வாழ்வியல், சிந்தனை, நம்பிக்கை, ஒழுக்கம், நியதி, சட்டம், நீதி, நியாயம், தர்மம் என்ற வரிசை, ஒரு நேர்க்கோட்டில் சஞ்சரிப்பதில்லை. தண்டவாளம் மாதிரி சந்திக்காமலும் போகலாம். சந்து பொந்தில் நுழைந்தாலும், அவை ராஜபாட்டையில் பீடு நடை போடலாம். ‘முரண்’டு பிடித்து, வளைந்து உடைந்தும் போகலாம். இந்த முத்தாய்ப்பு எதற்கென்றால், நீதிமன்றங்களில், சில வழக்குகள் சந்து பொந்தில் நுழைந்தாலும், அவை ராஜபாட்டையில் பீடு நடை போட்டு, வாழ்நெறியின் தத்துவங்களை முன் வைத்து, வரலாற்றில் நிரந்தமான இடம் பிடித்து விடுகின்றன.
ஷாஹிபாத், மாடமாளிகைகளும், உப்பரிகை மாடங்களும், வீட்டுக்கு வீடு தோட்டம், துரவு, தடாகங்கள் என செல்வந்தர்கள் வாழும் பகுதி. அங்கு ஒரு பெரிய அரசு விருந்தினர் மாளிகை. ஒரு காலத்தில் நீதிமன்றம். அங்கு ஒரு விசித்திரமான வழக்கு, சூட்சுமம் அறியாதவர்களுக்கு. நீதிபதி, கூண்டில் நிற்பவரிடம், அபரிமித மரியாதை காட்டுகிறார். அரசு தரப்பு வக்கீல், அதற்கு மேல். வழக்கே இல்லை. கூண்டில் நிற்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதிகபக்ஷமான தண்டனை வேண்டுகிறார். அது பற்றி, உரிய தருணத்தில் எழுதுகிறேன்.
இன்று (1967) அமெரிக்காவில் நடந்த வழக்கு ஒன்றை பற்றி: ஒரு 25 வயது வாலிபன். ஏற்கனவே உலக புகழ் பெற்றவன். தீர்ப்பு: ஐந்து வருட கடுங்காவல், $10,000/- அபராதம். சட்டப்படி உச்சகட்ட தண்டனை. இத்தனைக்கும் அரசு வக்கீல் தண்டனை குறைந்த பக்ஷம் போதும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இதை எழுதும் போது என் கண் முன் நிற்பது, கயிற்றுக்கட்டிலில் சாந்தமே உருவாக அமர்ந்திருந்த ஷஹீத் பகத் சிங்க் அவர்கள். 23 வயதில் தூக்கிலிடப்பட்டவர் தான் அப்படி அமர்ந்து இருந்தது. என்னே முதிர்ச்சி! அவரின் ஜெயில் டயரி சொல்கிறது, ‘மனதை கட்டுப்படுத்தாதே. சமனப்படுத்து’. அவரை பற்றியும் பிறகு தான் எழுத வேண்டும். அது அதற்கு உகந்த காலம்.
இந்த அமெரிக்க வாலிபன் அமைதியின் மறு உருவம். நிச்சலதத்வம் அவர் முகாரவிந்தத்தில். கோர்ட்டார் இடைவேளை எடுத்துக்கொண்டபோது, சாவதானமாக, சிறுவர்களுடன் அளவளாவினார். கையொப்பம் போட்டுக்கொடுத்தார். ஜட்ஜ் ஜோ. ஈ. இங்கரஹாம் வினவியபோது தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார். ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் அடங்கிய வெள்ளையர் ஜூரி 20 நிமிடங்களில், அவர் குற்றவாளி என்க, அவரின் வக்கீல் உடனடியாக தீர்ப்பு வேண்டுகிறார்; ‘என் கட்சிக்காரர் நிம்மதியாக இன்று இரவு உறங்க விரும்புகிறார்!’
வழக்கு: சட்டப்படி கட்டாய ராணுவசேவை செய்ய மறுக்கிறார், இந்த இளைஞன். அது குற்றமே. தண்டனை விதிக்கவேண்டும்.
பிரதிவாதி தரப்பு: இவர் ஒரு இஸ்லாமிய மத போதகர். அதற்கான விலக்கு அளிக்க அரசின் அமைப்பு மறுத்து விட்டது.
அரசு தரப்பு: இவரது மதம் அரசியல் பேசுகிறது. அரசின் அமைப்பு சரியான முடிவு தான் எடுத்தது. [ வாய் திறவாத அந்த இளைஞர், இந்த கூற்றை மென்மையாக மறுக்கிறார்.]
கோர்ட்டில் இஸ்லாமியர் கூடி இருந்தாலும், அமைதி காத்தனர். இவரும் கவலையே இல்லாமல் இருந்தார்.
குறிப்பு: மேல் முறையீடு செய்த போது, இந்தத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அமெரிக்க சட்ட வரலாற்றில் அது ஒரு மைல்கல்.
குற்றம் சாட்டப்பட்டவர்: ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் கெலித்தும், குத்துச்சண்டையில் உயர்ந்த நிலை உலக சாம்பியனாக வாகை சூடி, அமெரிக்காவுக்கு புகழ் வாங்கித் தந்த அஃப்ரோ அமெரிக்கன் திரு. காஷியஸ் க்ளே. 1964ல் இஸ்லாமியர் ஆனார்.
படிப்பினை என்ன, நண்பர்களே?
இன்னம்பூரான்
20 06 2011
Image Credit:http://imgsrv.eagle969.com/image/kseg2/UserFiles/Image/Bob%20Keller%20folder/0541965-cassius_clay.jpg
No comments:
Post a Comment