அன்றொரு நாள்: அக்டோபர் 5
I. அக்டோபர் 5, 1823 வள்ளலார் எனப்படும் சிதம்பரம் ராமலிங்க அடிகளார், ‘சம்புபக்ஷ சிருஷ்டியாக’ கருவில் அமைந்து, உரிய காலத்தில் அவதரித்த திரு நாள். அருட்பெரும்சோதியின் தனிப்பெருங்கருணையை போற்றி வணங்குவோமாக. இயன்றவரை அந்த நற்பண்பை கடைப்பிடிப்போமாக. எனக்கு நானே சொல்லிக்கொள்வது: மணிமேகலையின் அமுதசுரபியை பற்றி போகுமிடமெல்லாம் பேசு.
மின் தமிழில் மடலாட துணிந்த புதுசு. ‘வானத்தில் மயிலாடக்கண்ட’ வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையை பற்றி எழுதப்போய், செம்மையாக தர்ம அடிகள் வாங்கிக்கட்டிக்கொண்டேன். வசமாக மாட்டிக்கொண்டேன். ஓடப்பார்த்தேன். ஆனால், சிவப்பழமாகத் திகழ்ந்தத் தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்கள்
"... சமரசக் கோயிலை (வடலூர் சபை) அமைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா? ஈங்கும் வழிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது?...” (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1955) ப.34)
என்று எழுதியதை நினைத்துக்கொண்டேன். கூடவே பயணிப்பது வள்ளலாரின் ஆன்மிக பொதுவுடமையும் பொது கடமையும்:
"பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச வொழுக்கம் சமயவொழுக்கம் சாதியொழுக்கம் செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.”
ஆங்கிலத்தில் ‘Ecumenical’ என்ற கிருத்துவம் சார்ந்த சொல் ஓரளவுக்கு மேற்கண்ட சமரச சன்மார்க்கத்தைக் குறிக்கிறது எனலாம், மொழி பெயர்ப்பு நிர்பந்தங்கள் ஏற்பட்டால். மற்றபடி, வள்ளலாரின் சன்மார்க்கத்தை உபநிஷத்துக்களில் தான் காண இயலும்.
‘அருள்பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்இது எனவே செப்பியசிவமே (983~4)
என்று மனமுருக இசைத்து விட்டு,
"சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட்
ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி”
(ஆறாம் திருமுறை - அக்கச்சி 129)
என்று ஒரு தொன்மை சார்ந்த புறப்பாடு செய்தால்,‘கர்நாடகங்கள்’ ஏன் சண்டைக்கு வரமாட்டார்கள்? அதுவும் அருட்பா” தொகுக்கப்பட்டு முதல் ஐந்து திருமுறைகள் 1867இல் வெளிவந்தது; ஆறாம் திருமுறை அவரது மறைவிற்குப் பின்பு (1888) வெளிவந்தது என்ற நிலையில்!
என்ன? வள்ளலாரை பற்றி பேசாமல் என்னன்னமோ பேசிண்டு? என்றா கேட்கிறாய்? எல்லாம் ‘கருடா சுகமா?’ என்கிற கதை தான். நம்ம இழையிலே குழைத்து குழைத்து எழுதலாம். யார் கேட்கப்போகிறார்கள்? என்கிற அசட்டு தைரியம் தான்.அதுவும் ஒரு தனிப்பகுதி அமைத்து! சங்கு கிடச்சா பூம்!
நிஜமான தைரியம் என்ன தெரியுமா? வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா? இவ்வுலகை உய்விக்க வந்த வள்ளலாரின் சரிதை படிக்க உசாத்துணை யாதும் கொடுக்கவில்லை. ஆதாரஸ்ருதி மட்டும் உளது.படிக்கவும்.
***
II. வள்ளலாரின் ஆன்மிக பொதுவுடமையும் பொது கடமையும்! இதில் ஆன்மிகம் எங்கு வந்தது? பார்த்தீர்களா? ஆன்மிகம் என்ற ஒரு சொல் போதும், வாதப்பிரதிவாதத்தை உரமிட்டு, எரு போட்டு, வளர்க்க. கோள் (மேற்கோள், ஐயா!) சொல்வது என்று சர்ச்சையை துவக்கி விட்டால், பட்டி மன்றம் துண்டுபட்டு, துகள் மன்றமாக துள்ளிக்குதிக்கும்!
எனக்கு ஆன்மிக வாதப்பிரதிவாதங்கள் செய்யத்தெரியாது.அவற்றை கேட்டு திகைத்துப்போய் நின்றதுண்டு. எந்த ஹிதோபதேசத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். பிச்சு உதறி விடுவார்கள். ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். ‘தர்மம் சர’ என்று சொன்னால் போதும். விசிஷ்டாத்வைத/அத்வைத/த்வைத/முந்தைய.பிந்தைய ஹிந்து மார்க்கங்கள்/பெளத்தம்/ சமணம்/கிருத்துவம்/ இஸ்லாமியம் (சாக்கிரதையாய்)/ குணங்குடி மஸ்தான்/தாயுமானவர்/அருணகிரி நாதர்/வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் வகையறாவின் மூலாதாரங்களை ‘கொழு கொழு கன்றே! கன்றின் தாயே’ என்று பிடித்துக்கொண்டு ‘இறை’ தேடும் வைபவங்கள் நேர்த்திக்கடன்கள் போல் நிறைவேறும். கிட்ட கிடு கிடு வென்று தொடங்கி, போகிற போக்கில், கூரத்தாழ்வார்,குரு நானக், சேஷாத்ரி ஸ்வாமிகள், கலீல் கிப்ரான், கபீர் தாஸ்,ஶ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,ஶ்ரீ அரவிந்தர்,அன்னை,ஶ்ரீரமணர், ஜேகே, யூஜிகே இவர்கள் எல்லாரையும் ஒரு பிடி பிடித்து, குலுக்கி விட்டு,ஹாய்யா, சாவகாசமாக வந்து பார்த்து,வள்ளலார் வாழ்ந்து மேன்மை படுத்திய தருமமிகு சென்னையில் அதருமம் மிகுந்து விட்டது என்று சொல்லிக்கொள்கிறார்களாம். அந்தோ! பரிதாபம்!
அத்துடன் விட்டதா?, அருள் வாக்காளர்களும்,ஆஷாடபூதிகளும்,இஷ்டதேவதை சித்தர்களும்,ஈசான்ய நோக்கர்களும், உழக்கு மொள்பவர்களும், ஊருக்குபதேசிகளும்,எடுத்து எறிபவர்களும், ஏமாந்த சோணகிரிகளும், 'ஐயர்களும்', ஒத்தூதிகளும், ஓங்கியுரைப்பர்களும் நிறைந்த நம் நன்னாட்டில் ஆயிரங்கட்டி வராகனுக்கும் சல்லிக்காசுக்கும் தாரதம்யம் கண்டீரோ?
இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு’.
ஆன்மிக தேடல் மனித இயல்பு. தொன்று தொட்டு இயற்கை அன்னையும், இந்த பிரபஞ்சமும், மனித இனத்தின் பலவீனத்தை வஞ்சனையில்லாமல் காட்டிக்கொடுக்கின்றன.சமுதாயம் யாதாயினும், சுமேரியன்/அரபி/சைனா/எகிப்திய/கிரேக்க/ரோமன்/ இந்தியா/ (இந்த பட்டியல் நீண்டது) தொன்மை (mythology) கலக்காத ஆன்மீகமும் இல்லை; நாத்திகமும் இல்லை; கலவையும் இல்லை. தொன்மை ஒரு கற்பனை; படைப்பாற்றல்; மருமம்; கனவு; மோனம். அது நாட்டுநடப்புடன் உலாவி வரும். சிந்தனையுடன் கட்டிப்புரளும்.பிரார்த்தனை செய்தால், குரல் கொடுக்கும். அதனால் தான் நீலமேக சியாமளன்; ஜடாமுடியில் கங்கை; ஹயக்ரீவர்; கொழுக்கட்டை சாப்பிடும் ஆனைமுகத்தோன்.நசிகேதஸ். அஃப்ரோடைட் என்ற கிரேக்க மோஹினி. ஏசு பிரானின் புனர்ஜன்மம். மெக்காவிலிருந்து நபிகள் நாயகம் மதீனாவுக்கு யாத்திரை, ஸ்வாமி விவேகானந்தருக்கு அருளப்பட்ட நிர்விகல்பசமாதி. சனாதனம் மிகுந்த தொன்மையில்லையெனின், ஆத்திகர்கள் தும்பை மலர் போன்ற முடிகளை அகற்றியும், நாத்திகர்கள் கருமுடியை அகற்றியும், மனித சமுதாயத்தின் முடி இறக்கி விடுவார்கள்.
அலெக்ஸீஸ் கேர்ரல் என்ற டாக்டர் நோபல் பரிசு பெற்றவர். அவர் ‘Man, the Unknown’ என்ற நூலில், மனிதனை பற்றி தெரிந்தவையும்,தெரியாதவையும் பற்றி தெளிவு படுத்தி, என்றுமே தெரியாமலே மறைந்திருக்கும் விஷயங்களும் உண்டு என்கிறார்.பாயிண்ட் மேட்?
இன்னம்பூரான்
05 10 2011
ஆதாரஸ்ருதி:
திருமதி.கீதா சாம்பசிவம்: ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்:Retrieved on Oct 5, 2011 from
No comments:
Post a Comment