அன்றொருநாள்: மார்ச் 22
மயிலும் ஒயிலும்
திருமலை வாசி ஏழுமலையானின் இல்லத்துக்கு பளபளவென்று மின்னும் தங்க விமானம். வேலூரில் கோயிலில் ஆணி கூட பொன்னாணி. அம்ருதசரஸில் பொன்னாலயம். இவையெல்லாம் ஸ்தாவர (அசையா) சொத்துக்கள். சங்க்மர்மர் (சலவைக்கல்) தாஜ் மஹால் கூட ஸ்தாவரம் தான். திருமலையானின் புராதன நகை நட்டுக்காணோம் என்று ஒரு குரல் கேட்டது. வேலூரின் வரவு மர்மம், வருமான வரி பிரச்னை என்றெல்லாம் காதில் விழுந்தது. அம்ருதசரஸில் ராணுவம் நுழைய வேண்டிருந்தது. இத்தனை ஆட்டங்கள் கண்டாலும் அசையா சொத்துக்கள் அசையவில்லை. யதா ஸ்தானம் பிரதிஷ்டயாமி. இன்றைய கதாநாயகம் (அஃறிணை) ஒரு ஜங்கம (அசையும்) சொத்தை பற்றி. அதன் மதிப்பு தாஜ்மஹாலை விட இரட்டிப்பு. இன்றைய மதிப்பீடு கிட்டத்தட்ட 2000 மிலியன் டாலர். போய்டுத்தே! அடிச்சுண்டு போய்ட்டானே! குரங்கு பூமாலையை பிச்சுப்போட்டாப்லெ, குதறிப்போட்டுட்டாண்ங்களே, படு பாவிகள்!
சார்! சொத்தாவது பத்தாவது! அதெல்லாம் நிற்காது, ஸ்வாமி. எங்க தாத்தாவுக்கு ஏழு கிராமம் இருந்தது. நான் இருக்கிறது ஒண்டு குடித்தனம். சிரம ஜீவனம். அதான், இந்த ஜோடி வளையலை (அபரஞ்சித்தங்கமாக்கும்) அடகு பிடிச்சுண்டு, ஒரு ஆயிரம் ரூபாய் தரேளா? பேரனுக்கு கேஜி சீட் கிடச்சிருக்கு. இது அன்றாடம் காய்ச்சியின் பேச்சு. ஒரு கருப்புப்பணம்வாலா சொல்றாரு, ‘முதல் கோடி பண்ணிவிட்டால், முப்பது கோடி “தானே’ ஓடோடி வரும்.’ சரி, இதற்கும் ஒயிலான மயிலுக்கும் என்ன சம்பந்தம்? பாயிண்ட் மேட். சும்மா இழுத்துப்பார்த்தேன், காலேஜ் பரிக்ஷையில் பக்கம் நிரப்பற மாதிரி. போர் அடிக்கிறதா? விஷயத்துக்கு வாரேன்.
1.15 டன் பொன்னை உருக்கி, ஜோடி,ஜோடியாக, மயில்கள் ஒயிலாகத் தாங்கும் ராஜ தர்பார் நாற்காலி ( அதை எப்படி சிம்மாசனம் என்று சொல்வது?) மயிலாசனமாக செய்து, அகமகிழ்ந்தான், ஜிலே -இ-இலாஹி (‘ஆண்டவனின் நிழல்’). நிழலுக்கும் தன்னருமை சாற்றும் ஆசை இருக்காதா, அது நப்பாசையாகவோ, தப்பாசையாகவோ இருந்தாலும்? ஒரு நிழலாசனம் செய்ய ஆணையிட்டான். பொக்கிஷத்திலிருந்த வைரம், வைடூரியம், மரகதம், நீலம், ரூபி, ஆகிய நவரத்னங்களும், நன்முத்துக்களும், தங்கக்கட்டிகளும் போதாது என்று, அவை மேலும், மேலும் வரவழைக்கப்பட்டன; எல்லாம் வரிப்பணம் தான். பட்ஜெட் போட்டாஹ, செஞ்சாஹ. பத்தடி நீளம், எட்டடி அகலம், பதினைந்தடி உயரம், பனிரெண்டு பச்சைக்கல் தூண்கள், ஒவ்வொன்றின் தலைமாட்டில் இரட்டை ‘இறகு போடாத’ மயில்கள். நடுவில் மரம். நவரத்னங்கள் எங்கெங்கும் ஜொலித்தன. கோஹினூர் (186 காரட்), அக்பர் ஷா (95 காரெட்), ஷா (88.77 காரெட்்), ஜஹாங்கீர் (83 காரட்),டைமூர் ரூபி (283) ஆகியவை போதாது என்று, கெய்ட்ஸி என்ற ஆஸ்தான கவிஞரின் மெய்கீர்த்தி (பொய் தான்) ஒரு பச்சைக்கல்வெட்டில் பதிக்கப்பட்டது.
மொகலாய சக்ரவர்த்தி ஷாஜஹான் மார்ச் 12, 1635 அன்று மயிலாசனத்தின் மூன்று படிகள் ஏறி, ‘ஆண்டவனின் நிழலாக’, அதில் அமர்ந்தார். ஆனால் 1658ம் ஆண்டு பதவி பறி போனது. அருமை மைந்தன் ஒளரங்கசீப்பு அப்பனை சிறையில் தள்ளி, உடன் பிறந்தோரை ஒழித்துக்கட்டி, கிடுகிடுவென்று படியேறினான். 49 வருடங்கள் ஆண்டு மடிந்தான், 1707ல். டைமூர், ஜெங்கிஸ்கான், முகம்மது கஜினி ஆகியோரின் ‘கொள்ளையடிக்கும் மரபணுவை எப்படியோ கிரஹித்துக்கொண்ட, பெர்சிய(இன்றைய ஈரான்) மன்னனும், தீவட்டிக்கொள்ளைக்காரனும் ஆன நாதிர் ஷா, 1739ல் அன்று டில்லையை குலைத்து, இன்றைய மதிப்பில் எட்டு பிலியன் டாலர் விலை போகும் ஸ்தாவர ஐஸ்வர்யங்களை, அள்ளிக்கொண்டுப் போனான். மார்ச் 22ம்தேதி அடித்துக்கொண்டு போனது இந்த மயிலாசனம். எட்டு வருஷங்களில், அவனது உயிரும் போச்சு; மயிலாசனமும் போச்சு. குர்திஷ் பழங்குடிகளுடன் போர். இந்திரா காந்திக்கு ஆன மாதிரி, இவனுடைய மெய்க்காப்பாளர்களே, இவனை கொன்று விட்டனர். மயிலாசனம் உடைக்கப்பட்டு, குடைத்து நோண்டப்பட்டு, உடைந்தாசனமாயிற்று. பிற்காலம், போலி மயிலாசனங்கள் ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்தது’ போல் ‘தானும்தன் பொல்லாச் சிறகைவிரித்து ஆடின’.
இன்னம்பூரான்
22 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment