‘கோமளம்! என் மடிப்புடவை எடுத்துண்டு வா. கம்பு வச்சுருக்கேன், பார், மூலைலே. அடியே வேதா! நல்லதாப் பாத்து தேங்காய், பழம், வெத்தலை எல்லாம் அந்த வெள்ளித் தட்டுலெ எடுத்து வை. பெருமாள் வந்திண்டே இருக்காராம். டேய் ராஜூ! தாத்தாட்டே சொல்லு. எப்ப பாத்தாலும் அரட்டை, பக்கத்தாத்து பாவி பிராமணனோட. கொஞ்சம் விட்டாக்க, சாமியாவது பூதமாவது! அப்டின்னு வெட்டிப் பேச்சு வேறே. நாராயணா! நாராயணா! உங்களைத்தானே! தட்டிலே போட்றத்துக்கு சில்லறை எடுத்து வைங்கோ. கை கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் என்ன? மாட்டுப்பெண் ஸ்நானம் பண்லே! புரியறதா? ஊருக்கெல்லாம் தண்டோரா போட வேண்டாம்.
இது கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன்னால், அரியக்குடி சம்பாஷணை + நம்ம நகாசு. எல்லாம் வல்ல சக்கரத்தாழ்வாருக்கு ‘முள்ளுப்பொறுக்கி’ என்று செல்லப் பெயர். தெரு, வீதியெல்லாம் புல்லுடன் கூட நெருஞ்சி முள்ளும். பெருமாளின் திருவடிகள் நோகுமே என்று வருமுன் காப்போனாக, ஓடோடி வந்து, அதையெல்லாம் களைந்து விடுகிறார், பதினாறு ஆயுதபாணியாகிய சக்கரத்தாழ்வார்.
இப்போது, தணிக்கைத் துறையின் குமாஸ்தாக்களின் (ஆடிட்டர்களின்) ‘முள்ளுப்பொறுக்கி’ பணியைப் பற்றிச் சில வார்த்தைகள். குமாஸ்தாவின் கண்ணில் படாதது, அதிகாரிகள் கண்ணில் படுவது துர்லபம். என்ன தான் மேற்பார்வை இருந்தாலும், குமாஸ்தாவால் உதறப்பட்ட அலசலை உயிர்ப்பிப்பது எளிதல்ல. அந்தக் காலத்தில், ஏ.ஜி. ஆஃபீஸில் குமாஸ்தா வேலை கிடைத்தால், கல்யாண மார்க்கெட்டில் மதிப்பு உயரும். அப்பவே, பெண்களை வேலைக்கு அமர்த்தியதால், (இப்போ அல்லி ராஜ்யம்!) ஆஃபீஸ் கூட ஒரு கல்யாண மாலை தான், நான் ஏ.ஜி. ஆஃபீஸின் தல புராணத்தில் எழுதின மாதிரி. நேர்காணல் மூலமாக, குடைந்து, குடைந்து, பட்டதாரிகளை வேலையில் அமர்த்துவோம். சிபாரிசு இல்லாமல் போகவில்லை. வாழையடி வாழைக் கன்றுகள் வேறே. ஆனா பத்துக்கு எட்டு தேறும். சூட்டிகையாக ஆடிட் செய்வார்கள். பிள்ளையார் சுழி போடுவது இவர்கள் தாம். தற்காலம், பயிற்சிகள் / பரிட்சைகள் முடித்து ஒரு படி மேல் உள்ளவர்களும், ‘முள்ளுப்பொறுக்கி சாமிகளாக’.
முப்பது வருடங்கள் கடந்தபின்: திரு. சி.ஜி. சோமையா என்ற ஆடிட்டர் ஜெனெரல்; குடகு நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் மூடி, மெழுக முடியாது. அவரும் உள்ளது உள்ளபடி பேசுவார். எனக்கு அவ்வப்பொழுது crazy ideas வருவது தொட்டில் பழக்கம். இந்தப் பொது கணக்குக் குழு, நாம், நெற்றி வியர்வை நிலத்தில் விழ, உழைத்து, உழைத்து தரும் ரிப்போர்ட்டுகளில், சிலவற்றை மட்டும், அதுவும் தாமதமாக அலசுவதால், ரிப்போர்ட்டுகளைச் சுருக்கி, புல்லட் பாயிண்ட்டுகளாய் அனுப்பினால் நலம் என்று கருதி, ஒரு ரிப்போர்ட்டின் பவர் பாயிண்ட் பிரெஸெண்டேஷனை அவரிடம் காண்பித்தேன். அதன் பூரணத்தை மெச்சிய அவர் சொன்னார், ‘ஸுந்தர்! எறும்புகள் தானியம் சேகரிப்பது போல், நம் ஆடிட்டர்கள் கொணர்ந்ததை இப்படி வெட்டி முறித்தால், அவர்களின் ஆர்வம் குறைந்து விடும்.’ பாயிண்ட் மேட் என்று ஒத்துக்கொண்டேன். இன்று அவர் நம்மிடையே இல்லை. இருந்தால், ‘முள்ளுப்பொறுக்கியார்’ கண்டு மகிழ்ந்திருப்பார்.
ஒரு அலுவலகத்திற்கு போய்த் தணிக்கை செய்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன, என்ன? மந்திரங்களும் தந்திரங்களும் உண்டா? செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது யாது? எப்போது அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்; எப்போது மறியல் செய்ய வேண்டும்? எப்போது டேக்கா காட்ட வேண்டும்?, இந்த மாதிரியான FAQவுக்கு நான் பாடம் எடுப்பது உண்டு. புல்லட் பாயிண்ட்களின் முதல் பத்தில் ஐந்து இங்கே, சான்றுகளுடன்:
=;1. முதலில் அடித்தளப் பாடம்: பேஸிக்ஸ்: நம்மால் எல்லாத் துறைகளையும் தணிக்கை செய்ய இயலும் என்ற அசையா தன்னம்பிக்கை, திறந்த மனத்துடன் அணுகும் முறை, வினா – விடை பயிற்சி, வைக்கோல் போரில் ஊசி தேடி எடுக்கும் திறன் + என்ன? (அதிர்ஷ்டம்!);
=;2. ஹோம் ஒர்க்: தணிக்கை செய்யப் போகும் அலுவலகத்தைப் பற்றிய ஆவணங்கள், முன் வந்த தணிக்கை படிப்பினைகள், அத்துறை சம்பந்தமான தகவல் தொகுப்பு / அலசல் ஆகியவை;
=;3. டீம் ஒர்க்: மத்திய அலுவலகத்தில் இருக்கும் ஏணி, டேரா போட்டு ஆடிட் செய்யும்போது, வளைந்து கொடுக்கும். வேலைப் பங்கீடு செய்யப்பட்டு, உரிய மேற்பார்வையுடன் நடக்கும். ராத்திரி எல்லாரும் சேர்ந்து இரண்டாவது ஆட்டம் போவோம். டீ.ஏ.ஜீ யெல்லாம் கொஞ்சம் தூரத்தில். ஆனா, நாம பழகற விதத்தில் இருக்கிறது.
=;4. பணிகளை அணி வகுத்துச் செய்வது: இங்கு மேலாவின் அறிவுரை நன்கு பயன்படுத்தப்படும். பணிகளை அணி வகுத்து செய்வதால், குறைந்த செலவில் நம்பகம் நிறைந்த தணிக்கை இயலும். உதாரணமாக, வரவு செலவை ஒரு துரித கண்ணோட்டம் விட்டாலே பூனை வாங்குவதற்குப் பதில் யானை வாங்கினார்களா என்று தெரியும். பிறகு பால் வாங்காமல், கரும்பு ஏன் வாங்கினார்கள் என்று, கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.
=;5: டெஸ்ட் ஆடிட்: ஒரு அலுவலகத்தின் செயல்கள் முழுவதையும் ஆடிட் செய்ய வேண்டுமானால் (தற்காலம் அது தேவையோ?) ஆடிட் பட்டாளம் இன்று இருப்பது போல் நூறு மடங்கு வேண்டும். வேஸ்ட், ஸ்வாமி. அதனால் முழுமையான ஆய்வு என்று உத்தரவாதமும் கிடைக்காது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம், சில பணிகளில், இரு பருக்கை, சில பணிகளில். எந்தப் பருக்கையை ஊசியால் குத்தி எடுப்பது என்பது பரம ரகஸ்யம், ஆபரேஷன் தியேட்டர் மாதிரி. இங்கே தான் கார்வார் செய்ய வந்த அதிகாரியின் வலிமை, திறன், பழம்பெருச்சாளியின் சாமர்த்தியம். ஆடிட் ஏணியின் ஒவ்வொரு படியிலும் இவர்கள் அஞ்ஞாதவாசம் புரிவார்கள்.
யாராவது படிக்கிறார்களா என்று தெரியவில்லை. கேட்டால், தொட்ட குறை, விட்ட குறை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். என்ன சொல்றேள்?
Karthik wrote on 19 May, 2011, 12:42தொடருங்கள் அய்யா. அரசு விவகாரங்கள் பொதுவாக எங்களைப் போன்ற பாமரர்களுக்குத் தெரிவதில்லை. உங்கள் மூலம் ஓரளவு தெரிந்துகொள்கிறோம். நன்றி.
பவள சங்கரி. wrote on 19 May, 2011, 14:13ஐயா, நேரில் பேசுவது போன்று ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்கின்ற சுவையான எழுத்து. துறை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு மிகப் பயனுள்ள குறிப்புகள். அவர்களையும் சென்றடையும் மார்க்கமும் யோசித்தால் நலம் ஐயா. இதை நான் முன்பும் பல முறை சொல்லியிருக்கிறேன். எங்களைப் போன்ற புதியவர்களுக்கு உண்மையிலேயே மிக சுவாரசியம். புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறதே. நன்றி ஐயா..
geetha sambasivam wrote on 19 May, 2011, 14:18படிக்கிறோமே, நிறையப் பேர் படிக்கிறோம், முள்ளுப் பொறுக்கி நல்லா இருக்காரா?? முன்னாடி சொன்ன தலபுராணமும் நினைவில் இருக்கு.
செல்லப்பா wrote on 19 May, 2011, 16:37தணிக்கை செய்வதற்கு முன்னால் இவ்வளவு முன்னேற்பாடுகளா? நினைத்தாலே தலையைச் சுற்றுகிறது.
No comments:
Post a Comment