அன்றொருநாள்: மார்ச் 20
கதை சொல்லு...
இந்த இழை அட்லாண்டாவில் இருக்கும் ஒரு சிறுமிக்காக ஸ்பெஷல் பிரசுரம்.
கதை கேட்பதில் ஆர்வமும், கதை சொல்லியே மயக்கும் வசீகரமும் பற்றி இன்று எழுதுவதாக, உத்தேசம். சுருக்கமாக. அறிமுகம் மட்டுமே. ஏனெனில், இந்த இழையில் பல மின் தமிழர்கள், தமிழ்வாசல் காப்போர்கள், தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்பலாம். கதை சொல்ல விரும்பலாம். இரு கை தட்டினால் தானே ஒலி எழும். கேட்பவர்கள் இல்லையெனில் சொல்வதின் சுரத்து ‘விர்ரென்று’ இறங்கி விடும். காந்தம் போல் பிடித்து இழுக்கவேண்டும், கதை சொல்லி. இல்லையெனின், கேட்பவர்கள் சாய்க்கமாட்டார்கள், செவியை. கதையின் ஆதார சுருதி என்ன? குழந்தைகள்.
நிலா காய, செல்வங்கள் சூழ, கிண்ணிகளுடன் நடுவில் அமர்ந்து கொண்டு, உருண்டை சாதம் வினியோகம் செய்தபடி, பாட்டி சொன்ன கதை: வலையை கலைத்த எலி. அது ஒரு சுண்டெலி. உயிர் மீண்டது, சிங்கத்திற்கு. என்றோ காட்டிய இரக்கத்திற்கு நன்றி. இரண்டு நீதிகள்; ‘எளியவர்க்கு இரங்கு’; ‘நன்றி மறவாதே’. பாயிண்ட் மேட். கதையும் முடிந்தது; கத்திரிக்காயும் காய்த்தது. கிண்ணியும் காலி. அங்கேயே தூங்கி வழிந்த சிறுசுகளை பாயில் படுக்கவிட்டால், ஏதோ முனகுகிறதுகள். கனவிலும் கதை.
விழுந்து, விழுந்து, சிரிக்கறதுகள், அந்த உத்திராக்ஷப்பூனை கதை கேட்டு. நகைச்சுவை மனித லக்ஷணம். தந்திரம் பல செய்யும் குள்ளநரியின் சாகசம் கேட்டு உள்ளூர மகிழ்வு. ஆனால், ஜாடிக்குள் கற்களைப் போட்டு, பாயச மட்டம் உயர, உயர, உறிஞ்சி குடிக்கும் விஞ்ஞானி-காக்காயின் சமயோசிதம் பாசிடிவ் திங்கிங்க்! ‘புலி வரது! புலி வரது! புலி வரது!’ கதை கேட்டு சிரித்தாலும், அதில் ஒரு படிப்பினை. உரலில் தலை விட்ட மாப்பிள்ளை கதை சரியான எள்ளல்.
பஞ்சதந்திரகதைகள் விஷ்ணு சர்மா என்பவரால் 2200 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவையாம். ஒவ்வொரு கதையும் மணி. எல்லாம் பிராணிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டவை. ஜாதகக்கதைகள் சாக்யமுனியுடன் தொடர்பு கொண்டவையாயினும், அவையும் பிராணிகளை முன்வைத்து நீதி போதனை செய்கின்றன. இவற்றிகெல்லாம் தாத்தா,சோமதேவபட்டர் எழுதிய கதாசரித் சாகரம். அதனுடைய தாத்தா, பிருஹத் கதா மஞ்சரி. அதனுடைய தாத்தா, குணாட்யர், பைசாசி என்னும் மொழியில் எழுதிய 'பிருஹத் கதா'. அதில் ஏழு லட்சம் சுலோகங்கள் இருந்தனவாம். ஒரு சுவையான செய்தி. ஒரிசா பாலுவுக்கு, சிவகாசி புகழ் நா. கண்ணனுக்கும் ( நேரம் கிடைத்தால்) ஆர்வமூட்டக்கூடிய செய்தி: “...பிருஹத்கதையில் வரும் பல கதைகளில் ஸ்வர்ணத்வீபம் என்னும் இடத்துக்கு இந்திய வர்த்தகர்கள் கப்பல்களில் சென்று வாணிபம் பண்ணுவதாய் வரும். ஸ்வர்ணத்வீபம் என்பது இன்றைய மலாயா தீபகற்பம். இந்த இடம் அவர்களுக்கு அக்காலத்தில் நன்கு பரிச்சயமானதாக இருந்திருக்கிறது...” (டாக்டர் எஸ். ஜெயபாரதி: உசாத்துணை)
தாத்தா-பாட்டி கதை சொல்றதுக்குத் தடா அமுலில் இருக்கிறது! பின்ன என்ன? ஹோம் ஒர்க் பண்ணாமெ, கதை கேப்போம் என்று அழிச்சாட்டியம் பண்றதுகள். அதுக்கு என்னமோ, மின் தமிழில், பாமரகீர்த்தி என்று நாமகரணம் செய்துள்ளார்களாம்! பேசிக்கிறா! என்னமோ வ.வெ.சு. அய்யர் தான் முதல் சிறுகதை எழுதினார். புதுமைபித்தன் தான் சிறுகதை பிதாமகன் என்கிறார்கள். தற்கால இலக்கிய வரலாறு அவ்வாறு அமைந்தாலும், இராமாயண, மகாபாரத, பாகவத உபகதைகள் ஒவ்வொன்றுக்கும் சிறுகதை லக்ஷணங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மை. சங்க இலக்கியங்கள் செய்யுளில் அமைந்தாலும், தலைவனும், தலைவியும், பாங்கியும், பாங்கனும், நற்றன்னையும், செவிலியும் கதை மாந்தர்களே. பதிற்றுப்பத்து அரசவரலாறுகளும் கதைகளே. உபகதைகளில் கூட, மணிமேகலை அவற்றை கோர்த்து, மலர் கொத்துக்களாக அல்லவோ அளிக்கிறது.
மற்ற மொழிகளில் பார்க்கப்போனால், Grimm’s Fairy Tales, Norse Tales, Alice on the Wonderland, Narnia, Harry Potter என்று அடுக்கிக்கொண்டே போகலாம். குழந்தைகளுக்கு என்று எழுதினால், தொன்மை (mythical), புராணம், பிராணி, அதீத கற்பனை, ‘திடுக்‘ ‘திடுக்கும்’. ‘பளிச்‘ ‘பளிச்சும்‘ ஒளி வீசவேண்டும். ஒவ்வொரு படியாக ஏறி மொட்டைமாடிக்கு வந்து ஞானோதயம் வந்துவிட்டால், லா.ச.ரா. மாதிரி ‘புத்ர‘ ஜனனம்.
இன்று அழ. வள்ளியப்பா போன்ற கதை சொல்லிகளை உலக அளவில் பாராட்டும் தினம். நீங்களும், ஆளுக்கொரு பங்குக்கு, ஒரு கதை சொல்லுங்களேன். ரேன்ஜ்: ‘ஆமை-முயல் பந்தயம் ~ ஆனை.சு.குஞ்சிதபாதம் கதைகள் ~ ‘புத்ர’ .
இன்னம்பூரான்
20 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment