தெருக்கூத்து: 5
நவீன சகுனி
அட தேவுடா!
அன்றொரு நாள், பாலப்பருவத்தில், காசில்லாமல் ஹோட்டலில் நுழைந்த கண்ணாயிரம், நினைவலைகளில் மிதந்த கனவலைகளுடன் மேடை ஏறினான், மறு நாள் அந்தி மயங்கிய பிறகு. சுற்றுமுற்றும் பார்த்தான், சாளேசுவரமா!, கண்களை இடுக்கியபடி. நாரதரை காணவில்லை. மயில் ராவணன் சுற்றத்தில் ஒரு குடும்ப தாவா. ஐயா தான் ஆர்பிட்ரேஷன்: மத்தியஸ்தம். படா ஜோக். அப்றம் வாரேன்.
கண்ணாயிரம் என்ற கோமாளி தான் இன்று செண்டர்-ஸ்டேஜ்.
“ஓட்டலிலே, பிராமணாள் ஓட்டலிலே, காசில்லாமல்
இட்லி ஆர்டர் செய்தேன் நானே!
சட்னியும் கேட்டு வாங்கிக்கொண்டேன்.
இட்லியை திருப்பிவிட்டேன், சட்னி இலவசமே!
அதை கேட்டு ரசித்த மகாஜனங்கள் பலமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அவர்கள் சார்பில், ரங்கோன் தெரு முந்திரிக்கொட்டை முத்துச்சாமி அடியெடுத்துக்கொடுத்தான்.
‘வானம் பொழிது! பூமி விளையுது!
பரங்கிக்கு ஏதடா கிஸ்தி?’
இனி உரையாடல். நாடகம், தெருக்கூத்து, சாக்கியார் கூத்து, யாதாயினும், இத்தகைய அருமையான இண்டெரேக்டி அளவளாவுதல் அபாரம். ஒரு ரகசியம்.
ரங்கோன் தெரு முந்திரிக்கொட்டை முத்துச்சாமி ‘ஏனோ தானோ’ என்று வந்தவன் அல்ல. அவன் முதலாளியம்மாவின் உள்கை. அவள் அவனுக்குத் தனியாக படியளப்பாள். அவனும் அவளுக்கு ரகசியமாக ரம் வாங்கி வருவான். இதெல்லாம், அன்று மத்தியானம், அவள் ஆணைப்படி, ஒத்திகையான சீன் தான். ஸ்பாட் ஃபிக்ஸ்ட். ஆனால், இல்லீகலில்லை.
கோமாளி: முந்திரிமுத்து! ரொம்ப தேங்க்ஸ். இன்னிக்கி ராஜா ஹரிச்சந்திரா நாடகம்டா. கட்டபொம்மன் ஒத்து வராது. மெட்டெடுக்கிறான்.
முத்து: அண்ணா! மெட்டெடுக்காதே. கதை கேளு. ஹரிச்சந்திராவும், நக்ஷத்ரயனும் என்று நான் ஒத்துப்பாட்றேன். நீ மெட்டெடுக்கிறே. மன்னார் சாமி பெருமாளே! இது அடுக்குமா?
கோ: மஹாஜனங்களே! முத்தான கதை வருது. (சோடா ஊத்திக்கிறான்).
முத்து: நம்ம லேவாதேவி செட்டியார் ஊரில் இல்லையா. மாங்குடி மைனர் கிட்ட வாங்கின லோனை திருப்பிக்கொடுத்துட்டேன். அவருடைய ராயசம் கிட்டா வந்து வட்டி கேக்குறான். நியாயமா, அண்ணே?
கோ: துட்டுக்கு வட்டி உண்டுடா, லோகிதாசா! அவரு கந்து வட்டி கேக்கலியெ. கொடுத்துடு.
முத்து: அண்ணாச்சி. இது கதையல்ல. நிஜம். செங்கல்பட்டு ரோடு இஞ்சினீயர் கிட்ட, சிறுசேரி-மகாபலிபுரம் ரோடு போட நிலம் ஆர்ஜிதம் செய்யணுமில்லையா, அதற்கு 30 கோடி ரூபாய் கொடுத்தாரு, பெரிய இஞ்சினீயர். தாசில்தாரும் கருவூலத்திலிருந்து, அந்தப் பணத்தை வாங்கி, செங்கல்பட்டு ரோடு இஞ்சினீயர் கைலெ கொடுத்துட்டாரு. செலவுக்கு முன்னால் அதை அரசு கணக்கிலே தனியா வைக்கவேண்டும் என்று ரூல் இருக்குது....
பொறுமை இழந்த மாதிரி நடித்த கோ: ‘ தம்பி! அதுக்கென்ன இப்போ? நாம மயானத்துக்குப் போவோம். சந்திரமதி துடிக்கறதை பாரு.
மு: அண்ணா! நக்ஷத்ரயன் தேவலை. செங்கல்பட்டு ரோடு இஞ்சினீயர் அந்தப்பணத்தை தன் சொந்தக்கணக்கிலே போட்டுக்கினாரு.
கோ: நல்ல வேளை. வீட்டுக்காரி கணக்கிலெ போடலை, பாரு. அவரு யோக்கியமான மனுஷரு.
மு: ஆமாங்க. எஃப்.டி. போடாம வச்ச யோக்கியதை தான். ஆனால், அது கூட தப்புங்க!!!!!! ஆடிட்டர் ஜெனெரலு சொல்றாரு:
- சொந்த கணக்கிலெ வச்சது தப்பு;
- அதுவும் மூணு வருஷம் ஏழு மாதம். இது அடுக்குமா? அவருக்கு வந்த வட்டி 3.99 கோடி. என்ன செய்யலாம். ஏது செய்யலாம், எப்படி செய்யலாம் என்று மடலாடி, மடலாடி, அதை வைத்துக்கொண்டிருந்தது தப்பு. படா டிரிக்கு!
- 7.3 /7.7% வட்டிக்கு வாங்கின கடனுக்கு 3.5% வட்டி வரவு. அதுவும் அரசு கைக்கு வரவில்லை. ‘தப்பு! தப்பு! தப்பு! நஷ்டம் ரூபாய் 4.07 கோடி.
- இது பற்றி நாங்க கேட்டதற்கு ஆறு மாசமா பதில் இல்லை. தப்பு. அதான் ஆடிட் ரிப்போர்ட்லெ போட்டுட்டோம்.
கோ: என்னா சொல்றே, முத்து! இப்படி நடக்குமா என்ன? லைட் மங்குதடா! மின் வெட்டு வந்து விடுமடா. ஆதாரம் சொல்லட்டா, அடிச்சுப்பிடுவேன். ஆமாம்!
மு: அண்ணா! இது 50-51வது பக்கம்; பத்தி 3.3.1. ஆடிட் ரிப்போர்ட் தமிழ்நாடு. அந்தப் பக்கத்தில் விநோத் ராயே கையொப்பமிட்டாரு, மார்ச் 5, 2013.
(Report No. 4 of 2013 Government of Tamilnadu - Report of the Comptroller and Auditor General of India on Economic Sector: ஜி+ மாதிரி பப்ளிக்.)
கோ: அதை சொல்றரையா. நான் படிச்சுட்டேன். எத்தனை பேத்துமாத்துக்கள். காசு பணமட்டுமா? போக்குவரத்து புள்ளிக்கணக்கு எடுக்கறதிலெ பொய்யு. நாலு ரிப்போர்ட்டுகள், தம்பி. எக்கச்சக்க சேதி தம்பி.
கதையும் முடிந்தது; கரெண்டும் போயிடுத்து.
[நக்ஷத்ரயன்: வரவேண்டிய பணத்தைக் கறாராகக் கேட்கும் கதாபாத்திரம். ராயசம்: கணக்குப்பிள்ளை]
No comments:
Post a Comment