அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 6
அண்ணன் தம்பி அடித்துக்கொண்டால், ஊர் கூடி விடும். சண்டை என்னமோ வலுக்கும். இருவரும் யானே கெலித்தேன் என்று மார் தட்டிக்கொள்வார்கள். வலியை சொல்லி அழுவது, மனைவிடம் மட்டும், அந்தரங்கமாக. 1965 ம் வருடம், ஸெப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய இந்திய-பாகிஸ்தான் போர், கிட்டத்தட்ட இந்த ரகம் தான். அறிஞர்களின் கருத்துக்களும், அபிப்ராயங்களும் பல இருந்த போதிலும். ராணுவ நோக்கில் ஒரு இந்திய பார்வையையும், ஒரு பாகிஸ்தானிய பார்வையையும், பல வருடங்கள் அடை காக்கப்பட்ட இந்திய அரசின் ஒரு அதிகாரபூர்வமான ஆய்வையும், போர்முனை அதிகாரி ஒருவரின் பரிச்சயத்தையும் மனதில் வைத்து எழுதப்படும் சிறிய அறிமுகமிது.
இந்திய பார்வை:
ஏர் சீஃப் மார்ஷல் பி.சி.லால் அவர்களை நான் நன்கு அறிவேன். அவரிடம் இரு குணங்கள்: மென்மையான விடாக்கொண்டன்; உள்ளது உள்ளபடி. அவருடைய பார்வை: கட்ச் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் தாக்குதல் இந்திய ராணுவத்திற்கு அதிர்ச்சி. விமானப்படையும் தூசிப்படையும் இணைந்து போரிடவில்லை, முதலில். விமானதளங்கள் இந்த பிராந்தியத்தில் போரிடும் வகையில் இல்லாதது இன்னல் விளைவித்தது. பாகிஸ்தானின் விமானப்படைக்கு எல்லாமே கூப்பிடு தூரம். இந்த படையெடுப்பு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ராணுவ நடவடிக்கை தேவை என்று பாகிஸ்தான் கருதுவதின், முள்ளுப்பொறுக்கி சாமி. அதே வகையில் காஷ்மீரில் உரசல்கள், மோதல், போர். செப்டம்பர் 1 அன்று ஜெனெரல் செளதரி விமானப்படையின் உதவி நாடினார். உடனுதவி, ஏர்மார்ஷல் அர்ஜுன் சிங்கிடமிருந்து. சில நிமிடங்களிலேயே குண்டு போடும் விமானங்கள் போரில். பாகிஸ்தான் உற்ற நேரத்தில் வழி மறிக்கப்பட்டது.
தூசிப்படை விமானப்படையை தூசியாக மதித்தது என்பது உண்மை. விமானப்படைகளும் கலந்து கொண்டால், போர் மும்முரமாகும் என்பதும் உண்மை.
இந்திய அரசாங்கம் காஷ்மீரை பாகிஸ்தான் தாக்கினால், அது இந்தியா மீது போர் என்று திட்டவட்டமாக கூறியிருந்ததால், முப்படையும் இணைந்து செயல்படத்தான் வேண்டும். அந்த ஒருமைப்பாடான முஸ்தீபு இருக்கவில்லை. இந்த அவசர நிலையில் கூட திட்டங்களில் பாகப்பிரிவினை! தூசிப்படை பாகிஸ்தானை ஊடுருவிய பின்னரும், இந்த இன்னல்கள் இருந்தன. இத்தனைக்கும் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளும், அதற்கேற்ற அனுபவங்களும் இருந்தன. அந்த பின்னணியும், அரசும், ராணுவமும் உடனடி தீர்வுகள் எடுத்ததாலும், பாகிஸ்தானை வியப்பில் ஆழ்த்தினோம். எமக்கும் வியப்பு. நமது முப்படைகளுக்கும் தலைமை டில்லியில். பாகிஸ்தானில், கடற்படை கராச்சியில், விமானப்படை பெஷாவரில், தூசிப்படை இஸ்லாமாபாத் நகரில். இருந்தும், அவை வேகமாக இணைந்து மின்னல் வேகத்தில் செயலாற்றின. செப்டம்பர் 22 அன்று போர் நிறுத்தப்பட்டது. பின்னர் டாஷ்கெண்ட் உடன்பாடு. எல்லை பாதுகாப்பு என்று மட்டும் பார்த்தால், இந்தியாவுக்கு வெற்றி. மற்றபடி சுமார் தான். எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளும், அதற்கேற்ற அனுபவங்களும் இருந்தும், அவை மந்த கதியில் இருந்தது கசக்கும் உண்மை. எத்தனை படிப்பினைகள்!
பாகிஸ்தான் பார்வை: திறனற்ற அரசாங்க அணுகுமுறை, புட்டோ தலைமையில்; அவருக்கு ராணுவ அதிகாரிகள் கூஜா. இவர்கள் இந்தியாவை நொடியில் தகர்க்க முடியும் என்று நினைத்தார்கள். ராணுவத்தலைவர் மூசா அரசுக்கு கையாள். நுணுக்கம் அறியாதவர். அதனால், சம்ப்=ஜெளரியன் பகுதியிலும், கேம்கரணிலும் படு தோல்வி. நட்டாற்றில் புரவியை மாற்றினார், மூஸா. கிடைத்த 48 மணி நேர அவகாசத்தில் இந்தியாவின் தலைப்பாகையும் தப்பியது! (ராணுவ இதழாளர் திரு. ஏ.ஹெச். அமீன் அளித்த அன்றாட போர் செய்தி அலசல்களை தழுவி அமைகிறது, இந்த சுருக்கம்.)
இந்திய அரசாங்க வரலாற்றிலிருந்து ஒரு துளி: சுருக்கி அளிப்பதில் குறையிருந்தால், பொறுப்பு எனது.
ஸெப்டம்பர் 22, 1965: ஐநாவிடமிருந்து போரை நிறுத்தச்சொல்லி ப்ரெஷர்.
இந்திய பிரதமர்: நான் இழுத்துப்பறிக்கிறேன், அதை. நாம் கெலிக்க இயலுமா?
ஜெனரல் செளதரி: தோட்டாக்கள் போதாது; டாங்கிகள் அழிவு அபரிமிதம்.
(பிற்கால ராணுவ ‘ஆடிட்’: இந்தியா 14% தோட்டாக்களை மட்டுமே இழந்திருந்தது. பாகிஸ்தான் 80% இழந்திருந்தது. பாகிஸ்தானை விட இரு மடங்கு டாங்கிகள், இந்தியாவிடம்.)
உலகம் பலவிதமாக விமரிசித்தது. டாஷ்கெண்டில் நம் பிரதமர் சாஸ்திரி காலமானார். இந்த யுத்தத்தில் தெளிவும், துணிவும் இவரிடம் மட்டும் தான் ஒரு சேர இருந்தது என்பர், சிலர்.
அது சரி. உமது போர் முனை நண்பர் என்ன சொன்னார் என்று கேட்பீர்கள். அவர் கேம் கரண் பகுதியில் போரிட்டவர். இந்திய ஜவானின் வீர தீரத்தைப் பற்றி மெய் சிலிர்க்க, பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மிலிட்டரிக்காரன் அளந்து தான் பேசுவான். அதை மதிக்கிறேன். இதற்கு மேல் பேசவில்லை.
ஜெய் ஜவான்!
இன்னம்பூரான்
06 09 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment