வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 6
அன்றொரு நாள் உலகம் கவிழ்ந்து விட்டது. உடன்போக்கை விட சுவாரசியம் கூடிய ஊடகப்போக்கை பாருங்கள்; படித்து மகிழுங்கள். சுவரொட்டிகள் கட்டியம் கூறியதாவது:
‘அண்டசராசரங்கள் உருண்டோடின!!!!!!!!!’. - தின தந்தி.
‘இன்று காலை 5.47 மணி அளவில் புவி கவிழ்ந்த காதை’. -தினமலர்.
‘உலகம் கவிழ்ந்தது. நேர்காணல், படங்களுடன், நமது நிருபர்’. -தினமணி.
ஸ்பெஷலு! ஸூப்பர் ஸ்பெஷலு!!!!!:
‘தீப்பந்து போல் உருண்டோடிய தரணி’ வரலாற்று கட்டுரை: ஆர். கிருஷ்ணராமன். -ஜூனியர் விகடன்
பிரளயம்! கலி முற்றி வெடித்தது, ஶ்ரீ பாகவதத்தில் துவாபர யுகாரம்பத்திலே நூறாயிரம் வருடம் முன்னால் சொல்லப்பட்டது. - ‘சதா சர்வகால ஹிந்து தர்ம பரிபாலன பத்திரிகா.
‘உலகமாவது, கவிழ்வதாவது? இது ஒரு பார்ப்பன சூழ்ச்சி...ஐயோ!கண்ணை சுத்துதே. (தனி மொழி:பொங்கல் படைக்கிறேன், ஆத்தா! ! !) - விடுதலை.
‘உலகம் கவிழ்ந்தது என்று கேள்விப்பட்டோம். கார்டியன் இதழும் ந்யூ யார்க் டைம்ஸும் உறுதிபடுத்தினர். -ஹிந்து.
எனது கற்பனை இப்படியெல்லாம் தறி கெட்டு ஓடியதற்கு பிரமேயம், மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று செல்லப்பெயருடைய எங்கள் இன்னம்பூர் மூதாதை குடும்பம் நடத்தும், வாழையடி வாழையாக பண்புடன், ஆதாரத்துடன், நிதானம் இழக்காமல், அடக்கி வாசித்தே பழகிப்போன ஹிந்து பத்திரிகையில் நேற்றைய செய்தியும், தலைப்பும்:
“பகற்குறியோ? இரவுக்குறியோ? கலந்து விட்டால், கல்யாணம் ஆகிவிட்டது.” ~ மதராஸ் உயர் நீதி மன்றம்.
பறந்தன ட்வீட்டுகளும், அகமுணர்த்தும் முகநூல் மொழிகளும். அவற்றிலொன்று...: சரி. இப்போது வேண்டாம்.
யாருமே வக்கீல் குமாஸ்தாவின் கடிதங்களை படிப்பதில்லை என்று நான் சொன்னாலும், ஆயிரம் கண்கள் பார்த்தவண்ணம். உமது மூதாதையை போல் அடக்கி வாசிக்கலாகாதா என்று நா.கண்ணன் பச்சாதாபப்படுவார்.‘புரியவில்லை’ என்பார் ஸுபாஷிணி. வ.வ. பென்ச் மேலே ஏற்றுவார். திரு. (நான் கப்ச்சிப்) ...
நான் சொல்ல வந்ததின் சுருக்கம்:
தீர்ப்பை முழுதும் படிப்பது நலம் பயக்கும்.
கேசு: ஒரு ஆணும், பெண்ணும் கூடி வாழ்கிறார்கள். இரு குழந்தைகள். சான்றுகளும், ஆவணங்களும் அதை உறுதி படுத்துகின்றன. இரண்டாவது மகவு பிரசவத்தின் போது, ஸிசீரியன் ஆபரேஷன் செய்ய , அந்த ஆண் தான் சம்மதம் கொடுத்திருக்கிறார். இப்போது லடாய்! அவள் ஜீவானம்சம் கேட்கிறாள்.
தீர்ப்பு:இந்த பின்னணியில் அவர்கள் தம்பதி தான். திருமணச்சடங்குகள் சம்பிரதாயம். எப்படி பார்த்தாலும், இவர்களை மணமானவர்களாகக் கருதுவது தான் சரி. ஜீவானம்சம் கொடுக்க வேண்டும்.
சரி. சினிமா நடிகர் திருமதி குஷ்பூ, ‘மணம் புரியாமல் கூடி வாழ்வதை’ பற்றி கருத்துக்கூறியதை பற்றி, உச்ச நீதி மன்றம் என்ன சொல்லியது தெரியுமோ?
யாராவது, இதை படித்துவிட்டு வினா எழுப்பினால்....
பாப்பம்.
இன்னம்பூரான்
18 06 2013
No comments:
Post a Comment