தொட்டில் பழக்கம்! நான் பள்ளியில் படிக்கத் தொடங்கும் போது இரண்டாம் உலகயுத்தம். காகித பஞ்சம். இன்று வரை பழம் கடுதாசி, கவர் எல்லாம் சேத்து வச்சு, காந்திஜி மாதிரி, எழுதிக்கறது தான். எது அச்சில் வந்தாலும் பத்திரப் படுத்துவதும் தான். அந்த காலத்திலே ஃபோரம் என்று ஒரு அருமையான ஆங்கில இதழ். தற்கால அவுட்லுக், இந்தியா டுடே எல்லாவற்றிக்கும் முன்னோடி. நடுநிலை. ஆசிரியர், ஜோஷிம் ஆல்வா. காங்கிரஸ்ஸை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் தந்தை. 1947ல் அந்த இதழில் பர்மாவின் ‘நேரு’ என புகழப்பட்ட ஆங்க்ஸான் அவர்களும் அவருடைய சகபாடிகளும் படுகொலை. ஃபோட்டோக்கள். 60 வருடங்களுக்கு மேல் வைத்திருந்த அந்த ஆவணத்தை இந்த வருடம் தான் யாரிடமோ கொடுத்து விட்டேன். ஹூம்! அதை இணைக்கலாம் என்றால்! 32 வயதில் மறைந்த ‘போக்யோக் (பெரும்தலைவர்) என்று இன்றும் போற்றப்படும் அந்த ஆங்க்ஸானின் சுபுத்திரி திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி [àuɴ sʰáɴ sṵ tɕì]; அவர்களின் ஜன்மதினம் இன்று, 1945.
சைனாவில் மக்களாட்சிக்காக போராடும் திரு.வாங்க் சொல்கிறார்:
‘1991 வருட நோபல் சமாதான பரிசில் பெற்ற திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி ஆசிய ஜோதி; உலகளாவிய மக்களாட்சி தீபம். 1989ல் நான் டியனான்மென் இயக்கத்தில் சைனாவின் மக்களுக்காக போராடியபோது, இவரின் அஹிம்சை போராட்டம் என் கவனத்தை ஈர்த்தது...இருபது வருடங்களுக்கு மேல் இற்செறிக்கப்பட்டாலும், முன்னின்று மக்களாட்சிக்கு போராடுவதில் இணையற்றவர்...’.
அவர் 1988ல் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். மக்களின் மனதில் அன்றிலிருந்து அவருக்கு நிரந்தரவாசம். ஜெயில் என்ன செய்ய இயலும்? கூடியது 300 ஆயிரம் மக்களா? ஒரு மிலியனா? அறியோம். எங்கும் தலைகள். மனிதக்கடல் அலை மோதியது, இவரின் பேச்சை கேட்க. பர்மாவில் பல்லாண்டுகளாக ராணுவ ஆட்சி; கடுமையான அடக்குமுறை. 14 வயதில் வெளிநாடு சென்று, 30 வருடங்கள் இங்கிலாந்தில் இருந்த திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி, மரணப்படுக்கையில் இருந்த அன்னையை பார்க்கவந்தார். தேசமாதாவுக்காக தங்கிவிட்டார், பர்மாவில்.
இந்தியாவில் மேற்படிப்பு படித்த திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி ஒரு வீராங்கனை; பர்மாவின் காந்தி மஹான்.(பர்மா என்று சொன்னால் என்ன? கடாரம் என்று சொன்னால் என்ன? மியான்மார் என்று சொன்னால் என்ன? மக்கள் குரல் தான் கேட்கவில்லையே!). அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ரோல் மாடல். அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. யார் படிப்பார்களோ? அதான், இத்துடன் முற்றுப்புள்ளி.
எனினும் நப்பாசை. அதனால் சில வார்த்தைகள். இன்று 66 வயது அவருக்கு. 1992ல் ஜவஹர்லால் நேரு பரிசிலும், 2009ல் மஹாத்மா காந்தி பரிசிலும் அளித்து தன்னை உச்சி குளிர வைத்த இந்தியா இந்த பாருக்குள்ளே நல்ல நாடு, பர்மாவில் மக்களாட்சி வர உதவும் என்று தான் நம்புவதாக, அவர் இந்தியாவுக்கு இன்று வாழ்த்துச்செய்தி அனுப்பியிருக்கிறார். அந்த காணொலி இன்று டில்லியில் ஒளி பரப்பபடும். ஒபாமாவும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பிருக்கிறார். இணைத்து இருப்பது பர்மீய மக்களுக்கு அவர் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி, காணொளியில்.
இன்னம்பூரான்
19 06 2011
குறிப்பு:மேலதிக விவரங்களை சிலர் கேட்டனர்.
அப்டேட்: 06 10,2011
*
புரட்சிக்கு ஓரிடம் உண்டு, அம்மா, இந்த பூவுலகிலே.
மியான்மார் (பர்மா) அதிபர் தீன் ஸைன் ஐராவதியில் கட்டப்படும் ம்யாத்ஸோன் அணைக்கட்டு வேலை நிறுத்தப்படும் என்றார், அண்மையில். சுற்றுப்புறச்சூழலுக்கு நல்லது. அதா அன்று. மியான்மார் சைனாவின் சினத்தை பொருட்படுத்தாது என்றும் தெரிகிறது. சைனா தான் அந்த அணைக்கட்டுக்கு தாலி கட்டியது. இந்த விரோதம் மியான்மாருக்கு நல்லது அல்ல என்றாலும், இது நல்வரவே. மியான்மாரின் யதேச்சதிகாரம், மக்களின் கருத்தை மதிக்கத்தொடங்கியது என்று அர்த்தம். இல்லையெனில்,புரட்சிசெல்வி ஆங்க் சான் ஸ்யூ க்யீ யுடன் அதிபர் பேச்சு வார்த்தை நடத்துவாரா? புரட்சிசெல்வி ஆங்க் சான் ஸ்யூ க்யீ தான் எதிர்க்கட்சியின் உருவகம். வருடக்கணக்காக இற்செறிப்பு. இப்போது அவருக்கு சுதந்திரம் அதிகம். வெளி நாட்டினர் சந்திக்கிறார்கள், அவரை. அதா அன்று. தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி.
மஹாகவி குடுகுடுப்பை சொன்னது போல, ‘நல்ல காலம் பிறக்குதையா, மியான்மாருக்கு!
எடிட்டட்: ஜூன் 19, 2013
சித்திரத்துக்கு நன்றி:https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-frc1/p480x480/377080_326717754008393_98488930_n.jpg
https://www.youtube.com/watch?v=gJV7fw577wk
No comments:
Post a Comment