Friday, May 31, 2013

13.திமிலோகம்:தணிக்கை




13.திமிலோகம்:தணிக்கை

Innamburan S.Soundararajan 01 06 2013



தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை 13 : திமிலோகம்

அப்டேட்: விக்கிலீக் ஆனாலும், ஆடிட் லீக் ஆனாலும், கசிவினால் யாருக்கு ஆதாயம் என்பதை கவனிக்கவேண்டும். இந்த கரடி வித்தையெல்லாம், தவறு செய்பவர்களுக்கு உதவலாம்! விஷயம் தீர்ந்தபாடில்லை. ஆனால், நிழல் யுத்தம் ஆயத்தம்.
இன்னம்பூரான்
01 06 2013
******

இன்னம்பூரான்
Thursday, June 23, 2011, 9:49t
‘...சீட்டுப் பதிவை திரும்பக்கூட்டித் துரைமுன்
கேட்டுக் கழித்து எல்லாம் கிண்டிப்பார்த்து – ஏட்டுக்கு
இலக்காத் தொகையிட்டு எழுதியே நெஞ்சைக்
கலக்காத வண்ணங்கலக்கி – அலக்கழிக்கும்…’
-பண விடு தூது (1908)
‘தொகைவகையோடு ஏற்றிப் பணச்சோறு இடுவாரை’ பற்றி மணி அடித்தால், பேரிகையே ‘டும் டும்‘ என்று முழங்குகிறது, ‘இலக்காத் தொகையிட்டு… அலக்கழிக்கும் ’கச்சா’ எண்ணைத் துறையை பற்றிய ‘பக்கா’ குற்றச்சாட்டுகளை! ஆண்டவா!
இந்த 2ஜி விவகாரம் சந்து பொந்துகளில் புகுந்து, கொட்டு மேளம் கொட்ட, கொம்பு ஊத, பறை தப்பட்ட, மலையாளத்து செண்டை மேளம் ஒலிக்க, வருஷ நாட்டு நையாண்டி மேளம் பிளந்து கட்ட, பம்பை, உடுக்கை, சொல்லுக்கட்டுக்கள் எல்லாம் படபடக்க, இந்த தணிக்கைத்துறை, அரசை இத்தனை பாடு படுத்துதா? என்று மக்கள் வியக்கத் தொடங்கினராம்.
ஊடகங்களும், விழுந்து, விழுந்து, ஆடிட்டர் ஜெனெரல் சொன்னாரு; அக்கவுண்டண்ட் ஜெனெரல் எழுதினாரு என்றெல்லாம்,  பக்கம், பக்கமாக எழுதத் தொடங்கினவாம். ஊரெல்லாம் இதே தான் பேச்சு. ஹிந்து பத்திரிகையில் தலையங்கம் (16-06-  2011); அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் அலசல். கூகிளில் இது பற்றி நூற்றுக்கணக்கான குறிப்புகள். அந்தத் துறையின் அமைச்சர் பிரதமரிடம் விளக்கம் தர அவகாசம் கேட்பதாகவும், அவரும் இசைந்து விட்டால், ஆடிட் ரிப்போர்ட்டை காலாகாலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் போகலாம் என்று ஒரு செய்தி.  இது என்ன வரைவு (Draft)  ரிப்போர்ட் தானே! நாங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே! அதற்குள் என்ன இந்த ஆர்ப்பாட்டம்? இது தகுமோ? இது அடுக்குமோ? என்று காங்கிரஸ் கட்சி அங்கலாய்க்கிறதாம். சரி தான்!
வரைவு ஆடிட் ரிப்போர்ட்டுகளைப் பற்றி செய்திகள் வாரா.  அந்த அந்த துறைகளின் உயர்நிலை விளக்கங்கள் பெற்று, அவர்களுடன் விவாதித்து, அவர்களின் கூற்றையும் சோதித்துத் தான், ஆடிட் ரிப்போர்ட்டுகள் தயாரிக்கப்படும்.  கையொப்பங்கள் இடப்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்டுகளை, நாடாளுமன்றத்தில்/சட்டசபையில் வைப்பதற்காக,  ஜனாதிபதி/கவர்னர் ஆகியோருக்கு அனுப்பப்படும். நாடாளுமன்றத்தில்/சட்டசபையில் வைக்கப்பட்ட பிறகு தான் அவை பொது  மன்றத்துக்கு வரலாம். ஆனால், இன்றோ, கச்சா எண்ணைத் துறையை பற்றிய வரைவு ஆடிட் ரிப்போர்ட்டு, ஊடகங்களில்  ஆடிப்பாடி, ஓடி வருகிறது, திமிலோகப்படுகிறது.  அரசு கேட்டுக்கொண்டதால் தான் இந்த தணிக்கை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  ‘ஆடிட்டர் ஜெனெரல்’  என்று வரிக்கு வரி, இந்த ஊடகங்கள் பேசுவது சரியல்ல. அவர் இன்னும் கையொப்பம் இடவில்லை.
சில புலன் விசாரனைகள் சொல்வது யாதெனின்:
1.  கச்சா எண்ணைத் துறையின் ஹைட்ரோகார்பன் பிரிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனிக்கு ஒப்பந்தத்தை மீறிய சலுகைகள் அளித்தது;
2. ஆங்கிலத்தில் ‘sweetheart deals’ என்பர். எல்லாம் ஒரு காதல் மயக்கம் போல்! அந்த கம்பெனிக்கு ‘இனி ஏற்படக்கூடியச் செலவுக்கு ஈடான முன்வரவுக்கு’ ஏற்பாடு செய்து கொடுத்தனர்!;
3.  கைர்ன் என்ற கூட்டுக் கம்பேனிக்கு (ரிலையன்ஸ் + பிரிட்டீஷ் காஸ் + ஓ.என்.ஜீ.சீ) கொடுத்த சலுகைகளை பற்றி, ஆடிட்டிடம் கதை விடறாங்க; ஒரு பெரிய நிலப்பரப்பை, ஒப்பந்தத்தை மீறி கைர்ன் வைத்துள்ளது.
4.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ‘தங்கமுலாம்’ பூசிய கணக்கு வழக்குகளை எஸ்டிமேட் ஆக கொடுத்ததாக புகார்: அதாவது, செலவுகளை கற்பனையால் கூட்டுவது! ஆந்திரா ஆஃப் ஷோர், பர்மார் என்ற இரு ஒப்பந்தங்களிலேயே, 10 பில்லியன் டாலர் (450 பில்லியன் ரூபாய்!)  முதலீடு செய்ய வேண்டியிருக்கலாம். அவற்றில் ‘தங்கமுலாம்’!!!!   இது தான் ஆடிட் தேடும் சிதம்பர ரகசியம்;
5.  கிருஷ்ணா-கோதாவரி என்ற தளத்தில், இந்த ரிலையன்ஸ் கம்பெனி முதலில் ரூபாய் 12 ஆயிரம் கோடி என்றது.  அதை பிற்பாடு 45 ஆயிரம் கோடி என்கிறது. ஹைட்ரோகார்பன் உற்பத்தி இரு மடங்கு என்கிறது.  என்ன? கணக்கு உதைக்குமோ? இதனால், அரசுக்கு வரவும் குறைந்ததே, என்கிறது, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்ற பொருள் பட பேசும் ஹிந்து தலையங்கம்.
6.  இதற்கெல்லாம் பின்னணி யாதெனில், ஒப்பந்தத்தில் காட்டப்பட்ட / அதற்கு மேலும் அளிக்கப்பட்ட சலுகைகள் –  பரிக்ஷார்த்தமாக சோதிப்பதற்கு வழங்கவேண்டிய சலுகைகளை, ஒப்பந்தம் முழுவதற்கும் அளித்தது.
7.  இதன் விளைவாக, செய்யப்படாத சோதனைக் கிணறுகளுக்கும் ஈட்டுத் தொகை கொடுக்கப்பட்டதா?
8.  பாம்பே -ஹை தளத்தின் பன்னா-முதி-தாப்தி பகுதி வேலைப்பாடுகள் பற்றிய ஆவணங்கள் ஆடிட்டுக்குக்  கொடுக்கப்படவில்லை; ஆடிட் செய்ய இயலவில்லை.
9. 2008/9 காலகட்டத்திலியே, இந்த முறைகேடுகள் வெளி வந்தும், அரசு வாளாவிருக்கிறது.  ஆடிட்டர் ஜெனெரல் ஒரு துளை மூலம் ‘பயாஸ்கோப்’ (என் சொல்) காட்டியிருக்கார்.  அரசு தான் கிணறு வெட்டி, ‘பூதங்களை’ வெளியேற்றவேண்டும் என்கிறது, ஹிந்து.
10. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பே ஆடிட் முடியும் தருவாயில் இருப்பதாக செய்தி வந்தது.  ஹைட்ரோகார்பன் துறையோ,  ஜூன் 8, 2011 அன்று தான் வரைவு ஆடிட் ரிப்போர்ட்டு வந்ததாக சொல்கிறது.  இரு தரப்பும் மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டுள்ளனர். எத்தனை நாட்களாக இழுபறியோ?  http://www.forum4finance.com/2010/08/09/cag-ril-gas-field-cost-audit-completed-report-will-take-time/
வரைவு ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் இப்படி பொது மன்றத்துக்கு வருவது நல்லதில்லை.  இனி நடக்கவேண்டிய ஆய்வுகள் பாதிக்கப்படலாம். ஹைட்ரோகார்பன் துறையின் சில விளக்கங்கள், இந்த சிக்கலான விஷயங்களில், ஏற்கப்பட்டு, ஆடிட் ரிப்போர்ட் மாற்றப்படலாம். ஆனால், எழுந்த சர்ச்சை தீராமல் போகலாம்.  மேலும், அரசியல் சாஸனத்தை அசட்டை செய்யலாமோ?  நான் ஆடிட்டர் ஜெனெரலாக இருந்தால், வரைவு ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் இப்படி அலசப்படுவது பற்றி, மிகவும் கவலைப்படுவேன்.
வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைக்கலாமோ?

(தொடரும்)



படத்திற்கு நன்றி :
  • Geetha Sambasivam wrote on 23 June, 2011, 11:38
    இந்தச் செய்தியைக் குறித்துக் கடந்த இரண்டு நாட்களாய்த் தான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இன்னமும் முழு விஷயமும் புரிந்து கொள்ளவில்லை. என்றாலும் தவறு நேர்ந்திருக்கிறது என்ற அளவில் புரிகிறது. செய்தியை அவசரப் பட்டு ஊடகத்திற்கு எவரோ கொடுத்திருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. ; மற்றவை நன்கு படித்துப் புரிந்து கொண்ட பின்னர். நன்றி.

No comments:

Post a Comment