இன்னம்பூரான்
28 05 2013
‘... வீணை மீட்டுவது போல் ஒரு இனிய நாதம். அவரவர்கள் ஒதுங்கிய இடத்திலிருந்து, ஒட்டைச்சிவிங்கி போல் கழுத்தை நீட்டி, செவி சாய்த்தனர்...’
திரிலோக சஞ்சாரியும், திமிலோக கலகாதிபதியும், தற்கால அரசியல் சுவாமியின் சாயலுமான (நவீன) நாரத மாமுனிவர் உமையம்மையின் ஊடலை தணிக்க, பிறிதொரு கிருத்திரமாக கைலாயத்தை ‘அரக்கன் பெயர்ப்ப’ வகை செய்துவிட்டு, திருவரங்கனை அரங்கநாயகியிடம் பிடித்துக்கொடுத்து விட்டு, மலர்மாலைகள் தரித்து, வண்ண வண்ணமான வஸ்தராபரணங்களை அணிந்து, தனது நவீனத்தை குறிப்பால் உணர்த்த, கிட்டார் வாசித்துக்கொண்டு, மன்னார்சாமி கோயில் வாசலில் பிரசன்னமானாரே. இனிய ஒலியும், ஓசையும், அசையும், இசையும் மங்கலம் என்றாலும், அவர் எடுத்துவிட்ட ‘உதார்கள்’ சாமான்யப்பட்டவை அல்ல. ‘கப்பல் வாங்கின கதை தெரியுமோ?’ என்றவர் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பாட்டிசைத்தார்.
‘அஞ்சு கோடி கொடுத்தான் மவராசன்;
சுங்கம் கட்டினது மூணு கோடியாம்.
பொங்கப்பானை வச்சாஹ. மீனும் பிடித்தாஹ.
‘மங்காத்தா! மங்காத்தா! மங்காத்தா!’
ஒத்துப்பாடினது ரங்கோன் தெரு முந்திரிக்கொட்டை முத்துச்சாமி.
‘தனிப்பெரும் நாடு இந்திய நாடு.
கண்ணி வச்சுலெ பிடிக்கிராக. மத்ராஸ்
அண்ணாச்சியை பாம்பேயில் வச்சு, டெல்லி பாபுவை
கண்ணாமூச்சி ஆட்டமாடி, பெங்களூரிலே, மல்டிலேயரை
மலையாளத்திலே பிடிக்கிறாங்க.’
மல்டியென்றவுடன் ஜல்தியாகவே பல்டியடிச்ச கொல்டி தேவுடு சொன்னதை கேளும், பிள்ளாய்.
‘நானோ ஒரு அப்பாவி. மல்டிலேயர் அப்பளத்தை அப்பனுக்கே அம்பது மடங்கு விலை கூட்டி வித்த மாபாவி. மன்னார் சாமி கோயிலிலிருந்து தொலைவு அதிகமில்லை. கண்ணாஸ்பத்திரி முன்னாலே அஞ்சு மாடி மாளிகையாம், மல்டிலேயர் ஆஃபீஸாம். சோப்பு, சீப்பு, கண்ணாடி, ஷாம்பூ, மல்டி விடமினு, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாத்தையும் சுகுமாரி பொண்ணு சொல்லிச்சுன்னு அம்பாதியிரம் ரூபாய்க்கு வாங்கிப்போட்டேன். அதை நாலு லக்ஷத்துக்கு வித்துடலாம், அப்டி, இப்டினு பாடம் எடுத்தாங்க. கோகோ கோலாவும், வறுத்த முந்திரியும் கொடுத்து ஏமாத்திப்பிட்டாங்க. வவுத்தை பசிக்குது. லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி சாப்பிடமுடியுமா? கல்யாணமானாலும், கருமாதியானாலும், ஜோல்னா பையில் சோப்பு, சீப்பு, கண்ணாடி, ஷாம்பூ, மல்டி விடமினு, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் அள்ளிப்போட்டுகிணு போயிடுவேன். அக்காவிடம் ஒண்ணு, தம்பியிடம் இன்னொண்ணு, அம்மா, அப்பா எல்லார்கிட்டேயும் தந்திரமா பேசி, வித்துடுவேன், கன்னா பின்னான்னு விலையேத்தி. எங்கிட்டே கமிஷன் அடிச்ச சுகுமாரி, அவளோட எசமான் கரீம் எல்லாரும் டாடாசுமோ பவனி. பெரிய எசமான்களை போலீஸ் பிடிச்சுட்டாங்களாம். எனக்கு தான், உறவுகள் முறிந்தன. சொந்தக்காரங்க அடிக்க வராங்க.’.
தேவுடு அழுது புரண்டான். ராமுடு கேட்டான், ‘ஏண்டாப்பா? ஆம்வேஸ் பிரச்னையா/’
கரை கடந்து போகும் கதையை சமாளிக்க, நாரதர் எடுத்து விட்ட புராணம். கேளுமையா.
‘லேட்டஸ்டு ந்யூஸ் பிசினஸ் ஸ்டேண்டர்ட் நாளிதழில். அதற்கு மேல் சொல்ல மாட்டேன். எந்த புற்றில் எந்த பாம்போ? மூளைச்சலவையுடன் நிற்காமல் துட்டுச்சலவையும் செய்தார்கள் என்று மலையாள போலீஸ் ஒரு மல்டி அடுக்கு கம்பேனியின் வெள்ளைக்கார நம்பர் ஒன்னையும், அம்ஷுமான், சஞ்சயன் இருவரையும் கைது செய்தார்கள் நேற்று. கல்பேட்டா ஜட்ஜ் அவர்களை இருவாரம் கொட்டடி விசாரணை செய்ய அனுமதித்தார். வித்ரீ சப்ஜெயிலில் அடைத்தார்கள். வயநாடு கோர்ட்டு இன்று அவர்களுக்கு ஜாமீன் கொடுத்த பின் கம்பெனி சொல்லுது: ‘சட்டத்தையும் நீதியையும் போற்றுகிறோம். அண்ணன்மாருக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியே. நல்லதே நடக்கும்.’
சினம் தணியாத தேவுடு கேட்டான், ‘எதற்காக கைது செய்தார்கள். சட்பிட்னு சொல்லும்.’
நாரதர் உரைத்தது:
‘2011ல் வயநாடு கோர்ட்டில் ஒரு சூதுவாது வழக்கு. ஆனால் அண்ணன்மார் வந்தது வேறு ஒரு வழக்கு: விசாலாக்ஷி போட்டது, ‘ஏமாத்திபிட்டாக’ என்று. மேலும் மூணு புகார் காண்டங்கள். கன்னா பின்னா விலை, மல்டி அடுக்குத் தரகு, மல்டி அடுக்கு ஏமாற்றல். அடிச்ச பணம் 48 கோடி என்று போலீஸ் சொல்கிறதாம். நுகர்வோர் புகார்களை சூதுவாது என்று சொன்னது அநீதி என்கிறதாம் கம்பேனி. 106 நாடுகளில் கொடி கட்டி பறக்கும் இந்த கம்பெனி இந்தியாவில் 140 ஜாமான்களை விற்கிறதாம். அதில் அப்பளம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அட தேவுடா?
Image Credti; http://amazingmaterial.com/wp-content/uploads/2012/06/Guitar-HD-Wallpaper-36.jpg
No comments:
Post a Comment