்கலாம். குல்லா, செருப்பு எல்லாவற்றிலும் பொன் காசுகள்.
சி: மாயாஜாலி! என்னை மேலே இழு.
சூ: குடுக்கை எடுத்துண்டு வந்தியா?
சி. மறந்துட்டேனே.
சூ: அதெல்லாம் முடியாது. எடுத்துண்டு வா.
எடுத்துண்டு வந்தான். கொடுக்க இஷ்டமில்லை. சண்டை வந்தது. மாயாஜாலியை குத்தி கொன்று விட்டான்.
பசங்க போட்ட கூச்சலில், திரை பொதக்கட்டீர் என்று விழுந்து விட்டது. எனக்கு என்ன பண்றது என்று தெரியவில்லை. ஒரிஜினல் கதை எழுதினவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்.பெரிய படைப்பாளர் - கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள். எல்லாம் முதல் தரம். அவருடைய சிறுவர்களுக்கான மாயா ஜாலக்கதைகள் (1835) உலகபிரசித்தம். இன்றும் அச்சாகின்றன. நாளையும் அச்சாகும். அவருடைய ரகசியம் என்ன தெரியுமா? எதையும் குழந்தையின் அகக்கண்களாலும், புறக்கண்களாலும் பார்த்தவர், அவர்.
அதையெல்லாம் விடுங்கள். அவரது மரணம் நெருங்கிய போது, ஒரு இசை அமைப்பாளரை கூப்பிட்டு, தன்னுடைய இறுதி சடங்குக்கு ஒரு பாடலை அமைக்கப்பணித்தார். அவரின் அபிலாஷை: “ என் சவ ஊர்வலத்தில் என் பின்னால் வருபவர்கள், பெரும்பாலும் சிறார்கள். சிறிய திருவடி. அவர்களின் பாதம் சின்னது. அந்த சின்ன, சின்ன அடிகளுக்கு ஏற்றால் போல், சின்ன சின்ன சந்தம் உள்ள பாடல் அமையுங்கள்.” இன்று அன்னாரின் பிறந்த நாள் -ஏப்ரல் 2, 1805. வீீட்டு எஜமானி அம்மா, நான், வாண்டு, குட்டிப்பெண்கள்: ஹெலன், லீஸா, ரோஸி, சாந்தி, கதீஜா எல்லாரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
உங்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு, கற்பனை, மிகை, நடந்தது, நடக்காதது எல்லாம் எழுதித் தள்ளி விட்டேன். அந்த குடுக்கையின் முழுக்கதை படிக்க விரும்புபவர்கள், உசாத்துணையை நாடுக. என் கைச்சரக்கும் சேர்க்கவேண்டும் என்று விரும்பினீர்களானால், காட்சி-3 போடலாம். சொல்லிப்போடுக.
என்னா சொல்றீங்க?
இன்னம்பூரான்
02 04 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment