Monday, May 27, 2013

தெருக்கூத்து -3 ‘நவீன சகுனி’


தெருக்கூத்து -3 ‘நவீன சகுனி’

Innamburan S.Soundararajan Mon, May 27, 2013 at 4:05 PM

தெருக்கூத்து -3
‘நவீன சகுனி’
Inline image 1


எதிர்பாராத விதமாக சத்சங்கத்தின் ரகசியகூட்டம் ஒத்திப்போடப்பட்டதாம். தலைமை தர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு அவர்களின் வீட்டில் ஏதோ விசேடம் என்று சொல்லப்பட்டாலும், அவருடைய தீவிர ஆதரவாளர்களான மாங்குடி மைனர் ராமுடு ஐயர், ஹிட்லர் மீசை நாச்சியப்பன், கட்டாரி கனகவேல், ஆஸ்தான நர்த்தகி ஜம்புகேஸ்வரி, தளிகை நச்சு ஆகியோர், சிகண்டி படையெடுப்பால் அஞ்சி, நடுங்கி, அகண்ட பாரதத்தின் அடிலாபாத், கரிவலம் வந்த நல்லூர், கூத்துப்பிரம்பா, ஹம்பி, ஷோலாப்பூர் ஆகிய ஊர்களின் மூலை முடுக்குகளில், சந்து பொந்துகளில் அஞ்ஞாத வாசம் செய்து வந்தபடியால், அவரவர் புஷ்பக விமானங்களில் ஏறமுடியவில்லை என்ற ஹேஷ்யம் ஆடிட் ரிப்போர்ட் ஊடகச்செய்தி போல தீவலம் வந்தது. மஹாஜனங்களே, சத்லீக்ஸ் போஸ்ட்போன்ட். வெயிட்டவும்.

எல்லாம் கர்மபயன்! பலத்த மின்வெட்டு.  ‘ஆதார்’ கார்ட் கிடைக்காததால், நம்ம தீவக காண்டிராக்ட் திம்மனுக்கு காஸ் கிடைக்கவில்லை. அவரும், மற்ற விளக்குத்தூக்கிகளும் மாயமானார்களே. கும்மிருட்டு. பிக்பாக்கெட் பரந்தாமனின் சிஷ்யகோடிகள் சுறுசுறுப்பாக இயங்கவே, கூட்டம் தானாகவே கலைந்தது. ஆகமொத்தம் தெருக்கூத்து ஒத்திப்போடலாச்சுது. திடீரென்று ஒரு கலவரம். சனிமூலையில் ஒரு எதிரொலி. கீதா சொன்ன எதிரொலி. அண்டம் கிடுகிடுக்க, பண்டமெல்லாம் உருண்டு விழ, சண்டமாருதம் பலமாக வீச, இடி முழங்கியது. பின்னர் ஒரு அசாதாரண அமைதி. வீணை மீட்டுவது போல் ஒரு இனிய நாதம். அவரவர்கள் ஒதுங்கிய இடத்திலிருந்து, ஒட்டைச்சிவிங்கி போல் கழுத்தை நீட்டி, செவி சாய்த்தனர். அவர்களில் நானுமொருவன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? 
சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilisaisangam.in/Gallery/Instruments/thumbs/14.jpg

(?)

இன்னம்பூரான்

27 05 2013 

No comments:

Post a Comment