அரசு -2
மக்கள் எழுச்சி
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நாடும் கொள்ளாது எனலாம். வரலாற்றில் முதல் காட்சி: ஃப்ரென்ச் புரட்சி. ‘ரொட்டி கிடைக்கவில்லையென்றால் அப்பம் சாப்பிடு.’ என்ற பொருள்பட மேரி அண்டாய்னட் சொன்னதாக ஆதாரமில்லாத வதந்தி. மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். பிறகு, பல புரட்சிகள். புரட்சிகளே யதேச்சதிகாரத்துக்கு வித்தாக அமைந்த கூத்துக்களும் நிகழ்ந்துள்ளன. அது வேறு விஷயம். ‘அன்றொரு நாள்’ தொடரில் அது பற்றி விவரங்களை காணலாம். சில நாட்களாக பிரேசில் நாட்டில் நடுத்தரவகுப்பு மக்களையும் அரசையும் எதிரும் புதிருமாக வைத்துள்ள அமைதியின்மை கவலையளிக்கிறது. ஒரு பார்வை:
சிறு துளி பெரு வெள்ளம் என்பதை விட, சிறியதொரு தீப்பொறி ஊரையே கொளுத்தி விடும் என்பதே சரியான உவமை. கால்பந்து விளையாட்டு பிரேசில் மக்கள் விரும்பும் பொழுது போக்கு என்றாலும், உலகளாவிய கால்பந்து விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டுமானச்செலவுகள்/ஊழல்கள் மீது மக்களுக்கு அதிருப்தி. இந்தியாவின் காமென்வெல்த் விளையாட்டு மோசடிகளை, இது நினைவுபடுத்துகிறது. அதிருப்தி, அலைகளை போல மோதி, மோதி வலுத்துவிடும். பிறகு பஸ்/சப்வே கட்டணங்கள் ஏற்றப்பட்டது மேல் அதிருப்தி. ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் அமைதியாக கூடி போராடும்போது, அதை வன்முறையால் அடக்குவது கடினம். காந்திஜியும், மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் இதற்கு சாக்ஷி. பிரேசிலில் தற்பொழுது அமைதியான புரட்சி அலை கரை புரண்டுவிட்டது என்று தோற்றம், கமீலா ஸேனா என்ற நிடொராய் நகரத்து 18 வயது யுவதி கூறியது போல: ‘விலையேற்றத்தை எதிர்த்த காலகட்டம் கடந்து விட்டது. நாட்டு நடப்பு, அரசு தன்மை (சிஸ்டம்) கேவலமாக இருக்கிறது. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அதை சப்ஜாடா மாற்றியமைக்க வேண்டும்... பணத்தை கொண்டுபோய் ஊழலில் வீணடிப்பதைக் கண்டு கொதித்தெழுந்தோம்’.
ஊருக்கு ஊர் பஸ்/சப்வே கட்டணங்களை குறைத்தும், மக்களின் ஆத்திரம் குறையவில்லை. ஃபோர்டெலெஸா என்ற ஊரில் 15 ஆயிரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் அடி வாங்கினர். கல்வி உரிமை வேண்டும், சுகாதாரப்பணிகள் மேன்படவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத மக்கள்’ கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
No comments:
Post a Comment