அன்றொருநாள்: மார்ச் 19
உலகமே நாடகமேடை
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’
(தொல்காப்பியம் : மெய்ப் : 27)
கலைஞராயினும், காண்போராயினும், கண்டும், கேட்டும் சுவைக்க, நடிப்பு இயல்பாக இருக்கவேண்டும் என்பதை உணர வேண்டும். மார்லன் ப்ராண்டோ ஒரு மாஃபியா கும்பலின் தலைவனாக காட்ஃப்ப்தரில் நடிக்கவேயில்லை. அந்த கர கர குரலை ஸ்லோமோஷனில் கேட்கும்போதே, வயிற்றை பிசைந்தது, பீதியில். மிர்ச்சி மசாலாவில் நஸ்ருத்தீன் ஷா கட்டை பஞ்சாயத்து ஜமீந்தாராக நடிக்கவில்லை. மிடுக்காக நடந்து காட்டினார். இங்கிலாந்தில் ஐம்பது லக்ஷம் பேர் பார்த்து மகிழ்ந்த சோப்ராவின் மஹாபாரதத்தில் சகுனியாக நடித்த குஃபி பைண்டால் அசல் வில்லன். பென் கிங்ஸ்லி காந்திஜியாக நடிக்கவில்லையா. கதாநாயகன், கதாநாயகிகளை விட குணசித்திரபாத்திரங்களை வாழ்ந்தே காட்டிய நடிகர்களை நாம் கூடுதலாக புகழவேண்டும். ஏனெனில், அவர்களின் வாழ்க்கையே கூடு விட்டு கூடு பாய்ந்ததாக அமைத்துக்கொண்டதால். அதுவும் வித்தியாசம், வித்தியாசமான பாத்திரங்கள். ரகுவரன் என்ற தமிழ் நடிகரை மறக்கமுடியாது. ‘இது ஒரு மனிதன் கதை’ என்ற திரைப்படத்தில் அவர் குடிகாரனாக மாறிய செல்வந்தராக நடிக்கவேயில்லை. அது அவருடைய சுயசரிதம் போல வாழ்ந்தே காட்டினார். ‘முதல்வன்’ என்ற திரைப்படத்தில் கர கர குரலில் பேசி, ரசிகர்களை அச்சத்தில் ஆழத்திய முதன்மந்திரியாக அவர் நடிக்கவேயில்லை. அத்தனை அமுத்தலாக ராஜாங்கம் செய்தார். கிட்டத்தட்ட 80 படங்களில், தன்னுடைய தனி முத்திரையை பதித்த கலைமாமணி ரகுவரனின் நிஜ வாழ்க்கை சோகமானது. குடியும், லாகிரி வஸ்துக்களும் அவரது வாழ்க்கையை பாதித்து, இல்லற வாழ்க்கையை குலைத்து, மார்ச் 19, 2008ல் அவரது உயிரையும் பறித்து விட்டன. என்ன தான் குற்றம் குறை கண்டாலும், அவரின் பிரிவு எனக்கு விசனம் அளித்தது.
இன்னம்பூரான்
19 03 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment