அன்றொரு நாள்: ஏப்ரல் 3:
அச்சான்யம்!
அமெரிக்காவில் அமரிக்கையாக அமர்ந்து கொண்டு அன்றொரு நாள்; ஏப்ரல் 3, 1968 அன்று நிகழ்ந்த ‘ஏசு பிரானின் கடைசி விருந்துணவு’ போன்ற கடைசி சொற்பொழிவு ஒன்றை பற்றி எழுதாவிடில், என் மனம் நிம்மதி பெறாது. அந்த உரையில் புதைந்து கிடந்த ஆன்மீகம், தொன்மையின் தாக்கம், மறை பொருள், தீர்க்கதரிசனம்,பிரக்ஞை, அச்சான்யம் (தீநிமித்தம்) எல்லாம் நம்மை உலுக்கி, குலுக்கி எடுத்து விடுகின்றன. அந்த உரையிலிருந்து சில பகுதிகள், சுருக்கமாக:
- ஏனிந்த ஹர்த்தால்?
அநீதி தலை விரித்தாடுகிறது...ஒரு ஜன்னல் உடைந்தாற் கூச்சல் போடுபவர்கள், 1,300 கடைநிலை ஊழியர்களுக்கு நகராட்சி இழைக்கும் அநியாயத்தைக் கேட்டால், அழிச்சாட்டியமாக மெளனம் சாதிக்கிறார்கள். நான் இதழ்களை குற்றம் சாட்டுகிறேன்... சத்தியத்திற்கு என்றும் தோல்வி கிடையாது. நாம் தியாகம் செய்வோம் அல்லவா. வெற்றி உத்தரவாதம்...
- மனித உரிமை:
அமெரிக்காவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், ‘சொன்னதை செய்’. சட்டப்புத்தகத்தில் போட்டு விட்டு,அதை கடாசினால் எப்படி,ஐயா? இது சைனாவோ.ரஷ்யாவோ இல்லை. பேச்சுரிமை, கூடி இயங்கும் உரிமை, ஊடக உரிமை, உரிமைக்குப் போராட உரிமை எல்லாம் இருக்கிறது என்று சொல்லி விட்டு, எங்கள் மேல் நாய்களையும் ஏவுவதும், தண்ணீர் பீச்சுவதும் தப்பு இல்லையா?... நாங்கள் விடப்போவதில்லை.
3.பொருளியல் ஹர்த்தால்:
நாங்கள் ஏழை தான். ஆனால், எங்கள் சமூகத்தின் செல்வம் கொஞ்சநஞ்சமில்லை. 30 பிலியன் டாலர் வருடத்துக்கு (1968). இது அமெரிக்காவின் ஏற்றுமதியை விட அதிகம். எங்களிடம் சக்தி இருக்கிறது. சேகரம் செய்ய இயலும். யாரிடம் கெஞ்சவும், கொஞ்சவும் தேவையில்லை. எங்களுக்கு அநீதி இழைத்தால், நாங்கள், உங்களுக்கு விற்கமாட்டோம்; உங்களிடம் வாங்க மாட்டோம். உங்கள் செல்வம் படுத்துப்போகும்.
4. பொது:
ஒரே புயல், மழை, ஊதகாற்று. இதற்கு அஞ்சாமல் கூடியிருக்கிறீர்கள்...இது சின்ன ஊர் தான். ஆனால். வரலாறு படைப்போம். நான் உலகம் முழுதும், பழங்காலத்திலிருந்து, உங்கள் முன், நடந்து காட்டப்போகிறேன். மனம் என்ற என் புஷ்பக விமானத்தில், எகிப்திலும், சிவந்த கடலிலும், காவற்காட்டிலும், இறைவன் வரன் அளித்த பூமியிலும், வானளாவவும், உம்மையும் அழைத்துக்கொண்டு உலாவுவேன். கிரேக்க நாடு, ஒலிம்பஸ் மலை,ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரட்டீஸ், யூரிபிடீஸ், அரிஸ்டோஃபேன், ரோமானிய ராஜாங்கம்,, புனர்மலர்ச்சி சகாப்தம், சமய சீர்திருத்தம் செய்த மார்ட்டின் லூதர், அப்ரஹாம் லிங்கன் வரை, உங்களை அழைத்துச் செல்கிறேன். அச்சமில்லை. அச்சமிருந்தால் தான் அச்சம். இல்லையா?
உங்கள் முன்னிலையில் ஆண்டவனிடன் பிரார்த்திக்கிறேன். ‘எனக்கு இந்த நூற்றாண்டில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எனக்கு நீண்ட ஆயுள் தா.’
மலையேறுகிறேன் என்றார், விவிலய தொன்மையில் மோசஸ்ஸின் மறைவையும், ஜோஷுவாவின் வரவையும் சுட்டினாற்போல். அவர் மேலும் சொன்னது:
‘எனக்கு கொலை எச்சரிக்கைகள் வந்த வண்னம் உளன. நமது வெள்ளைய சகோதரர்களில் சிலர் என்ன கொடுமை செய்வார்களோ? நான் அஞ்சவில்லை. என்றோ நடந்தது போல், பரமபிதாவின் ஆணைக்கிணங்க மலை ஏறினேன். தேவதரிசனம் ஆச்சுது. நமக்கு அவர் வரனளிக்கும் நாட்டை பார்த்தேன். நாம் சேர்ந்து ஆன்மீக யாத்திரை செய்வோம். எனக்கு மனித பயமில்லை...”
அந்தோ பரிதாபம்! அவர் சொல்லி முடிக்கவில்லை. மறுநாள் (ஏப்ரல் 4, 1968) அன்று நோபல் பரிசு வாங்கிய மார்ட்டின் லூதர் அவர்கள், 39 வயதில், டென்னஸி மாநிலத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்றொரு நாள்: ஜனவரி:15:‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டால்...’ என்ற இழையில் அவரை பற்றி விவரமாக எழுதியிருக்கிறேன். அவரது உடலில் குண்டு பாய்ந்தது. ஆத்மா நித்யவாசம். சிரஞ்சீவி.
வாழ்க அவர் நாமம்.
இன்னம்பூரான்
03 04 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment