- அன்றொரு நாள்: ஏப்ரல் 4: I
வக்ஷஸ்தலே...
லக்ஷ்மி லக்ஷ்மிநரசிம்ஹரின் ஹிருதயவாஸினி. பெருமாளின் ‘வக்ஷஸ்தலே’ தாயார் வாசம் செய்கிறாள் என்றால், இருவரையும் காதலில் இணைத்து, பக்தனும், பக்தையும் வழிபடுகிறார்கள் என்று பொருள். ஒரு கைப்பிடி அளவில் மட்டும், ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்திமானான’ இந்த ‘லப் டப்’ பம்புசெட்டுக்கு தொன்மை, ஆன்மீகம், பக்தி, இலக்கிய சுவை, நவரசங்கள், கலை, பேரின்பம், காமம் எல்லாம், விழுந்து, விழுந்து, கட்டியம் கூறுகின்றன. கட்டுண்டு நிற்கின்றன. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்றாலும், சிறுநீரகம் தான் குருதி வெள்ளத்தை மேய்ப்பவன் என்று மருத்துவம் கூறினாலும், உள்ளங்காலுக்கு உச்சந்தலைக்குள்ள மரியாதையை கொடு என்று விவேகம் பாடம் படித்தாலும், மனிதனின் மனோவேகத்தில் கொடி கட்டி பறப்பது, இதயம். ‘லப் டப்’ பம்பானாலும், ஒப்பிலா அன்பின் உருவகமாக நம்மை ஆட்டி வரும் இந்த பாழாப்போன இதயம் துடிக்காவிடின் மரணம் சம்பவிக்கும். அதா அன்று. விபத்துகளில் மூளை மீளமுடியாத வகையில் திறன் இழந்து விட்டால், ஹிருதயம் தாக்குப் பிடித்துக்கொண்டு ‘லப் டப்‘ என சிறிது நேரம் இயங்கக்கூடும். ஹிருதயதானம் தருபவர்கள் தொலைத்து விட்டு, பிறகு மீட்ட இதயத்தின் கதையை கேட்கப்போகிறீர்கள்.
என் அதிர்ஷ்டம், ஒரு நாள் டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்ட் அவர்களை மும்பாய் தாஜ் ஹோட்டலில் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் அத்தகைய ஹிருதயம் ஒன்றை, டிசெம்பர் 3,1967 அன்று 55 வயதிய ஹிருதய சீக்காளிக்கு பொருத்தினார். அது மாபெரும் வெற்றி என்றாலும், ஆள் காலி, சில நாட்களுக்கு பிறகு. திருத்தங்கள் அமைக்கப்பட்டன. 1983க்குள், 68 ஹிருதயங்களை கூடு விட்டு கூடு மாற்றினார், அவர். பிற்காலம், ஆர்த்த்ரெட்டீஸ் காரணமாக, அவரால் இந்த அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை.
பலவிதமான ஆய்வுகள் தொடங்கின. டாக்டர் ராபெர்ட்.கே.ஜார்விக் செயற்கை இதயங்களை பரீக்ஷார்த்தமாகப்படைத்தார். முதல்முறையாக ஒரு செயற்கை இதயத்தை (பம்பு) தற்காலிக உபயோகத்துக்கு பொருத்திய தினம், ஏப்ரல் 4, 1969: டாக்டர் டெண்டன் கூலி; அதை வடிவு அமைத்தவர் டொமிங்கோ லியோட்டா. பலமான பின்னணி உளது. முதல் முதலில் மார்புக்கூட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஸாவர்ப்ரூக், ஜெர்மனியில் புகழ் வாய்ந்த டாக்டர். யுர்குன் தோர்வல்ட் எழுதிய இவருடைய வரலாறு என்னை கவர்ந்த நூல். 1935ல் நோபல் வாங்கிய டாக்டர் அலெக்ஸிஸ் கெர்ரல் & அமெரிக்க விமானி சார்லஸ் லிண்ட்பெர்க் இருவரும் ஒரு இதய பம்ப் உருவாக்கினார்கள். நோபல் பரிசு வாங்கிய டாக்டர் அலெக்ஸிஸ் கெர்ரல் ‘நாம் அறியாத மனிதன்’ என்ற நூலை எழுதி, மெய்ஞானத்தில், விஞ்ஞானம் செழிப்பதை விளக்கியவர். இருவரை பற்றியும் ஒரு நாள் எழுத விருப்பம். பார்க்கலாம்.1957ல் டாக்டர் கோல்ஃபும், டாக்டர் டி.அகுட்ஸுவும் முற்றிலும் செயற்கை இதயத்தை வைத்து ஒரு நாய்க்கு பரீக்ஷார்த்த அறுவை செய்து பார்த்தனர். இவை எல்லாவற்றிலும் போதாக்குறைகள் பல இருந்தன. 1966ல் டாக்டர் மைக்கேல் டி பேக்கி மனிதர்களுக்கு உதவக்கூடிய இதயத்தின் இடது பக்க கீழ் அறைக்கு பினாமி பம்ப் ஒன்றை படைத்து பிரபலமானார்.
இந்த டெண்டன் கூலியும், மைக்கேல் டி பேக்கியும் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரி. ஒரே ஊரை உலகத்தின் ‘ஹிருதய சிகிச்சை தலை நகராக’ நிறுவி, சூப்பர் பிரபலமானார்கள். பாரெங்கும் அவர்களின் புகழ் பாடப்பட்டது. இருவருக்கும் வைட்டிங் லிஸ்ட் ஒரு வருடத்துக்கு மேல். டாக்டர் மைக்கேல் பேக்கி,தன் மனைவியை இழந்த தினமே, ஆஸ்பத்திரி வந்து விட்டார். ‘என்னது இது’ என்று கேட்டவர்களிடம், ‘இன்று நான் வராவிட்டால், சிலருக்கு ஆபரேஷன் 18 மாதம் தள்ளிப்போகும். அதற்குள் அவர்களில் யாராவது இறந்து விட்டால்? என்றார் இந்த பூலோக பிரம்மா.
போச்சுடா! 1960லிருந்து நாற்பது வருடங்களாக இந்த செயற்கை ஹிருதய மாயாஜாலர்கள் பேசிக்கொள்வதில்லை. பூசாரி நெருங்க, நெருங்க ஓடும் சாமியை போல,இந்த செயற்கை ஹிருதய வள்ளல்கள் தங்கள் இதயங்களை தொலைத்து விட்டார்களோ? என்ன ஆச்சு? அதை அப்பறம் சொல்லலாமா?.
இன்னம்பூரான்
04 04 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment