அன்றொருநாள்: மார்ச் 17
பிரதிபலிப்பு
சில தரிசனங்கள் எளிதில் கிடைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அப்படியொரு தரிசனம் சென்னை வஸந்த விஹாரில் எங்கள் இருவருக்கும், முற்றிலும் எதிர்பாராமல் கிடைத்தது பாக்கியமே. தலை லாமா தரிசனம். பிரதிபலிப்புக்கும், பிரதிநிதித்துவத்திற்கும் உள்ள வேற்றுமை மலைக்கும், மடுவுக்கும் அமைந்தது போல என்பது தத்க்ஷணமே புரிந்தது. என்றோரு ஒரு நாள், தமிழ்நாட்டின் தவப்புதல்வனாக ஜனித்த பி.ஆர். ராஜம் ஐயர் ‘வேதாந்தத்தின் புதிர்கள்’ என்ற நூலை எழுதினார். ஆம். ஸ்வாமி விவேகாநந்தரின் ‘பிரபுத்த பாரதா’ என்ற வேதாந்த சஞ்சிகையின் ஆசிரியாக பணிபுரிந்த இளைஞர், அவர் தான். அவரை பற்றி, க்ரிஸ் ஆன்ஸ்டூஸ் என்ற ஒரு அமெரிக்க உளவியல் பேராசிரியருடன் பேசியபோது, இந்த ‘பிரதிபலிப்பு’ நுட்பங்கள் அலசப்பட்டன. இந்த ‘தத்க்ஷண ஞானோதயம்’ பற்றி பேசிக்கொண்டது ஞாபகத்துக்கு வந்தது. தருணம் கிடைத்தால், அது பற்றி பேசலாம். (1956லியே நான் காங்ரா, தரம்சாலா, மக்லாயிட்கஞ்ச் சென்றிருந்த போது பொறி தட்டியதை பற்றியும் பேசிக்கொண்டோம்.) அநேகருக்கு அலுப்பு தட்டலாம். இப்போதைக்கு இத்துடன் விடுவது உசிதம்.
மார்ச் 17, 1959: ஏறி மிதித்தால், வலிக்கத்தானே செய்யும். ஒரு வாரம் முன்னால் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தலை லாமா சீன விழாவுக்கு செல்லக்கூடாது என்று கெஞ்சுகிறார்கள். நாட்டுக்கே மன உளைச்சல். திபெத் மக்களுக்கு மத போதகரும், லெளகீக விஷயங்களிலும் தலைவருமான (15 வயதிலிருந்து) தலை லாமா ஒரு இளைஞர். ஐந்து வயதில் அந்த பவித்ரமான பதவியேற்ற சிறுவனுக்கு, அந்த பத்து வருடங்களும் கடும்சோதனை. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு வலிமை மிகுந்தது. அதனுடைய ஆக்ரமிப்பு கடுமையானது. திபெத் ஈடு கொடுக்க முடியவில்லை. வல்லரசுகள் வாளாவிருந்தனர் என்று தான் தோற்றம். இருந்தாலும், அமெரிக்கா மறைமுகமாக உதவியது என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இரு வருடங்கள் முன்னால், தலை லாமா இந்தியாவுக்கு வந்திருந்த போது, அவர் இந்தியாவில் அடைக்கலம் நாடுவதை ஊக்குவிக்காத நேருஜி, 1959ல் அடைக்கலம் கொடுத்து, இந்தியாவுக்கு நற்பெயர் வாங்கிக்கொடுத்தார். இன்று வரை இந்தியாவில் வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில், ஒரு ‘திபெத்திய அரசு’ இந்திய மண்ணில் வாழ்ந்து வருகிறது என்றால், ஆளுமையில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நன்றி நவிலவேண்டும்.
லாஸா நகரின் நோர்புலிங்கா அரண்மணைலிருந்து நள்ளிரவில் தப்பியதே பெரிய விஷயம். இன்னல்கள் பல அனுபவித்து, இடர்ப்பாடுகள் பலவற்றை கடந்து 14 நாட்கள் பிரயாணம் செய்தபின் தேஜ்பூர் எல்லைக்கு வந்து சேருகிறார். ஒரு கோவேறுகழுதை (யாக்) மீது சவாரி.
இப்போது ஒரு உரையாடல்:
ஒரு இந்திய அதிகாரி: (பணிவுடன்): நான் புத்தர் பிரானுடனா அளவளாவுகிறேன்?
தலை லாமா: இல்லை. அவருடைய பிரதிபலிப்புடன்.
(இதை சினிமா வசனம் என்று சிலர் சொல்லலாம். தலை லாமா அவர்களை கேட்டால், சொல்லுட்டுமே என்பார். குழந்தை மாதிரி சிரிப்பார்.)
இன்னம்பூரான்
17 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment