இர
இன்னம்பூரான்
Thursday, June 2, 2011, 10:19
அப்டேட்:கடந்த இரு வருடங்களுக்குள் தணிக்கை ரிப்போர்ட்கள் அரசியல் வட்டாரங்களை ஒரு ஆட்டு ஆட்டுவித்தாலும், மக்கள் விழிப்புணர்ச்சி ஒன்று தான் வழி. இல்லாவிடின், நான் ஏன் விழுந்து, விழுந்து எழுதப்போகிறேன்!
இன்னம்பூரான்
28 05 2013
தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?
தணிக்கைத் துறை, உலகெங்கும், அலட்டிக்கொள்ளாமல், தணிந்து பேசும் தன்மையுடையது; உள்ளது உள்ளபடி கூறும் தன்மையுடையது; பெருந்தவறுகளைக்கூட, சான்றில்லையெனில், முன்னிறுத்தத் தயங்கும் தன்மையுடையது. இத்துறையின் சர்வதேச அமைப்புகள் செவ்வனே இயங்கின்றன. இன்றைய நம்நாட்டு அரசுகள் இயங்கும் / இயங்காத / முரணாக இயங்கும் செப்பிடு வித்தைகளைக் காணும்போது, தணிக்கைத் துறையின் ஏற்புடைய தன்மைகளையும் மாற்றித்தான் அமைக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
இரு பின்னூட்டங்கள், என்னை இப்படிச் சிந்திக்க வைக்கின்றன. கண்டும் காணாமல் விடப்படும் தணிக்கை அறிவிப்புகளைப் பற்றி ஒருவர் கூறினார், ‘இந்தக் கசப்பான நிலை மாறவேண்டும்; தணிக்கைத் துறையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.’
மற்றொருவர், ‘வருத்தமளிக்கும் செய்தி. ஜனநாயகத்தில், பணநாயகம் விளையாடுவதன் அறிகுறி’ என்றார்.
இத்தருணம், வலிமை மிகுந்த அமெரிக்காவின் தணிக்கைத் துறையின், 2011 மே 31ஆம் நாள் (31.05.2011) பிரகடனத்தைக் கவனிப்போமாக. அமெரிக்க ஐக்கிய நாட்டில் (யூ.எஸ்.ஏ) மருத்துவச் செயல்பாடுகள் சிக்கலானவை. காப்பீடு இல்லையெனில், மருத்துவம் இல்லையெனலாம். தமிழ்நாட்டுக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் இல்லாமல், பெருமளவு ஒழுங்காக இயங்கினாலும், நுகர்வோர்களைப் பாடாய்ப் படுத்தும் தன்மை உடையவை.
சட்டமன்றங்களின் அரசியல் சாஸனம் சார்ந்த பணிகளில் உதவுவதும், மத்திய அரசு உருப்படியாக இயங்குவதற்கான பணிகளில் இறங்குவதும், அந்த அரசு மக்களிடம் கணக்குக் காட்டச் செய்வதும், தனது பணி என்று அடக்கமாக சொல்லிக்கொள்ளும் தணிக்கைத் துறைக்கு, இந்த மருத்துவச் செயல்பாடுகள் விஷயத்தில் நேரடிப் பணி ஒன்றும் கிடையாது. ஆனால் பாருங்கள், அங்கு நடப்பதை:
மருத்துவக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க ஒரு மேல்மட்டக் குழு. பழையன கழித்து, புதியன புகுத்தி அப்பணியை செவ்வனே செய்ய, அங்கத்தினர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். பணி நன்றாகச் செய்பவர்களுக்கு மறு நியமனம் உண்டு. இந்த மேல்மட்டக் குழுவில் இடம் பெறுவது, சமுதாயத்தில் மதிப்பு தருகிறது. எனவே, மனுதாரர்கள் அதிகம். 1997இல் சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த மேல்மட்டக் குழு தான் மக்களின் ஆரோக்கிய மாதாவாகிய திட்டத்தின் வழிமுறைகளைப் பற்றி, கட்டணங்களைப் பற்றி, சட்டமன்றத்துக்கு ஆலோசனை அளிக்கிறது.
இந்தியாவின் மக்கள் சபை, மேல் சபை இரண்டும் போல, அமெரிக்காவின் சபைகள் இரண்டும், இந்த மேல்மட்டக் குழுவின் அங்கத்தினர்களை நியமிக்கும் பொறுப்பை, ஆடிட்டர் ஜெனெரல் வசம் ஒப்படைத்திருக்கிறது. ஜெனெ.எல்.டொதாரோ என்பவர், தற்கால ஆடிட்டர் ஜெனெரல். அங்கு. அவர் நியமித்தவர்களில் ஒருவரான வில்லிஸ் கிராடிஸன் ட்யூக் பல்கலைக்கழகத்தின் ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனர் (Scholar in Residence in the Health Sector Management Program).
அது சாதாரணமான பதவி அல்ல. அமெரிக்காவின் பெர்க்க்லி பல்கலைக்கழகத்தில், நம் உலகப் புகழ் கதாசிரியர் ஆர்.கே. நாராயணன் அவர்களை ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனராக நியமித்த போது, அவர் தன் வேலை என்னவென்று கேட்டார். நீங்கள் இங்கு தங்கியிருப்பது போதும். அது தான் எங்களுக்குத் தனிச் சிறப்பு என்றார்கள்.
அந்த உன்னத ஸ்தானத்தில் இருப்பவர், வில்லிஸ் கிராடிஸன் அவர்கள். அவர் 18 வருடங்கள், சட்டசபை அங்கத்தினராக இருந்தவர். இன்னொருவர், வில்லியம் ஹால் என்ற முதியோர் மருத்துவர், பேராசிரியர். அவர் வகுத்த திட்டங்கள், மிகவும் புகழ் வாய்த்தவை. இப்போது, அமெரிக்காவில் ஆடிட்டர் ஜெனரலுக்கு உள்ள மதிப்பு புரிகிறதல்லவா?
இந்தியாவிலோ, அந்தோ பரிதாபம்! இதே காலகட்டத்தில், பாராளுமன்றக் குழு ஒன்று (சாக்கோ கமிட்டி), நம் ஆடிட்டர் ஜெனெரலிடம், ‘கோக்குமாக்காக’ (aggressively), பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட 2ஜி விஷயத்தைப் பற்றிக் கேட்டதாக, ஊடகங்கள் கூறுகின்றன. இதில் அவமானம் யாருக்கு என்று வருங்கால வரலாறு கூறும்போது, நமது சந்ததிகள் நம்மைக் கேலி செய்வார்கள். அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.
(தொடரும்……
===========================================================
No comments:
Post a Comment