அன்றொரு நாள்: அக்டோபர் 6
ஒரு புரட்சியின் சுயசரிதம்
தற்காலம், இந்தியாவில் பிரிவினை சக்திகள் தேசாபிமானத்தை படுத்தும் பாடு கவலை தருகிறது. இந்திய அரசு முறை ஒரு கூட்டமைப்பு என்றாலும், அடித்தளம் இந்திய தேசாபிமானம் தான். இந்தியர்களாகிய நாம், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டி சாய்ந்து வீழ்த்திக்கொள்ளுவோமோ என்ற அச்சம் தான் கவலைக்குக் காரணம்.
டைம்லைன்: முன்னும் பின்னுமாக: அங்குமிங்குமாக:
* 1954
பொட்டி ஶ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தை போய் பார்த்ததையும், ராஜாஜியின் எதிர்ப்பையும், நேருவின் விட்டுக்கொடுத்த மனப்பான்மையும், மொழிவாரி மாநிலங்கள் தேசாபிமானத்தை குலைக்கும் என்று நான் எழுதிவிட்டு, நேர்காணலில் நடந்த துவந்த யுத்தத்தையும் மறக்கவில்லை.
*2011
இன்று ஒரு பாகிஸ்தானியர் கடையில், அவரும், நானும், ஒரு பங்களாதேசியும், ஒரு பிரிட்டீஷ்காரரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். இனபேதம் ஒன்றும் தென்படவில்லை.
*1945
செர்பியா,மாண்டெனெக்ரோ,ஸ்லோவெனியா, க்ரோஷியா, பாஸ்னியா-ஹெர்ஸெகொவினியா & மாசிடோனியா ஆகிய மாநிலங்கள் அடங்கிய யூகோஸ்லாவிய சோஷலிச குடியரசின் பிரகடனம். நேருவின் நண்பரான மார்ஷல் டிட்டோ சர்வாதிகாரி. இனவெறியாளர்களை அடக்கி வைத்திருந்தார்.
*1980
மார்ஷல் டிட்டோ மறைவு.
*1990
செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர்.
யூகோஸ்லாவிய பார்லிமெண்ட் கட்டிடத்தை மக்கள் இயக்கம் சூழ்ந்து கொண்டு, எதிர்க்கட்சித்தலைவர் கோஸ்டுனிக்காவை அதிபராக பிரகடனம் செய்தது. செர்பிய கொடுங்கோலன் மிலோசெவிக்கின் விலகல் தான் டிமாண்ட். ராணுவம் இதை ஏனோ தானோ என்று தான் பெயரளவில் தடுக்க முயன்றது. ரேடியோ ஸ்டேஷன் கொளுத்தப்பட்டது. புரட்சி ரேடியோ, ராணுவம் தங்களோடு இணைந்து விட்டதாக அறிவித்தது. சொல்லப்போனால், இது சமாதானமாக நடந்த புரட்சி என்றது பீ.பீ.சி.
* அக்டோபர் 5, 2000: காலை மணி 11:
அரசின் கைப்பாவையான ரேடியோ கடந்த மாத தேர்தலின் முடிவு ரத்து செய்யப்பட்டதாகவும், மறு தேர்தல் நடக்கப்போவதாக, உச்சநீதிமன்றம் முடிவு செய்ததாக அறிவித்தது. உள்ளடங்கிய அனர்த்தம் ~ இன்னும் ஒரு வருடகாலம் மிலோசெவிக் நீடிப்பார்.
- அக்டோபர் 5, 2000: மாலை மணி 3:
புரட்சியாளர்கள் மிலோசெவிக் பதவிலிருந்து விலகக் கொடுத்த கெடு முடிந்தது. அவர் மீது எலெக்ஷன் ஃப்ராட் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பார்லிமெண்ட் அருகில் பிரமாண்டமான மக்கள் கூட்டம். போலீஸ் கண்ணீர்புகை வீச்சு முதலில். பின்னர், அவர்களும் புரட்சியாளராயினர். அமெரிக்காவும், பிரட்டனும் புரட்சியை ஆதரித்தன. அரசின் ஊடகதொடர்பு நிறுவனம், மக்கள் பக்கம் சாய்ந்தது. எதிர்க்கட்சி தலைவர் கோஸ்டுனிக்கா உரை ஆற்றப்போவதாக பேச்சு. ரஷ்யாவின் ஆதரவும், ராணுவத்தின் ஆதரவும் கிடைத்தால், புரட்சிக்கு ஜயம் தான்.
மிலோசெவிக் ராஜிநாமா. கோஸ்டுனிக்கா உலகத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறார். யூகோஸ்லாவியா சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்குகிறது.
*2001
கொஸாவா,பாஸ்னியா, க்ரோஷ்யா போர்க்கள குற்றவாளியாகவும் பாஸ்னியாவில் இனவெறி படுகொலையாளியாகவும், மிலோசெவிக், ஐநாவின் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, நாடு கடத்தப்பட்டு, ‘த ஹேக்’ என்ற நகருக்கு கொணரப்பட்டார்
*மார்ச் 2006
மிலோசவிக் சிறையில் மாண்டு போனார். செர்பியாவின் பொருள் நிலையையும், அரசியல் ஆளுமையையும் குலைத்த புண்யம் இவரைச்சாரும். இந்த பிராந்தியங்களில், ஐநா சார்பாக பணி புரிந்தவர்களை எனக்கு நன்றாக தெரியும். ஐநா கோர்ட்டு நடவடிக்கைகளை அக்காலம் நான் கவனித்தது உண்டு, தொலைக்காட்சியில்.
*2011: இந்தியா:
இங்கு யூகோஸ்லாவியாவின் வரலாறும் இனவெறிகளும், இந்தியாவின் வரலாறும், பிரிவினை அழுத்தங்களும் ஒப்புமை செய்யப்படவில்லை. இந்திய தேசாபிமானத்தின் சுரத்து இறங்குவதையும், கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.
இன்னம்பூரான்
06 10 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment