Tuesday, May 28, 2013

9. தணிக்கையறிக்கை எனப்படுவது…!


தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 9




தணிக்கையறிக்கை எனப்படுவது…!
இன்னம்பூரான்
Friday, May 27, 2011, 20:14
தமிழிலக்கணத்திற்குத் தொல்காப்பியம் அரியதொரு மூலமாக விளங்குவது போல், தணிக்கைக்கு ஆடிட் கோட் ஒரு தொல்காப்பியம் என்க. அது தான் எங்கள் பால பாடம். அந்தச் சிறிய கையேடும் அதன் துணை நூல்களும் பயிற்சி மன்றங்களும், தலைமுறை தலைமுறையாக விளங்கும் குரு-சிஷ்ய பரம்பரை திண்ணைப் பள்ளிகளும், தணிக்கைத் துறையின் தூண்கள் எனலாம். தொடக்கத்துடன் முரணில்லா முடிவும், தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும் திறனும், விரிய உரைக்கும் வகையிலான பொருத்தமும், நுண்ணிதாகப் பொருளை விளக்கும் தன்மையையும் தணிக்கை அறிக்கைகளில் இலங்கும் தொல்காப்பியப் பண்புகள் என்றும், அந்த உயரிய நிலைக்கு ஆடிட் கோட் தான் வித்து என்றும் கூறினால், மிகையல்ல.
1897 வருடத்து முதல் பதிவிலிருந்து 1991 வரை திருத்தப்பட்டு வெளியான ஆடிட் இலக்கண நூல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். 1997இல் சென்னை வந்திருந்த அக்காலத்து ஆடிட்டர் ஜெனரல் திரு.வி.கே.ஷுங்லுவிடம், அவற்றை ஆடிட் கருவூலத்திற்காக அளித்தேன். அவருக்குப் பரம திருப்தி. டில்லியில் இருக்கும் ஆடிட் கருவூலம், இவற்றை நன்றாகப் பராமரித்து வருகிறது.
தணிக்கை அறிக்கைகளில், பிறகு வருகை தந்த அருமையான வழிகாட்டி நூலாகிய நன்னூல் விதிக்கும் இரு பாயிரங்களும், ஏழு வகை எழுதும் கோட்பாடுகளும், பத்து வகை அழகுப் பொருத்தங்களும், திறம்பட அமைத்த 32 உத்திகளும் காணக் கிடைக்கும். பத்து வகைக் குற்றங்களையும் தவிர்க்கப் படாத பாடு படுவோம். ஒரு மஹாபாரத யுத்தமே நடக்கும்! நன்னூலின் மையச் சூத்திரமான, ‘சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்’ தணிக்கை அறிக்கைகளுக்கும் சூத்திரம்; அரிமா நோக்கம் விரவி நிற்கும்; ‘தவளைப் பாய்த்து பருந்தின் வீழ்வு’ தணிக்கையின் நுண்கலை என்க.
Andhra_audit_report_1978
ஆனால் ‘ஆற்று ஒழுக்கு’, இந்த ‘குற்றப் பத்திரிகைகளில்’ தென்படுவது அரிது. 2ஜி பற்றிய அறிக்கையில் அது ஓரளவு காணக் கிடைத்தது நலமே. சில சமயங்களில், ரிப்போர்ட்டின் தலைகால் புரிவதில்லை. மொழிப் பிரச்சினை! எல்லா அறிக்கைகளும் (ரிப்போர்ட்), ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்; பொருத்தமாகச் சில, பிராந்திய மொழிகளிலும். ஆனால் துரைத்தனத்தாரின் இங்கிலீஷ் / தமிழ்! புள்ளிவிவர நடனங்கள் வேறே அலுப்புத் தட்டும். போதாக்குறைக்கு, தணிக்கை கட்டுக்கோப்புக்கள் (caveats).
மக்களாட்சியின் ஆணிவேர் தணிக்கை முன்கொணரும் ஆய்வுகள் என்பதில் ஐயமில்லை. எனவே, வாசகர்களே! புடம் போட்டு எடுத்த இந்தத் தணிக்கை அறிக்கைகளை ஊடகங்களும் பாமர மக்களும் சரிவர புரிந்துகொள்ள, ஆவன செய்ய உங்கள் ஆதரவு வேண்டும்; புரிதலின் பயன் கருத்துகள் மூலம் தெரியவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் தான், பிரதிநிதித்துவ ஜனநாயகம் செழிக்கும். சுருங்கச் சொல்லின், மக்களுக்குத் தீங்கு விளைப்பவர்களை, ‘நாக்கைப் பிடுங்கிக்கிறாற்போல் நாலு கேள்வி கேட்க’ இயலும். தடம் புரண்டு, அரசு ரயில் கவிழாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
நன்னூல் முன்னிறுத்தும் ‘…தொகுத்துரை, உதாரணம், வினா விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன் ஓடு, ஆசிரியவசனம்…’ ஆகியவற்றை, தணிக்கை அறிக்கையின் முதல் பாயிரமாகிய அணிந்துரையில் காணலாம். ஏன், எதற்கு, எங்கு, எவ்வாறு தணிக்கை செய்யப்பட்டது?, சான்றுகளின் பின்னணி, வினவியதும், வந்த / வாரா விடைகளும், தமது தகுதியும், அரசியல் சாஸனம் அருளிய அதிகாரமும் இங்கு உள்ளடக்கம்.
Gujarat_audit_report_1985
அடுத்து வரும் பாயிரம், அறிக்கையின் சாராம்சம், பத்துப் பக்கங்களுக்குள். தணிக்கை செய்யப்பட்ட துறையின் தல வரலாறு, முதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேலாக, அவற்றின் ‘இன்னது அல்லது இது என மொழிதல்’ ஆய்வாளர்களால் மெச்சப்படுகிறது. தொடர்ந்து வரும் அத்தியாங்களில், உகந்த தலைப்புகளைப் பின்பற்றி, அந்தந்த மாநில அரசு / துறையின் நிர்வாஹம், வரவு செலவு அலசல், செயல்பாடுகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்ததன் பலாபலன்கள் கூறப்படும். சான்றுகளுடன் வரைபடங்களும் சித்திரங்களும் தேவைப்படி இடம் பெறலாம்.
இந்த ரிப்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் அதைத் தயாரித்த முதன்மை கணக்காயரின் கையொப்பமும் இந்திய தணிக்கைத் துறை தலைவரின் கையொப்பமும் இருக்கும். அனுபந்தங்கள் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும்.
முள்ளுப்பொறுக்கியார், எறும்புகள் சேகரித்த தானியங்களைப் போன்ற தணிக்கைக் கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றை வடிகட்டி, வஸ்த்ராயனம் செய்த மூலிகை உருண்டை பிடித்து, அதையும் புடம் போட்டது தான், ஆடிட் ரிப்போர்ட். இந்தத் தொடர்நிலைப் பணி ‘பெண்டு நிமிர்த்து விடும்’ அது பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இன்றைய நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஆடிட் ரிப்போர்ட்களின் எண்ணிக்கை, அகில இந்திய அளவில்: 70. எந்த அளவுக்கு பொதுக் கணக்குக் குழுக்கள் அவற்றைப் பரிசீலனை செய்யும் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. வரலாறோ நம்மைச் சோர்வடைய செய்யும். ஏனெனில், பரிசீலனைக்கு வராமல் கருச்சிதைவான ஆடிட் ரிப்போர்ட்டுகளின் பகுதிகள் ஏராளம்.
ஜனநாயகம் வாழ்க!
(தொடரும்……….
============================
படங்கள் உதவி: கீதா சாம்பசிவம்

Published:http://www.vallamai.com/?p=3509


  • பவள சங்கரி. wrote on 28 May, 2011, 7:42
    அன்பின் ஐயா,
    எத்துணை அரிய பணி, தங்களுடையது. தங்களுடைய அறிமுகம் கிடைத்தது எத்தகைய பேறு எங்களுக்கு என்பதையும் எண்ணும் பொழுது உள்ளம் பூரிக்கிறது ஐயா. இது போன்று அரிய தகவல்கள் நிறைய வழங்க ஆண்டவன் தங்களுக்குப் பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க மனதார பிரார்த்திக்கிறோம். நன்றி.
  • தமிழ்த்தேனீ wrote on 1 June, 2011, 0:19
    மக்களாட்சியின் ஆணிவேர் தணிக்கை முன்கொணரும் ஆய்வுகள் என்பதில் ஐயமில்லை என்பதை உங்கள் ஆய்வு அறிக்கை நிரூபணம் செய்கிறது.
    அன்புடன்,
    தமிழ்த்தேனீ.

No comments:

Post a Comment