அன்றொரு நாள்: அக்டோபர் 7
‘பல கோடி நூறாயிரம் ஆண்டு’ சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், பிரபல மகப்பேறு மருத்துவராகவும் இருந்த ஸர். ஆற்காட் லக்ஷ்மணசாமி முதலியார் விடலை பருவத்திலே முடி திருத்தும் கடை சென்று: உரையாடல்:
ல: முகக்ஷவரம்.
கடைக்காரர்: அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தாயா? ( அரும்பு மீசை, பூனை மயிர்: இளப்பம்)
ல: எனக்கு தினமும் இருமுறை முகக்ஷவரம் செய்யவேண்டும்; அப்படி வளர்கிறது.
க: ஓ! சாயங்காலம் வா. ஃப்ரீ! (அந்தக்காலத்திலேயே க்ஷவரம் இலவசம்!)
திகைத்துப்போய்விட்டார். அந்த அளவுக்கு அடர்த்தி! வந்தது அண்ணாச்சி ஸர். ஆற்காட் ராமசாமி முதலியார்!
இருவரும் இரட்டைப்பிறவிகள். தாடி மட்டுமல்ல; ஸர் பட்டத்திலும், புகழிலும் இரட்டையர்.
ஒரே முட்டை இரு கருவாக வளர வாய்ப்புண்டு. மரபணு ஒற்றுமையால், அப்படி பிறக்கும் இரட்டையர் ஒரே அச்சு, பல விதங்களில். அவர்களுக்குள், உடல் ரீதியாக, மனரீதியாக வித்தியாசங்கள் தென்பட்டால், அவற்றின் காரணம் சூழல் அல்லது வெளியில் இருந்து வந்த தாக்கம் என நினைக்க முடியும். ஆகையினால், இரட்டைப்பிறவிகளின் வாழ்வியலை நோட்டம் விட்டால், பிறவி/சூழல் தாக்கங்களை இனம் காண இயலலாம்.
அக்டோபர் 7, 1977 அன்று இம்மாதிரியான ‘ஒரே அச்சு’ இரட்டையர்கள் 90 ஜோடிகளை, கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் வாய்ந்த நார்வே பல்கலைக்கழகம், ஆய்வு ரீதியாக, ஒரு ஜாலி ஷாப்பிங்க் கூட்டி சென்றார்கள். கப்பல் பயணம் ஃபெலிக்ஸ்டவ் என்ற ஊருக்கு. இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான உடை. குழப்பம், கலாட்டா, குஷி. ஆய்வின் நோக்கம்: சூழலுக்கும், மனித நடத்தைக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்வது. ஏற்பாடு செய்த கேப்டன் டாஹ்ல்ஸ்ட்ரோம் ஒரு இரட்டையர். ஒரு இரட்டை சகோதரிகள் இரட்டை குதிரைகளில் சவாரி செய்ததைக் கண்டு இந்த எண்ணம் உதயமானது என்றார், இவர். 11 ~80 வயது இரட்டையர் கூட்டம், இங்கு. இரட்டையர் ஜோடிகள் ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல, எனவே, இன்று கூடியதை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார்கள்.
ஸ்வீடனில் இரட்டைப்பிறவிகளின் வரலாற்று புள்ளி விவரங்களை சேகரித்து, ஆய்வுகளுக்கு உதவும் ‘இரட்டையர் பட்டியல்’ என்ற நிறுவனம் 1886 -1990 காலகட்டத்தில் பிறந்த 70 ஆயிரம் ஜோடிகளின் விவரங்களை ஆவணப்படுத்தி, 370 ஆய்வுகளை நடத்த உதவியிருக்கிறது.
என்ன ஆச்சு உமக்கு? தேசாபிமானத்தையும், வரலாற்றுப்பாடங்களையும், வினா~விடை யென்று துவஜாரோகணம் செய்து விட்டு, வியாசங்களுடன் ‘தினாவெட்டாக’ அலைவதையும், ஆன்மிகோபன்யாசம் செய்வதையும் விட்டு விட்டு, துக்கடாவெல்லாம், பக்கோடா போடலாமா? இது தகுமோ? என்று கேட்கிறீர்களா? நேற்று, ஒரு மின் தமிழர் நம்முடம் அளவளாவினார்.
அவர்: என்ன அடுக்குமொழி பறக்குது? அறிஞர் அண்ணா என்று கற்பனையா?
நான்: இல்லை! வந்து!
அ: என்ன இல்லை! வந்து? கொஞ்சம் டல்லடிக்க்குதே! விடாக்கொண்டன் மாதிரி நாட்டுப்பற்றை பற்றி, எந்த இடமாக இருந்தாலும் பேசுகிறீர். கொஞ்சம் இடம் கொடுத்தால், பாமரகீர்த்தி பாடுகிறீர். கிரீன்லாந்தில் பனிமழை! ஸோ வாட்? யாருக்கு வேணும், மிலேச்சர்கள் சரிதம்?
நா: இன்றைய ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் தெரியணும், ஸ்வாமி. எத்தனை நாள் நாம் கிணத்துத்தவளையாக் இருப்பது...
அ; என்ன சொல்லப்போறேள்னு புரியறது. சார்! நாமெல்லாம் கஷ்டஜீவனம் பண்றோம். மின் வெட். விலைவாசி கூரையை கிளிச்சது. குடக்கூலி அதை பாத்து இளிச்சது. ஏதோ அஞ்சு நிமிஷம் சிரிச்சுப்பேசிக்கலாம்னு வந்தா...
நா. பிடியும் துக்கடா ~1.
லன் கட்.
இன்னம்பூரான்
07 10 2011
உசாத்துணை:
“இன்றைய ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் தெரியணும், ஸ்வாமி. எத்தனை நாள் நாம் கிணத்துத்தவளையாக் இருப்பது...“
ReplyDeleteநன்றி ஐயா.
அன்பன்
கி.காளைராசன்