தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை:22:
வெட்டவெளியிலே கரும்புள்ளி !
இன்னம்பூரான்
26 01 2012
கடந்த 2011ம் வருடத்தில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட துறை: அகில இந்திய தணிக்கைத்துறை. அரசியலில் ஆளுமை செலுத்துபவர்களால் பெரிதும் வசை பாடப்பெற்ற
மகிமையும் அதைத்தான் சாரும். ஊடகங்களால் ஆதரவுடனும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்யப்பட்ட துறையும், அதுவே. நடுநிலையில் நின்று, ஆதாரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும், நிரூபணங்களுடனும், மறுக்கமுடியாத முடிபுகளுடனும், தங்கு தடையின்றி, நமது அரசியல் சாசனத்துக்கு ஏற்புடைய வகையில், அதன் அடிப்படைக்குக் குந்தகம் இல்லாத வகையில், தரமுயர்ந்த அறிக்கைகளை சமர்ப்பணம் செய்யும் துறை, இது ஒன்றே. ஆகவே, குடியரசு தினத்தன்று, இந்த தொடர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது.
தற்காலம், மக்களால், அரசின் செயல்கள், கொள்கைகள், ஒப்பந்தங்கள், முரண்செயல்கள், தடுமாற்றங்கள் எல்லாம் ஆராயப்படுவதும், விழிப்புணர்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தொட்ட குறைகளையும், விட்ட குறைகளையும், பாரபக்ஷமில்லாமல் அலசப்படுவதும் கண்கூடு. சில மாஜி அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும், உயரதிகாரிகளும் சிறை சென்றதின் முகாந்திரம், இந்த ஆடிட் அறிக்கைகளே. அவை அரசியல் சாசனத்தின் கட்டளைக்குட்பட்டு, பாராளும் மன்றத்தில்/சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. தணிக்கைத்துறைக்கு நாடாளும் மன்றம் தான் எஜமானன் என்பர். ஆனால், அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உணர்த்துவர், நுட்பம் அறிந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில், 150 வருடங்களாக, இடைவிடாமல் பணி புரியும் இத்துறையின் எஜமானன், மக்கள் சமுதாயமே என்பது என் கருத்து. இது நிற்க.
அணுசக்தி இலாக்காவும், வெட்டவெளி (ஸ்பேஸ்) இலாக்காவும் பலவருடங்களாகவே, குற்றம், குறை காண்பவர்களை அண்ட விடுவதில்லை. அவற்றை தணிக்கை செய்வது எளிதும் அன்று. ஆவணங்கள் கொடுக்கப்படவேண்டும்; கிடைத்தவை புரியவேண்டும்; நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்கு முக்கியத்வம் கொடுக்கவும் வேண்டும். இவற்றை கவனத்தில் வைத்துக்கொண்டு தான் ஏற்புடைய தணிக்கை கையேடுகள் தயார் செய்யப்பட்டு, விஞ்ஞான ஆடிட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஒரு தனி பிரிவே இயங்குகிறது.
இது வரை தணிக்கை முடிவுகளை, தகுந்த காரணம் காட்டி, யாரும் குறை கண்டதில்லை.
இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. ‘முதல் கோணல்’ என்று தொடங்கி, முற்றும் கோணல்’ என்று அலசியிருக்கிறது, அந்த ரிப்போர்ட். நியாயப்படுத்த முடியாத தாமதத்திற்கு பிறகு, ஃபெப்ரவரி 2011ல் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மத்திய அரசு, ஆடிட் ரிப்போர்ட்டை உறுதி செய்திருக்கிறது. அதற்கு இப்போது 2012 ல் என்ன என்று கேட்பவர்களுக்கு, இன்றைய செய்தி ஒன்று பதில் அளிக்கிறது. திரு. மாதவன் நாயர் என்பவர் பிரபல விஞ்ஞானி. வெட்டவெளித்துறையின் முன்னால் தலைவர். மத்திய அரசு அவருக்கும், மேலும் மூன்று மாஜி அதிகாரிகளுக்கும் யாதொரு அரசு பதவியும் கொடுக்கலாகாது என்றொரு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த தடாலடி ஆணை நான்கு விதமான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
முதல் கேள்வி:
அவர்கள் நிஜமாகவே தவறு செய்திருந்தால், அவர்களில் சிலரும், மற்றும் சிலரும், தணிக்கைத்துறை அப்பட்டமாக எழுதியது போல தங்க நாணயங்களை பரிசிலாக பெற்று இருந்திருந்தால், இந்த மென்மை வருடல் ஒரு தண்டனையா என்ன? அவர்கள் மீது சட்டபூர்வகமாக 2008லிருந்து ஏன் கடும்நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகிவிட்டால், இந்த தடாலடி ஏன்? மாபெரும் தவறுகளை ஒப்புக்கொண்ட மாதிரி தான் பிற்கால நடவடிக்கைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் தப்பி விட்டனரோ என்ற ஐயம்; இரண்டாவது கேள்வி எழுகிறது.
இரண்டாவது கேள்வி:
இது மேலும் சிக்கலானது. ஆதாரங்களை பாரபக்ஷமில்லாமல் ஆய்வு செய்தால், தவறுகளுக்கு மற்றும் பலர் துணை போயிருக்கலாம் என்று தோற்றம். ஏனெனில், இந்த ஸ்பேஸ் துறையே பிரதமரின் நேரடி அலுவல்களில் ஒன்று. அவர் தான் இத்துறைக்கு பொறுப்பு ஏற்கும் அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் திரு.பிருதிவிராஜ் செளஹான் அன்றாட பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர். அவருக்கும், பிரதமரின் அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரியாதபடி, திரு. மாதவன் நாயர் மறைத்து விட்டார் என்று சொல்ல இயலாது. அவர்கள் தஸ்தாவேஜுகளை இனம் கண்டு ( அல்லது இனம் காணாமல் !) அவ்வப்பொழுது சம்மதம் தெரிவித்து இருக்கவேண்டும், அரசு விதிமுறைப்படி.
மேலும், இந்த எஸ். பாண்ட் விவகாரம் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கக்கூடியது. அந்த ‘பொன் பரிசில்’ அளித்த கம்பெனிக்கு எக்கச்சக்க சலுகைகள். இலாகாவின் மந்திரியோ பிரதமர். அவருக்கு தெரியாது, இந்த கூத்து என்று அவருடைய ஆலோசகர்களின் குழு சொல்கிறது. யார் இதை நம்ப முடியும்?
சந்தடி சாக்கில் துறை சாராத துணை அமைச்சர் ஒருவர் வந்து விஞ்ஞானிகளை தரக்குறைவாக, 27 01 2012 அன்று சாடியிருக்கிறார். அவர் வந்து புகல் என்ன நீதி என்று திரு. மாதவன் நாயர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஐயகோ! இந்தியா கலிலியோ காலத்துக்குத் தள்ளப்பட்டதோ என்று மாதவன் நாயர் வினவுகிறார். நாம் எங்கே போய் அழுவது? ஜனாப் அப்துல் கலாம் அவர்களிடம் போயா?
மூன்றாவது கேள்வி:
அந்த ஒப்பந்தம் தான் ஒரு வருடம் முன்னால் அபார்ஷன் செய்யப்பட்டுவிட்டதே என்று ஒரு சால்ஜாப்பு. அது எடுபடாது, ஐயா. இந்திய தணிக்கைத்துறை சுணக்கம் காட்டாமல் தவறுகளை சுட்டியதாலும், ஊடகங்கள் சங்கு ஊதியதாலும், மக்கள் மன்றம் ஊழலையும், லஞ்சத்தையும் நாள் தோறும் கண்டிந்து வந்த காலகட்டம், அது என்பதாலும் தான், மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காலகட்டத்தை பாருங்கள்: ஃபெப்ரவரி 2011. இல்லாவிடின், ஒப்பந்தம் நிறைவேறி, ஆடிட் குறிப்பிட்ட இரண்டு லக்ஷ கோடி ரூபாய்கள் நஷ்டம் கடையேறியிருக்கும்.
நான்காவது கேள்வி:
இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன? என்ன? சரியான கேள்வி. வல்லமை இதழில் இந்தத் தொடர் நிலைக்கு வராத காரணம், இதை வரவேற்கும் வாசகர்கள் இல்லையோ என்ற ஐயம் எழுந்ததாலே. தற்காலம், வல்லமையின் பொலிவு கூடியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களின், புதிய வாசகர்களின் நல்வருகையினால் உவகை கூடுகிறது. ஆகவே நான்காவது கேள்வி எழுப்பபட்டால், அடுத்த தொடரில், பதில் அளிக்க இயலும்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
No comments:
Post a Comment