Wednesday, June 19, 2013

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 7




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 7

Innamburan S.Soundararajan Wed, Jun 19, 2013 at 9:46 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 7
Inline image 1
கடிதம் 6 நீண்டொதொரு பயணம் மேற்கொள்ளும் போல் இருக்கிறது. எனவே கடிதம் 5க்கு திரும்பினோம். அதனுடைய ஈற்றடி: 
‘இது எஃப்.ஐ. ஆர். எனப்படும் பிரம்மாஸ்திரத்துக்கு/புஸ்வாணத்துக்கு ஒரு பீடிகை. கதை சொன்னால் நம்மருமை வாசகர்கள் படிப்பாகளோ என்ற அல்பாசை...’.
இந்த எஃப்.ஐ. ஆருக்கு தசாவதாரங்கள் உண்டு என்று எச்சரித்து, ஒரு டியூடோரியல் எழுத நினைத்த போது அதனுடைய பகாசுர அவதாரம் பற்றிய தகவல் ஒன்று இன்று வெளியான ஜூனியர் விகடனில் கிடைத்தது. அடேங்கப்பா! கடிதம் 5ல் சொல்லப்பட்ட ஸ்லீமன் காலத்து தரோகாவை தூக்கியடிக்கிறது இந்த எஃப்.ஐ. ஆர். தடாலடி.
அதை முழுதும் இங்கு இணைத்துள்ளேன். ஏனெனில், எஃப்.ஐ. ஆர். சொல்லை வைத்துக்கொண்டு, ‘மணலை கயிறாய் திரிக்கலாம்’ என்றும் திரித்த கயிறை அரவமாக உயிர்ப்பிக்க முடியும் போலீசால் என்று தோன்றுகிறது. காத தூரம் என்ன கப்பலேறி ஓடிடலாம் என்று கையும் காலும் உதறல் எடுக்கிறது. எஃப்.ஐ. ஆர் கலாட்டாவுக்கு அது பொருத்தமான  டியூடோரியலாக அமைகிறது. எனக்கு விவரங்கள் தெரியாது. அதனால் தான் கட்டுரையை உள்ளது உள்ளபடி அளித்துள்ளேன். தர்ம அடி வாங்கிய போலீஸின் தம்பி போலீசாரை தாக்கியதாக ஒரு வரி இருக்கிறது. அதெல்லாம் விட எஃப்.ஐ. ஆர்.அணுகுமுறையையும் நோக்குக.  அடுத்த கடிதத்தில் சட்டரீதியான டியூடோரியல். 
இன்னம்பூரான்
19 06 2013
_________________________________________________________________________________________________________________________________________
மத்திய உளவுத் துறை என்றால் என்ன வென்ற அடிப்படை அறிவுகூட இல் லாமல் சென்னை போலீஸ்காரர்கள் நடத்திய வெறியாட்டத்தால், தமிழகக் காவல் துறையே தலை குனிந்து நிற்கிறது. 
கடந்த 10-ம் தேதி, எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் ஒரு செருப்புக்கடை தகராறில் ஆரம்பித்தது இந்த விவகாரம்.
ஒரு செருப்புக் கடைக் காரருக்கும் செருப்பு வாங்க வந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறால், இரண்டு தரப்பும் அந்தக் காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர்கள், 'நாளை வாருங்கள். விசாரித்துவிட்டு எஃப்.ஐ.ஆர். போடு கிறோம்’ என்றனர். செருப்புக் கடைக்காரருடன் வந்த வழக்கறிஞர் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்தத் தகராறு முற்றி, அது காவல் துறை - வழக்கறிஞர்கள் மோதலாக மாறியது. இதில் போலீஸ்காரர்களைத் தாக்கிய வழக் கறிஞர்களில் பூபாலன் என்ற வழக்கறிஞரும் ஒருவர்.
pastedGraphic.pdf
அவரது வீட்டுக்கு, அன்று இரவே ஒரு டஜன் போலீஸார் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் வழக்கறிஞர் பூபாலன் இல்லை. அவருடைய சகோதரர் திருநாவுக்கரசு இருந்துள்ளார். அவர் இன்டலிஜென்ஸ் பீரோ எனப் படும் மத்திய உளவுத் துறையில் சப்-இன்ஸ்பெக்டர். பூபாலன் மீது இருந்த ஆத்திரத்தில் மத்திய உளவுத் துறை அதிகாரி யான திருநாவுக்கரசை போலீஸார் போட்டுப் புரட்டி எடுத்ததில், அவர் இரண்டு கை எலும்புகளும் இடது காலும் முறிந்துபோய் கந்தலாகிக்கிடக்கிறார். திருநாவுக்கரசு சார்பில்,  உளவுத் துறையின் மூத்த ஊழியர் ஒருவர் நம்மிடம் பேசினார்.
''சம்பவம் நடந்த அன்று, இரவு 10 மணிக்கு, திருநாவுக்கரசின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் காரர்கள், 'பூபாலன் எங்கடா? நீ யாருடா?’ என்று எடுப்பிலேயே ஏகவசனத்தில் பேசியுள்ளனர். உடனே திருநாவுக்கரசு, வந்திருந்த போலீஸ்காரர்களில் பச்சமுத்து என்ற எஸ்.ஐ-யிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, 'நான் பூபாலனின் அண்ணன். ஹைதராபாதில் இன்டலிஜென்ஸ் அதிகாரியாகப் பணியாற்றுகிறேன்’ என்றார். ஆனால், அவர்கள் யாருக்கும் இன்டெலிஜென்ஸ் என்றால் என்னவென்றே புரியவில்லை. திருநாவுக்கரசு சொன்னதைக் காதில் வாங்காமல், அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, நான் மத்திய உளவுத் துறையில் உங்களுக்கு சமமான ரேங்க்கில் பணிபுரியும் அதிகாரி என்று தமிழிலும் கூறியுள்ளார். ஆனால், அப்போதும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. நடுரோட்டில் லுங்கி அவிழ்ந்த நிலையில், அவரை தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது, பச்சமுத்து பிளாஸ்டிக் பைப் ஒன்றால் திருநாவுக்கரசின் இடது பக்கக் கழுத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில் மயங்கிப்போன திருநாவுக்கரசை அங்கிருந்து ஸ்டேஷனுக்குக்கொண்டு போய், சுவற்றில் சாய்த்து வைத்து, பெண் எஸ்.ஐ-யான சோனியா காந்தி உட்பட எஸ்.ஐ-க்கள் பச்சமுத்து, அருள்தாஸ், இளையராஜா, கார்த்திக் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் உதைத்துத்  துன்புறுத்தியுள்ளனர். அந்தச் சமயங்களில் திருநாவுக்கரசின் சாதியைச் சொல்லியும் திட்டியுள்ளனர்.
இந்த நேரத்தில் திருநாவுக்கரசின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருடைய அடையாள அட்டையை  எடுத்துப்போய் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து விவரம் கூறினர். அதை வரிசையாக வாங்கிப் பார்த்த எஸ்.ஐ-க்கள் நான்கு பேரும், 'இவன் ஐ.பி-ல இருக்கானாம். சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்டாஃப்பாம். ஐடென்டி கார்டெல்லாம் காமிக்கிறான்’ என்று சொல்லியபடியே, 'நீ சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்டாஃப்னா பெரிய இவனா? ஐடென்டி கார்டைக் காமிச்சா, நாங்க பயந்துருவமா?’ என்று மேலும் மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்த பிறகுதான் திருநாவுக்கரசுக்கு அடி ஓய்ந்துள்ளது. 'ஐ.பி-ன்னா என்னன்னு தெரியாம நீங்க எப்படி டிபார்ட்மென்ட்டுக்கு வந்தீங்க?’ என்று திட்டிவிட்டு திருநாவுக்கரசிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார். 'இந்த விவகாரத்தை இப்படியே விட்ருங்க சார். எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம். உங்க உயர் அதிகாரிகளுக்கு இதைப்பத்தி எந்தத் தகவலும் சொல்லாதீங்க. ட்ரீட்மென்ட் செலவை நாங்க பார்த்துகிறோம். உங்க மேலதிகாரிகள் கேட்டா பைக்ல போகும்போது ஆக்ஸிடென்ட் ஆயிருச்சுனு சொல்லுங்க’ என்றார். அவர் அதற்கு சம்மதிக்காததால், சாதாரணமாக சிகிச்சை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டனர். இதையடுத்துத்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக திருநாவுக்கரசின் சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடுக்கி யுள்ளோம். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவதில்லை.
இப்போது இந்த விவகாரம் டெல்லியில் உள் துறை அமைச்சகம் வரை போய்விட்டது. ஆனால், இப்போதுகூட இங்குள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் எங்கள் டிபார்ட்மென்ட் ஆட்களை சமாதானப்படுத்தும் வேலையில்தான் இருக்கிறார்களே தவிர, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்'' என்றார்.
இதுபற்றி புளியந்தோப்பு துணை ஆணை யாளர் சுதாகரிடம் பேசினோம். ''நடந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
காவல் துறையும் பச்சமுத்து என்ற எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்ததுடன் மற்றவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
மத்திய உளவுத் துறை அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுஜனத்தின் நிலை?
  • ஜோ.ஸ்டாலின்
__________________________________________________________________________________________________________________________
உசாத்துணை; காப்புரிமை ஜூனியர் விகடனது. என் நன்றி அவர்களுக்கு உரித்ததாகுக.


No comments:

Post a Comment