’பலப்பரிட்சை’ என்ற இந்தக் கட்டுரை, KARNATAKA LOKAYUKTAவின் No. COMPT/LOK/BCD/89/2007. Dated 27th July, 2011 என்ற ஆவணத்தில் இருக்கும் REPORT ON THE REFERENCE MADE BY THE GOVERNMENT OF KARNATAKA UNDER SECTION 7(2-A) OF THE KARNATAKA LOKAYUKTA ACT, 1984 (PART – II) என்ற அறிக்கையினுடைய சாராம்ச சுருக்கத்தின் முதல் பகுதி. இதனைச் சிரமம் பாராமல் வல்லமைக்காக மொழி பெயர்த்து, கட்டுரையாக்கிய இன்னம்பூரான் அவர்களுக்கு நன்றிகள். இந்தக் கட்டுரை தொடர்பாகவும் தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை என்ற பத்தி தொடர்பாகவும் வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம். – ஆசிரியர்.
பலப்பரிட்சை
இன்னம்பூரான்
Monday, August 1, 2011, 15:27
தனிமனிதர்களை சாடுவதற்காக, இங்கு மகாகவியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து, ‘பேயரசு புரிந்தால், பிணந் தின்னும் சாத்திரங்கள்..’ என்ற உவமை எடுத்துரைக்கப் படவில்லை. சாத்திரங்கள் பிணம் தின்றதால் தான், மக்களாட்சி என்ற சால்வையை அணிந்து கொண்டு, கூளிகள் ஆட்சியை தட்டிப் பறித்தனர் என்ற பேருண்மையை கர்நாடகாவின் லோகாத்யட்சாவின் ‘சுரங்கச் சுரண்டல்’ 464 பக்க அறிக்கை (27/07/2011) பறை சாற்றியதை, எடுத்துரைக்கவே, இந்த உவமை என்க. அதன் விளைவாக, திரு.பி.எஸ்.எடியூரப்பா, இழுபறிகள் பல அரங்கேற்றம் ஆன பிறகு, துக்கம் அடைத்த நெஞ்சின் குமுறலுடன், முதல்வர் பதவியிலிருந்து விலகிய செய்தியும், அந்த ‘தியாகத்திற்கு’ அவரிட்ட நிபந்தனைகளும், பதவி வேட்டையும், ஒரு குறுக்கு சந்து தடாலடியும், ஆகஸ்ட் 31 அன்று வெளியாயின. இந்த தகவல்கள் பொதுமன்றத்துக்கு வரும் வரை, லோகாத்யட்சாவின் அறிக்கையை அலசுவது உகந்தது அல்ல. அதனால், சற்றே தாமதம். அதை வாசகர்கள் மன்னிப்பார்களாக.
நாம் அரசியல் கட்சிகளின் சார்பற்றவர்கள் என்பதால், இரு விஷயங்களை முன்கூட்டி சொல்லி விட வேண்டும். ஊழலும், லஞ்சமும், கறுப்புப் பணமும், வெளி நாடுகளில் அதன் முடக்கமும், நீதிமன்றங்கள் முன் வழக்குகளும், சிறை புகுந்த பிரபலங்களும், இவற்றை எதிர்க்கும் மக்கள் சக்தியின் பன் முகங்களும், ஆ.ராசாவிடமிருந்து ‘கை நாட்டு’ விருது பெற்ற தணிக்கைத் துறையின் அறிக்கைகளும், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவை. அடுத்தபடியாக, உச்ச நீதிமன்றத்தை துச்சமாக மதித்து, சட்டத்தை அசட்டை செய்து, 49 லாரிகள் பெல்லாரியில் இரும்பு தாதுவை ஏற்றி புறப்பாடு செய்த அவலம், லோகாத்யட்சாவின் ‘சுரங்கச் சுரண்டல்’ அறிக்கை வெளியான பிறகு நடந்தேறியது.
சுருங்கச் சொல்லின், இந்த ஆய்வு அரசு கேட்டதே; எடுத்த எடுப்பிலேயே, இது அக்கவுண்டெண்ட் ஜெனெரலின் 2003 -4 & 2003-2004 வருட ஆட்சேபனைகளை ‘கிடப்ஸ்’ஸில் போட்டதின் பின் விளைவுகளை முன்னிறுத்துகிறது. அடி உதைக்கு அஞ்சாத அரசு அதிகாரிகள் சிலரின் அயராத பணியின் பரிசிது. இது இரண்டாவது அறிக்கை.(முதலாவது: டிசம்பர், 18, 2008). முதல் அறிக்கையின் பரிந்துரைகளை அரசு கண்டு கொள்ளவில்லை என்றும், சட்டமீறல்கள் அதிகமாயின என்றும், அரசு மேற்பார்வை முழுதுமே ஒழிந்த நிலையில் என்றும், லோகாயுக்தா விசனம் தொனிக்க உரைத்துள்ளார். தென் பாண்டி சீமை பேச்சுத் தமிழில், ‘இவரு ஒரு வேஸ்ட்!’ வேலைக்காவாது’, தருமமிகு சென்னை பாஷையில்!
சட்ட திட்டங்கள், அவைக்குட்பட்ட விதி முறைகள், அன்றாட நடை முறைக்கேற்ற ஆணைகள், நீதி மன்றத் தீர்வுகள், ஆடிட் முடிபுகள், எல்லாவற்றையும், வருடக் கணக்காக, சகட்டு மேனியாக, மீறிய சாகசத்தின் வரலாறு, இந்த அறிக்கை. மறுக்க முடியாத சான்றுகள். கின்னஸ் ரிகார்டில் பதித்தால், அப கீர்த்திகளில் முதலிடம் பெறும், இந்த சுரங்கச் சுரண்டல். முதலில் ‘அறிமுகம்’ என்ற பகுதியில், சட்டம், விதி, ஆணை, ஆவணங்களை பற்றிய விவரங்கள் உள்ளன. இனி பட்டியலிட்டால் தான், இந்த அலங்கோலத்தின் பரிமாணம் புரியும்.
1.கிட்டத் தட்ட கடந்த 50 மாதங்களில் 3 கோடி டன் இரும்பு தாது, சட்ட விரோதமாக ஏற்றுமதியாயின. வருடா வருடங்களுக்கான சராசரி விலையின் அளவு கோல் படி, இதன் மதிப்பு ரூ. 1,22,28,14,22,854/-. அப்படீங்களா? நாங்களெல்லாம் அன்றாடம் காய்ச்சிகள். ரூவா கணக்கு ஏற மாட்டேங்குது?
[2006/7: 32 லக்ஷம் டன்: 2007/8: 37 லக்ஷம் டன்: 2008/9: 54 லக்ஷம் டன்;2009/10: 128 லக்ஷம் டன்; 2010: முதல் மூன்று மாதங்கள்: 48 லட்சம் டன்]
இரும்பு தாது நடக்குமா என்ன? லாரி சவாரி. அதற்கு பெர்மிட் வேண்டும். அது கணக்கில் பதிந்து விடும். (ஆடிட்காரன் உயிர் போகும் வேளையில் மென்னியை பிடிப்பான்.) எனவே மூன்று துஷ்பிரயோகங்கள்: 1.ஓவர் லோடு;2. கள்ளக் கடத்தல்;3. கள்ள பெர்மிட். ஜோர். சான்று: 3 லட்சம் டிரிப்களில் அலசல்.
ஜூலை 2010லிருந்து ஏற்றுமதி தடை செய்யப்பட்ட பின் 17,58,336 டன்கள் அனுப்பபட்டன. அதில் 14,85,076 டன்கள் கிருஷ்ணாபுரம் போர்ட் கம்பெனியால். இது புலன் விசாரணைக்குகந்த சமாச்சாரம். சான்று: தேதிகள்/கப்பல்கள்/கம்பெனிகள் ஜாபிதா.
32,44,219 டன்கள் வந்த வழி, போன வழி தெரியவில்லை. ராஜா அரிச்சந்திரர்கள் கூக்குரலிடக் கூடாது என்று அவற்றை அத்துடன் விட்டு விட்டார்.
பணமென்னவோ பாதாளம் மட்டும் பாயும். பெப்ரவரி 2011இல் லோகாயுக்தா பேலகிரியில் பறிமுதல் செய்த பிறகு தான் உச்சக் கட்ட சட்ட மீறல்: 130 லட்சம் டன்கள். இது வரை பலப் பரிட்சையில் வாகை சூடியது, அப கீர்த்தி மன்னர்கள்.
யந்திரஙகள் துஷ்பிரயோகம்~ கணினி, லாரி, கப்பல் இத்யாதி. மந்திரஙகள் துஷ்பிரயோகம் பெர்மிஷன் இல்லாத பெர்மிட்டுகள், சான்றில்லா ஆவணங்கள். தந்திரஙகள் துஷ்பிரயோகம்~ ஆந்திரப் பிரதேசத்து மொத்த லாரி பெர்மிட்டுகளின் நகல்களை வைத்துக் கொண்டு கர்நாடகாவில் லாரி சவாரி! பேஷ்!
மணியோசை (பெர்மிட்டு) வரும் பின்னே! ஆனை (லோடு) வரும் முன்னே! {கர்நாடகாவோல்லியோ! ஆனை ஒடி வருது!}
லோகாத்யட்சா கம்பெனிகளிடமிருந்து பறி முதல் செய்த விவரங்களில் அடக்கம்: ‘துறைமுகம், கஸ்டம்ஸ், போலீஸ், தாது இலாகா, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோருக்குக் கொடுத்த மாமூல். மாமூல் வழி முறைகள், ரேட் கார்டு.
லஞ்சமாகப்பட்டது 2004-05 இல் கிட்டத்தட்ட 23 லட்சம் ரூபாய். அது 48 லட்சத்துக்கு தாவியது அடுத்த வருடம். 66 லட்சம் அதற்கு அடுத்த வருடம். தூக்கியடித்தது 128 லட்சம் 2007- 2008ல். ஓஹோ!
ரேட்டுக்கார்டு:
~ எம்.எல்.ஏ/எம்.பிக்களுக்கு லம்ப்பு லம்ப்பாக! சுரங்க இலாக்காவுக்கும் அப்படியே!
~ போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு லட்சம் ரூபாய், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான்! அடிஷனல் ஐயாவுக்கு மாதம் 25 ஆயிரம்! டிபுடினா பத்து தான், ஆனா சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு பதினாலு டோய்! செக்போஸ்ட் பசங்களுக்கு ரண்டாயிரம் மட்டுமே. ஊருக்கு இளைச்சவன் ஊருக்கு வெளியில்!
~ சுங்க இலாக்கா காட்டில் பெய்யும் மழை: ஆபீசருக்கு லட்சமாமே! அப்றம் கப்பலுக்கு 12 ஆயிரம். அதை ஃபைண்ட்யூன் பண்ணாங்க, கப்பலுக்கு ஆறாயிரம் + டன்னுக்கு அம்பது பைசான்னு (பிசாசுகள் பிரிச்சு எடுத்துக்குமோ!)
~ இனி கப்பல் கணக்கு கன ஜோரு! போர்ட் டைரக்டருக்கு ஐம்பது ஆயிரம் கப்பலுக்கு, அடுத்தவனுக்கு 25 ஆயிரம், சுத்துப்படைகளுக்கு புஸ்! வெறும் ரூபாய் 5,500/- கப்பலொன்றுக்கு!
49 லாரிகள் பெல்லாரியில் இரும்பு தாதுவை ஏற்றி புறப்பாடு செய்த அவலம், லோகாத்யக்ஷாவின் ‘சுரங்கச் சுரண்டல்’ அறிக்கை வெளியான பிறகு நடந்தேறியது. (இரண்டாவது பாரா)
~ முடிந்தால், இங்கு, ‘கையோடு கையாக, ரயிலில் 7448 டன்கள் யாத்திரை! படத்தை பார்த்தால் மேட்டூர் அணைக்கட்டில் தண்ணீர் வழிவது போல், தாது மழை! ஆண்டவா’
(மன்னிக்கவும். எனக்கு வயிற்றை புரட்டுகிறது. நாளை தொடரலாமா? அல்லது 464 பக்கங்களில் 53 பக்கங்கள் கவர் பண்ணியாச்சு. அத்துடன் போதுமா? வாசகர்கள் தான் சொல்லவேண்டும்.)
No comments:
Post a Comment