- இன்னம்பூரான்
உங்களுக்கு நெல்லையப்ப பிள்ளையைத் தெரியுமோ? அந்தக் காலத்தில் நெல்லையில் பிரபல வக்கீல். அவாள் ரெட்டைமாட்டு வண்டியில் தான் 'ஜல் ஜல்' என்று கோர்ட்டுக்குப் போவாக. ஒரு கட்சிக்காரர் மோட்டார் கார் வாங்கித்தரேன் என்றார். 'வேண்டாமப்பா! கார் ஓடினா செலவு. மாடு நின்றால் செலவு' என்றார். அந்த மாதிரி மிதக்கும் மாட்டு வண்டி இருந்தால், இந்த விமானப் பயணமும் வேண்டாம். அப்பறம் '"லபோ திபோ"ன்னு அடிச்சுக்கவும் வேண்டாம்.
அமெரிக்காவின் நிவெர்க் விமானதளத்தில் 13-03-2010 அன்று பயணிகள் எல்லாரும் 'லபோ திபோ' என்று அடித்துக் கொண்டிருக்க, விமான கம்பெனி ஊழியர்கள் நிச்சலதத்துவத்துடன் அசையா நிலையில் இருந்தனர். பயங்கர சூறாவளிக் காற்று, 'ஜோ'-ன்னு மழை, நடுநடுங்கும் குளிர். அநேக ஃப்ளைட்ஸ் ரத்து. அங்குமிங்குமாக ஓடோடிக்களைத்த கிழங்கள் அழாத குறை. தப்பித்தவறி எடுத்தெறிந்து பேசினோர்களோ, தொலைந்தீர்கள். 'இவர் உரக்க பேசினர்; கணினி ஆடியது.' என்று புகார் கொடுத்து விடுவார்கள். போலீஸ்காரன் வந்து, காலிலும், கையிலும் விலங்கு மாட்டி, நரகத்துக்கு அழைத்துச்செல்வான். தகனத்து உடல் கிடைக்காது. நான் மிகைப்படுத்தவில்லை. அப்படி இழுத்து செல்லபடுபவர்களை பார்த்திருக்கிறேன். எனவே, எல்லாரும் கெஞ்சல், முணுமுணுப்பு. அத்துடன் சரி. நானும் இந்த வலையில் வீழ்ந்தேன். இது நிற்க. முன்கதையை பார்க்கலாம்.
'முதல் கோணல் முற்றும் கோணல்'. டிக்கெட் வாங்கச்சே, லட்சம் தடவை எல்லா பயணங்களயும் உறுதி செய்யவும். சைவம் கூட இல்லை. ஒரு படி மேலே போய், ஜைன உணவு என்றும் சொல்லியாச்சு. (பயணங்களில் நான் ரொம்ப சுத்தபத்தம். 'சாமியார் கொடுத்த ஆப்பிள் கசந்தால் கூட!) வயசு வேறே ஆச்சா. தள்ளுவண்டியும் கேட்டாச்சு. டிக்கெட்டில் எல்லாம் போட்டாச்சு. எக்கச்சக்க காசும் கொடுத்தாச்சு. எதற்கும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெப்சைட் பாத்ருங்கோ என்று ட்ராவெல் ஏஜென்ட் சொன்னதை பொருட்படுத்தவில்லை. நான் தான் வாசலுக்கும் புழைக்கடைக்குக் போய்ட்டு வரமாதிரி போய் வந்து கொண்டிருக்கிறேனே என்ற அசட்டு தைரியம்.
பிடிச்சது சனியன். முதல்லே ஒரு பயண ஜாபிதா கொடுக்கிறார்கள். அப்பறம் இணையதள டிக்கெட். ஒன்றுக்கொன்று முரணான தகவல். ட்ராவெல் ஏஜென்ட், மறுபடியும் பாருங்கோ என்றாள். பார்த்தால், நம்ம விலாசங்கள் கூட இல்லை. அப்படி இருந்தால் தட்டிக்கழித்து விடுவார்கள். பவர் கட் வேறே. நடு நிசியில் இதையெல்லாம் பதிவு செய்த பிறகு (மூன்று மணி நேரம்), 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டால், நாம் கேட்டது ஒன்றும் பதிவாகவில்லை. 'என்னடா இது' என்று கால் சென்டருக்கு ஃபோன். பாட்டு, கீட்டு எல்லாம் கேட்ட பிறகு, ஒரு பெண் சொன்னாள். மறுபடியும் பாருங்கள். நாங்கள் சரி பண்ணி வைத்திருக்கிறோம். இருந்தாலும், எங்கள் பதிவு மையம் தகராறு செய்கிறது. பிற்பாடு செய்யவும் என்று பதில். மேலும் மூன்று மணி நேரம் அவுட். ஆண்டவா! என்று அனவரதமும் இதே வேலை. இதே பதில்.
ஒருபாடாக, இயன்றதை செய்துவிட்டு, வாளா இருக்கமுடியாது. விமானம் காலை 4 மணிக்கு கிளம்பறதா. முதல் நாள் அதே நேரம், கணினி முன் அமர்ந்து உட்கார இடம் பிடிக்கவேண்டும், தரை மகாஜனங்கள் போல். பிறகு, விமானம் ஏற, போர்டிங் கார்ட் பிரிண்ட் செய்து கொள்ளவேண்டும். என்னே சலுகை என்று விளம்பரம் வேறு. சலுகையுமில்லை. கிலுகையுமில்லை. அவர்கள் வேலையை நாம் செய்துகொள்கிறோம். நாலு பேர் வைக்கவேண்டிய இடத்தில் ஒருவர் மட்டும், அங்கே. மூன்று மணி நேரம் முன்னால் போய், கல்லும் முள்ளுமாக பல இடர்பாடுகளை கடந்து, ஏறி உட்கார்ந்தால், ஜெயின் சாப்பாடு வருகிறது!
லண்டனில் இறங்கியாச்சு. தள்ளுவண்டியும் வந்தது. வாசலில் வண்டியும் காத்திருந்தது. வீட்டுக்கு வந்தாச்சு. இனிமேல் தான் 'லபோ' வருகிறது. ஆஸ்வாசபடுத்திக்கொள்கிறேன்.
இனி அமெரிக்கப் பயணத்துக்கு முஸ்தீப்புகள் செய்யவேண்டும். போறாத காலம், 13 ஆம் தேதி புறப்படுவதாக டிக்கெட். பதிமூன்று தீ நிமித்தமோ! திடீரென்று ஒரு பிரகடனம். 'ஒரு சிறிய மாற்றம். நியூயார்க்கிலிருந்து வேறு விமானத்தில் செல்கிறீர்கள். நேரங்களில் மாற்றமில்லை', என்று. முன் செய்த பதிவுகள் எல்லாம் காலி. 'அடியை பிடிடா, பாரதபட்டா!; என்று விலாசம், தொடர்பு, ஜைன சாப்பாடு, தள்ளுவண்டி எல்லாம் பதிவு செய்வதற்குள் தாவு தீர்ந்து போய்விட்டது.
தலைகீழ் நின்று கூட பார்த்தேன். நியுயார்க்கிலிருந்து (நிவெர்க் விமானதளம்) நான் போகுமிடத்திற்கு செல்லும் விமானத்தில் சீட் பிடிக்க அவர்களின் இணையதளம் மறுத்துவிட்டது. சாமான்களை ஆயிரம் தடவை எடை பார்த்த பிறகு (ஒரு கிலோ ஏறினால் கூட, சுமைகூலி பத்து பணம்!), ஒரு பாடாக விமானம் ஏறினால், சிலர் பெயர்களை (அறிந்து கொள்ளாத வகையில்) அறிவித்து, அவர்கள் முன் வரவில்லை எனில் விமானம் கிளம்பாது என்றார்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு, அவர்களது சாமான்களை இறக்கிவிட்டு, பறந்ததது விமானம். நம்ம சாமான்களை இறக்கிவிட்டார்களோ என்று யாவருக்கும் கவலை. அப்படி செய்திருக்கிறார்கள், சில சமயம். அதே பேச்சு. அதனால் நட்பு.
நியூயார்க்கில் இறங்கியது விமானம், 'தட தட தட்' வென்று. வடிவேலு ஸ்டைலில் சொன்னால், 'சொல்லப்டாது..' லாகவமாக தான் இறக்கினார், விமானி. காத்து தான் பிச்சுண்டு போறதே; கொட்டொன்னு கொட்றது மழை. நான் செல்லவேண்டிய விமானம் ரத்து என்று அறிய, பல மணி நேரம் பிடித்தது; விமானதளத்துக்கு உள்ளேயே, சென்ட்ரல், எக்மோர், தாம்பரம், கோயாம்பேடு எல்லாம் உலா வந்தமாதிரி, நடந்தும், தள்ளுவண்டியிலும், ரயிலிலும் பயணம். கவனமாக படிக்கவும். 'லபோ திபோ' தொடக்கம், இங்கே.
அமெரிக்கா விமான கம்பெனி எல்லாம், 'காசே தான் கடவுளடா' என்று இருப்பார்கள். அந்த கம்பெனியை சேர்ந்த மாமி ஒருவராவது, பயணிகளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். ஏதோ கொலு வச்சாப்போல, மித்யானந்த ரமஹம்ஸினி, காமானந்த அப்பிரமச்சர்யணி, காலபைரவமாயினி ஆகியோர் வரிசையாக நின்று கொண்டு எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஒன்று நிச்சியம். அமெரிக்காவில் பாட்டிகளுக்கும் விமானதளத்தில் வேலை கிடைக்கும். ஆனால், சம்பளம் நம்மூர் கூலிகளை விட குறைச்சல்; அதனால் எரிச்சல்.
மறுநாள் தான் செல்ல இயலலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒழிந்து போ என்ற வகையில் என்னை படுத்தினார்கள். நானும் விடாக்கண்டனாச்சே. பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆஃபீஸுக்கு போகச் சொன்னார்கள். மறுபடியம், பல மணி நேர உலா. அவர்கள் இது எங்கள் வேலை இல்லை என்று சொன்னாலும், நான் பிரிட்டீஷ்க்காரர்களாக நடந்து கொள்ளவும் என்று அறிவுரை அளித்தபிறகு, அமெரிக்கன் கம்பெனிக்கு பேசி, நான் ராத்தங்க ஏற்பாடு செய்யச்சொன்னார்கள்.
மறுபடியும், பல மணி நேர உலா. கடும்பசி. குளிர். சில மணி நேரம் காக்கவைத்துவிட்டு, கொஞ்சம் 'விருதாவாக' பேசிவிட்டு, அந்த அம்மை சொன்னாள்: "நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதோ முதியவன் என்று இரக்கத்தினால், இந்த அரையணா ஹோட்டலில் இடம் போடுகிறோம். அது தொலைவு. சாப்பாடு, போக்குவரத்து ஒன்றும் கொடுக்கமாட்டோம்." ஒழி என்று சொல்லவில்லை. செய்கையால் காண்பித்தாள். கஷ்டகாலத்தில் மனிதாபிமானமும் தலை தூக்குகிறது. இந்த தள்ளுவண்டியில் நம்மை அழைத்து செல்லும் பெண்கள் பரம ஏழைகள். கடல் கடந்து கால் காசுகளுக்கு வந்தவர்கள். சுருங்கச்சொல்லின், அவர்கள் பொறுமை பூஷணங்கள். கொஞ்சம் இனாம் கொடுத்தல் கூட, புன்சிரிப்புடன் பெற்றுக்கொள்பவர்கள். அவர்களை வாழ்த்த வேண்டும். ஒரு ஜப்பானிய மாணவர் (கேம்பிரிட்ஜ்: விஞ்ஞானி: நோபல் பரிசு வாங்கு, அப்பா என்று என் ஆசி) மிகவும் உதவினார். ஒரு இந்தியர் மாதிரி காட்சி அளித்த பெண்: பாகிஸ்தானி என்றாள்; மூலம் ஒன்று தானே என்றேன். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டாள்; அவளும் உதவினாள்.
இதற்குள், என்னுடைய மகளும் மருமகனும் படாத பாடு பட்டு எனக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இடம் பிடித்து, முன் பணம் கட்டி, அங்கு போகச்சொன்னார்கள், ஃபோனில். அங்கு ஆகாஷ் என்ற இந்தியர் வரவேற்று முகமன் கூறினார்; பாஸ்போர்ட் கூட கேட்கவில்லை. நான் ஓய்வு எடுக்கவேண்டும் என்று நல்லபடியாக இயங்கினார். உயிர் தப்பினேன்.
சரி. மறு நாள் போனால், என் சாமான்களை காணவில்லை. அவர்களும். 'டோன்ட் கேர்'. அத்துடன் விட்டதா என் இன்னல்கள். என் கைப்பெட்டியை வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள், விமானம் ஏறியபோது. நானோ பைத்தியக்காரன். என் மருமகள் படைத்த நேர்த்தியான மண்பாண்டங்களை, பரிசாக, என் மகளுக்கு. எடுத்துச்சென்றதால், அவை என் கைப்பெட்டியில். 'ஈஸ்வரோ ரக்ஷது' என்று நான் சரணாகதி. மற்ற சாமான்களைப்பற்றி அவர்கள்; 'கப்சிப்'.
கண்ணீரும் கம்பலையுமாக வந்த என் பெண்,என்னை பார்த்து 'கொல்' என்று சிரித்தாள். மன அழுத்தம் கலைந்தது. அப்படி கெட்-அப், ஐயா! தமிழ் மரபு அறகட்டளை, என் மின்னாக்கப் பணிகளுக்காக கெளரவித்து போர்த்திய பொன்னாடை அணிந்து நின்றேன். அமெரிக்கர்கள் பலர் வேடிக்கைப்பார்த்து கை தட்டினார்கள். இப்போ நான் 'டோன்ட் கேர்!'. இதோ படம். அந்த மண்பாண்டங்கள் உடையாமல் வந்தன. மறுநாள் எனது பெட்டிகள் வீட்டில் கொடுக்கப்பட்டன.
'லபோ திபோ' கதையும் முடிந்தது. கத்திரிக்காயும் காய்த்தது. |
No comments:
Post a Comment