அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 4:
(என்ன பேச்சு மூச்சு காணும் என்று பாத்தா,எல்லாம் கோணாமாணான்னு படுத்துத் தூங்கி வழிகிறதுகள்).
அதுகளுக்குஇல்லாத கதை உமக்கா? நோ. வேணும்னா நாளை வாங்கோ. வரோமா இல்லையா என்று சொல்லுங்கோ.
(வந்துட்டேளா! தொடர்கிறது)
அதிரூபசுந்தரியான ராஜகுமாரியை பாத்துண்டே இருந்தான், நம்ம சிப்பாய். அவள் ஆழ்ந்த தூக்கத்தில். ஆசையுடன் ஒரு முத்தம் இட்டான். அந்த நாய் குலைத்தது. அவள் அலங்க மலங்க முழித்தாள். அரைதூக்கத்தில். ‘லபக்’ என்று அந்த நாய் அவளை தூக்கிண்டு போய்டுத்து. பசங்க எல்லாம் அந்த சத்தத்தில் விழித்துக்கொண்டு ராஜகுமாரி எங்கே? எங்கே? என்று கேட்க, அவளோ, அரண்மணையில், ராஜா-ராணியிடம் ‘முத்தம்’ என்ற கனவை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். ராணியம்மா கெட்டிக்காரி. அவள் ஒரு தாதியை கூப்பிட்டு, ராஜகுமாரியை ராத்திரி கவனித்துக்கொள் என்றாள். நாய் வந்து, அவளை லபக்கிக்கொண்டு போன போது, பின்னாலேயே ஓடினாள். சிப்பாய் வீட்டுக்கதவில் ஒரு சின்னம் வரைந்து விட்டு வந்து விட்டாள். அந்த நாய் ஒரிஜினல் அய்யம்பேட்டை பக்கத்து நாய்! அது ஊரில் இருந்த எல்லா வீட்டுக்கதவுகளிலும், அதே சின்னத்தை வரைந்து விட்டது! மறு நாள் காலை, அரண்மணையில் ஒரே குழப்பம். கண்டு பிடிக்க முடியவில்லை. ராணியோ கும்போணத்துப் பொன்ணு. கெட்டிக்காரத்தனமாக, இளவரசியின் இடுப்பில், தூங்கச்சே ஒரு பையை கட்டிப்பிட்டா. அதில் அரசிமாவு. வழி நெடுக சிந்திக்கிடந்ததா? கண்டு பிடிச்சுட்டாஹ. அந்த சிப்பாயை, குண்டுக்கட்டா கட்டி ஜெயில்லெ போட்டுட்டா. சோறு தண்ணி கிடையாது. பக்கத்திலெ மைதானமா. அங்கே ஒரு மேடை கட்டிண்டு இருக்கா, அடிச்சுப்பிடிச்சுண்டு. ஒத்தன் தண்டோரா போட்டுண்டு போரான், ‘நாளைக்காலை 5 47 மணியில், நம்ம அதிரூபசுந்தரியான ராஜகுமாரியை முத்தமிட்ட சிப்பாயை தூக்கில் போடப்போறோம். எல்லாரும் வருக. இலவசமாக நன்னாரி ஷர்பத் வினியோகம்.’ என்று கூவிக்கொண்டே.
டண்டணக்கா டண் டண்...
(தொடரணுமா?)
இன்னம்பூரான்
02 04 2012/06 04 2012
பி.கு. சித்திரம்: உபயம் தமிழ்த்தேனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ: அவரே போடுவார்.
No comments:
Post a Comment