அன்றொரு நாள்: அக்டோபர் 6:II
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)
என் உள்மனதுக்குள் புகுந்து, வளரும் வயதில், என்னை ஆக்ரமித்த சிந்தனையாளர்: மைக்கேல் எய்க்வெம் தெ மாந்தேய்க்னெ (Michel Eyquem de Montaigne: 1533 ~1592).கட்டுரை இலக்கியத்தின் தலைமாந்தர், அவர். அவருடைய கட்டுரை தொகுப்பில் போர்தே பதிப்பு: 1588ம் ஒன்று. அதன் பிரதி ஒன்றில் அவருடைய குறிப்புகள் பல. அவற்றை எல்லாம் ஆய்வு செய்வதில் வந்த பிரச்னை ஒன்று, அவர் காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு மடியும் நிலையில் இருந்த பிரதியை சரி செய்யும் போது, சில குறிப்புக்கள் சிதைந்திருக்கலாமோ என்ற கவலை. சுவையான, நமக்கு பாடம் போதிக்க வேண்டிய தகவல்கள் பல. தருணம் வந்தால் சொல்கிறேன். ~ சிறந்த ஆய்வுக்கு பிறகு ஒரு அருமையான பதிவு வருவதற்குள் அவருடைய 400 வது ஆண்டு விழா வந்து விட்டது 1933ல்!இது நிற்க.
1588 ல் ஃப்ரென்ச் இலக்கிய/இலக்கிய ஆய்வு/ மரபு பராமரிப்பு ஆகிய அணுகுமுறைகள் எங்கே? 2011ல் தமிழகத்தில் நான் காணும் அவமானங்கள் எங்கே? நாற்பதே வருடங்களுக்கு முன்னால், தன்னுடைய இறுதி நாளையும் தமிழுக்கு அர்ப்பணித்த விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களையும், அவரை போன்ற புலவர்கள், வித்வான். வி.பூவராகம் பிள்ளை, வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர், வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ஆகியோரை தமிழ் இலக்கிய ‘அறங்காவலர்கள்’ மறந்து போனதையும், அவர்களின் படைப்புகளை தொலைத்ததையும், அதே கதி புதுமை பித்தனிலிருந்து கணக்கற்ற தமிழ் செல்வர்களுக்கு அதோ கதியாக அமைந்தததையும், எங்கே சொல்லி அழுவேன்? இப்படித்தான், என்றோ ஒரு நாள்,மின் தமிழில் சேர்ந்த புதிதில், ஒரு நாள் ஸுபாஷிணியும், நானும், வித்வான் மு. ராகவையங்காரை பற்றி நாம் அறிந்தது கொண்டது எவ்வளவு குறைவு என்று அங்கலாய்த்துக்கொண்டு இருந்தோம். கண்ணுக்கெதிரே, புத்தகங்களும், புலவர்களும், ஓலைச்சுவடிகளும் மடிந்து போகின்றன. இந்த நிலையையும், இடைச்செருகல்களையும், ‘அபேஸ்’ அபகரிப்புகளையும் கைவிட்டு விட்டு, தொல்காப்பியர் காட்டிய வழியில், உண்மையாக, மனசாக்ஷிக்கு ஹிதமாக, என்று தான் தமிழன்னையை வணங்கப்போகிறோம்? உலக புலவர் மன்றங்களில் என்று நல்ல பெயர் எடுக்கப்போகிறோம்?
அப்படி என்ன செய்து விட்டார், வி.எம்.எஸ்? விடை காண ஃபிரான்ஸ் போகவேண்டும். ஆம். 1970 களிலிருந்து தனது மரணம் வரை, வி.எம்.எஸ் அவர்களால் 3500 பக்கங்களில், ஆங்கில மொழி பெயர்ப்புடன், தலைமுறை வழிமுறையில், வடிக்கப்பட்ட வாழ்நாள் சாதனை: தேவாரம். தமிழ்க்கடல் தி.வா. கோபால ஐயர் அவர்களின் வழி காட்டலுக்கு இணங்க,மின் தமிழர் ழான் (Jean-Luc Chevillard) அவர்களும், முனைவர் எஸ். ஏ.எஸ். சர்மா அவர்களும் ஜூலை 1997லிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து டிஜிடல் தேவாரம் என்ற சீ.டி. தயார் செய்தார்கள். அதெற்கெல்லாம் நிதியுதவி, இடம் கொடுத்த அன்னை இல்லங்கள்:INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY & ÉCOLE FRANÇAISE D'EXTRÊME-ORIENT. உசாத்துணை தளத்தில் நன்றி நவிலல் பகுதியில், எத்தனை வெளி நாட்டு தமிழ் புலவர்கள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு அக்டோபர் 6ம் நாளே அஞ்சலி செலுத்தியிருக்கவேண்டும் என அறிந்தேன், தாமதமாக. நல்லது பேச, நாள் பார்ப்பானேன், என்று அவருக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறேன். அவரை பற்றி மேலும் எழுத வேண்டும். இன்று இருக்கும் மனவலியில் மேலே எழுதமுடியவில்லை. நாளை தொடர அனுமதியுங்கள்.
(தொடரும்)
இன்னம்பூரான்
18 10 2011
உசாத்துணை:
| | VMS jpg.pages
722K |
|
|
No comments:
Post a Comment