"சாமிநாதையர் சங்க இலக்கியப் பதிப்புகளைப் போன்று ஒன்று கூட அமையவில்லை." எனச் ச.வே.சுப்பிரமணியன் குறைபட்டுக்கொண்டார். மேலும், “இச்செம்பதிப்புக்கு மிகத் தெளிவான ‘முகவுரை’ எழுதப்படல் வேண்டும். உ.வே.சாமிநாதையரின் பதிப்பு முகவுரைகளைப் போல் அமைய வேண்டும். (அ) கிடைக்கப் பெற்ற சுவடிகள், கையெழுத்துப் படிகள் எங்கெங்கிருந்து கிடைத்தன?, யார் வழிக் கிடைத்தன?, மூலம் மட்டுமுள்ள சுவடியா? உரையுடன் கூடிய சுவடியா? யார் உரையுடன் கூடிய சுவடி? எத்தனை இயல்கள் அச்சுவடியில் உள்ளன போன்ற செய்திகள் தரப்படல் வேண்டும். இவ்வாறு தரப்பட்டுள்ள தொல்காப்பியப் பதிப்பு ஒன்று கூட இல்லை.” என 19 ஆண்டுகளுக்கு முன் கூறிய கருத்து இன்று வரை வெளிவந்துள்ள எல்லா பதிப்புக்களுக்கும் பொருந்தும். இக்கருத்து ச.வே.சு.வினுடைய பதிப்புகளுக்கும் பொருந்தும்.
அவர் தொல்காப்பியக் கையடக்கப் பதிப்பு நூலை மணிவாசகர் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார். பல பதிப்புக்கள் கண்டுள்ள இந்த நூலில், நூல் அமைப்பைப் பற்றியோ, பாடபேதங்களைப் பற்றியோ, யாருடைய பாடம் இதில் இடம் பெற்றுள்ளது என்பதைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை.
இவரே 2007இல், மெய்யப்பன் பதிப்பகம் வாயிலாகத் 'தமிழ் இலக்கண நூல்கள்' என்னும் பெயரில் தமிழில் உள்ள 49 இலக்கண நூல்களையும் மறைந்துபோன இலக்கண நூல்களின் பட்டியலையும் தந்துள்ளார். இவற்றில் எந்த நூல் பற்றியும் விளக்கமோ, அவற்றிற்குப் பயன்படுத்தப்பட்ட சுவடிகளைப் பற்றிய தகவல்களோ, பாடவேறுபாடுகளோ இல்லை. ஆனால் பிழை மலிந்த பதிப்புக்களில் இதுவும் ஒன்று. சான்றுக்கு ஒரு பத்தி.
"தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் சிவன் கோவில் தெற்குத் திருமதிலில் உள்ள கல்வெட்டு பாடல்களில் ஒன்றில் அமுதசாகரர் என்றும், மற்றொன்றும் அமிர்தசாசரர் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன." (ப.125)
இந்தப் பத்தியில் இரண்டு ஒற்றுப் பிழைகள்(நீடூர்ச் சிவன்; கல்வெட்டுப் பாடல்களில்). ஒரு தொடர்ப் பிழை(குறிக்கப்பெற்றுள்ளது), ஒரு கருத்துப் பிழை(மற்றொன்றில்) காணப்படுகின்றன. இது அவர் நூலில் ஒரு பக்கத்தில் ஒரு பத்தியில் மட்டும காணப்படும் பிழைகள்.
ச.வே.சு. தொல்காப்பியத்தைப் பற்றித் தந்திருக்கும் தகவல் மற்ற பதிப்புக்களோடு ஒத்துப்போவதாக இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ச.வே.சு, 'தமிழ் இலக்கண நூல்கள்' என்னும் நூலில், இளம்பூரணர் உரைப்படி தொல்காப்பிய நூற்பாத் தொகை 1585 எனக் குறிப்பிடுகிறார். பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் இளம்பூரணர் உரைப்படி தொல்காப்பிய நூற்பாத் தொகை என 1595 எனக் குறிப்பிடுகிறது. மர்ரே பதிப்பும் 1595யே குறிப்பிடுகிறது. ச.வே.சு. பத்து நூற்பாக்களைக் குறைத்துக் காட்டுகிறார். அதற்கான காரணம் தெரியவில்லை.
ச.வே.சுவின் 'தமிழ் இலக்கண நூல்கள்' பட்டியலில் 'இலக்கணச் சூடாமணி' என்னும் நூல் இடம்பெறவில்லை. இந்நூல், த.கோ. பரமசிவத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, 1990இல், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால், வெளியிடப்பட்டுள்ளது. இருந்தும் ச.வே.சு. தன் நூலில் குறிப்பிட்டுள்ள மறைந்த போன நூல்கள் பட்டியலில் இந்த நூலைச் சேர்த்துள்ளது வியப்பாக உள்ளது.
தொடரும்
அன்புடன் ஆராதி
|
No comments:
Post a Comment