பகுதி-2
இன்னம்பூரான்
09 10 2012 ( 11 மணி 49 நிமிடம் 34 வினாடி 8756.78 துகள்)
பெளதிக உலகினிலே வினாடித்துளிகளில் அரிய நிகழ்வுகள் நிறைவேறி விடுகின்றன. கண்மூடிக்கண் திறக்கும் வினாடியை தொல்காப்பியம் ஒரு மாத்திரை என்று குறிக்கும். அதற்குள் பல்லாயிரம் வினாடித்துளிகள்! ஆகையினால் தான் க்வாண்டம் ஃபிஸிக்ஸ் எனப்படும் நுண்துகள் பெளதிகம், பழங்கால பெளதிகத்தின் எல்லைகளை, அனுமார் சமுத்திரத்தைத் தாண்டியமாதிரி, ஒரே தாவலில், கடந்து விட்டது. இந்த பீடிகை எதற்கு எனில், இன்றைய விஞ்ஞானம், பெளதிகத்திக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட வினாடியிலேயே, அதை பிரசுரிக்க வழி வகுத்துள்ளதை மெச்சுவதற்குத்தான்.
அந்த பரிசு ஸெர்ஜெ ஹரோஷ் (Serge Haroche) என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானிக்கும், டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் (David J. Wineland) என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கும், தனித்தனி நுண்துகள் படைப்புகளை அளந்து, மாற்றியமைக்கக்கூடிய பரிசோதனை வழிமுறைகளை முன்னிறுத்தியதற்காக, இருவருக்கும் சமபங்கில் அளிக்கப்படுகிறது. (“for ground-breaking experimental methods that enable measuring and manipulation of individual quantum systems”.). அவற்றை விஞ்ஞானத்தின் அடித்தளத்தையே புரட்டியெடுக்கும், வரலாறு காணாத பரிசோதனை வழிமுறைகள் என்று நோபெல் கமிட்டி புகழாரம் சூட்டி வாழ்த்தி இருக்கிறது. அதில் ஆச்சரியம் யாதெனில், இருவரும், அவரவர் போக்கில், அவர் ஒரு புறம், இவர் ஒரு புறமாக, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார்கள். அவர்களின் புத்தம்புதிய வழிமுறை, அந்த நுண்துகள்களை சோதிக்க/கட்டுப்படுத்த/ எண்ண உதவுகிறது. அந்த நுண்துகள்கள் ஒரு வினாடிக்குள் எண்ணற்ற முறைகளில் மாறி வருபவை. அந்த சிக்கலை இவர்கள் இருவரும் கையாண்ட திறன், அபாரம். இருவரின் வழிமுறைகளில் ஒப்புமை மிக இருந்தாலும், அவற்றின் திசைகள் எதிர்துருவங்கள். டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் மின்சாரம் புகுத்தப்பட்ட நுண்துகள்களை, ஒளியின் உதவியால் (‘light or photons’) இற்செறித்து, கட்டுப்படுத்தி, அளந்தார். ஸெர்ஜெ ஹரோஷ், எதிர்மாறாக, இற்செறிக்கப்பட்ட துகள்களை (atoms/ions) ஒரு ‘கூண்டுக்கிளி’ போல் புகுத்தி அடைத்தபின் கட்டுப்படுத்தி, அளந்தார்.
அந்த நுண்துகள்களை அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்து தனித்துக் காண இயலாது. அவை தத்க்ஷணமே, தன்னுடைய அதிசய குணாதிசயங்களை, நம்ப முடியாத வகையில் (bizarre) இழந்து விடுகின்றன. அவை துரிதமாக இப்படி அழிவதற்கு முன்னால், ‘நீ பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம்’ என்ற புதிய பாதையில் சோதிக்கும் வழி மகத்தானது. இங்கு தான் நேற்றைய பெளதிகம் பத்தாம் பசலியாக போய்விட்டது. அதனுடைய விதிகள் இங்கு செல்லாது.
இருவருமே, 1980லிருந்து ஆராயப்படும் நுண்-பெளதிகத்தில் ஆழங்கால் பதித்து அல்லவா, இந்த புதிய பாதையை அமைத்துள்ளனர். அதனுடைய நல்வரவாக, புரட்சிகரமான ஸூப்பர்-கணினி ஒன்றை உருவாக்கமுடியும். அது நமது வாழ்வியலை தடபுடலாக, நாம் தட்டச்சு செய்யும் கணினி நம் வாழ்க்கையை கிட்டத்தட்ட பற்பலமுறைகளில் மாற்றி விட்டது. மாற்றி வருகிறது. அதை விட தடபுடலாக, இந்த ஸூப்பர்-கணினி நம்மை கட்டியாளும் என்பதில் ஐயமில்லை. அதா அன்று. இனி, நாம் மிக மிக துல்லியமான கடியாரங்களை படைக்கமுடியும். நேரத்தை அளப்பதே ஒரு புது விஞ்ஞான துறையாக அமைந்து, நமக்கு உதவலாம். அல்லது பாடாய் படுத்தாலும்.
‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே!
*
No comments:
Post a Comment