அந்த நாள் நினைவில் இருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது தஞ்சாவூரிலும், உசிலம்பட்டியிலும், ஆரம்பப்பள்ளி. தஞ்சாவூரில் யுத்தப்பிரசாரத்திற்காக, ஊர்வலம் போகவேண்டும். ‘சர்ச்சில் வாழ்க! ஹிட்லர் ஒழிக’ என்று கூவவேண்டும். நாங்களும் ‘சர்ச்சில் ஒழிக! ஹிட்லர் வாழ்க’ என்று கூவுவோம். வாத்தியார்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். உசிலம்பட்டியில் தேசீயவாதி என்று முத்திரை குத்தப்பட்டதால், தள்ளி வைக்கப்பட்டேன். ஒரு தடவை மட்டும் ‘இரண்டாவது போர்முனை’ என்ற தலைப்பில் பேசவைக்கப்பட்டேன். இவை நினைவலைகள்.
இன்று, எனது அன்றைய பரமவைரியான ஸர் வின்ஸ்டன் சர்ச்சிலை பாராட்டி எழுதுகிறேன். மின் தமிழில் ‘அரசை உருப்படியாக வேலை செய்யப்படுவது எப்படி’ என்ற இழை ஓடி, நடந்து, தவழ்ந்து, நின்றே விட்டது. போர்க்காலத்தில் பிரிட்டீஷ் பிரதமரான சர்ச்சில், அரசையும், மக்களையும் உருப்படியாக வேலை செய்ய வைத்து யுத்தத்தில் வாகை சூடினார் என்பது தான் மையக்கருத்து, இங்கே.
யுத்தத்தில் பிரிட்டனுக்கு பலத்த அடி, மிகுந்த நஷ்டம், சிப்பாய்கள் பலி, மக்களுக்கு பலமுனைகளில் திண்டாட்டம். ஆனால், இவருடைய ஆவேசப்பேச்சுக்கள் ஒரு மாபெரும் ஆயுதக்கிடங்கு, படைகளுக்கு டானிக், மக்களுக்கு அருமருந்து. ஜூன் 18, 1940 அன்று பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவு, வெற்றியின் முதல் படி என்றால் மிகையல்ல. ரத்னசுருக்கமாக அது இங்கே:
“ பிரான்ஸில் நடந்த சில இழப்புகளால், நமது சேனைகளுக்கு பயங்கர நஷ்டம். 120 ஆயிரம் துருப்புகளை நமது கப்பற்படை காப்பாற்றியது, டன்கிர்க்கில். தளவாடங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்...நான் யார் மீதும் பழி சுமத்தவில்லை...போனது போகட்டும். ஆகவேண்டியதை கவனிப்போம். மனசாட்சியின் படி நடப்போம்...குறை காணவேண்டுமா? மாற்று வழி சொல்லவேண்டுமா? செய்யுங்கள், அதற்கான ரகசிய மீட்டிங்கில். நம் எண்ணங்கள் எதிரிக்கு தெரியலாமோ?...நம்மிடம் வலிமை, தளவாடங்கள், மக்கள் ஆதரவு, தியாகம், 50 ஆயிரம் வாலண்டியர்கள், இருக்கிறது. இது போதும் எனக்கு...பக்கபலங்கள் கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்த வண்ணம். (காஸ்போர்ட் என்ற ஊரில், எங்கள் இல்லத்தின் புழக்கடையில் தான் கனடா துருப்புகள் வந்து இறங்கின. இன்றும் அங்கு அது பற்றி கல்வெட்டு.) நமது கடற்படை ஈடு, இணையற்றது. எதற்கும் தயாராக நாம் இருப்பதை இந்த மன்றத்தில் உறுதி செய்கிறேன்...எதிரியின் விமானப்படை வலிமையுள்ளது எனினும், டன்கிர்க்கில் அவர்களுக்கு தண்ணி காட்டினோம்...நம்மீது குண்டுகள் விழும். ( நானிருக்கும் போர்ட்ஸ்மத்தில், ஜெர்மன் குண்டுகள் சர்வநாசம் செய்தன, மக்களின் திடசித்தம் தவிர. நான் அங்கம் வசிக்கும் குழு வரலாற்று படங்களை காண்பித்தனர்.) ஆனால், ஜெர்மன் விமானப்பபடை நசுக்கப்படும்...கடமையை செய்வோம்.தலை நிமிர்ந்து நடப்போம். ஆயிரம் வருடங்கள் ஆனாலும், ‘இது தாம் எமது பொன்னான தருணம்’ என்பது அமரவாக்கு என்க.’
எல்லா கட்சிகளும் கரகோஷம் செய்து இந்த சொற்பொழிவை வரவேற்றன. இதுவும், அவரது மற்ற இரண்டு ஆவேச சொற்பொழிவுகளும், ஒரு கவலைக்குரிய நாள் அன்று அவரே முன்னின்று விமானப்படையை இயக்கிய திறனும், பிரிட்டனின் வெற்றிக்கு கணிசமான அளவில் உதவின என்று வரலாறு சொல்கிறது. அவருடைய பேச்சை கேளுங்கள்; கீழே.
போர்க்காலத்தில் பிரிட்டனில் தஞ்சம் புகுந்த ஜெனெரல் சார்லஸ் டிகால் என்ற ஃபிரான்ஸ் நாட்டு தேசாபிமானி, அதே தினம் பீ பீ ஸீ ரேடியோவில் பேசினார். அன்று ஃபிரான்ஸ் நாடு நசுக்கப்பட்ட நிலையில். அவரது நாட்டு மக்கள், இன்னல்கள் பலவற்றை அனுபவித்தும், கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், உள்ளிருந்தே ஜெர்மானிய படைகளை எதிர்த்தற்கு முன்னோடியாக கருதப்படுவது, அந்த பேச்சு- இன்று வரை.
தேசாபிமானத்தைத் தவிர, வேறு எதையும் பொருட்படுத்தாத அவர், ஒரு விசித்திரப்பிராணி. ஒரு ஜோக் கூட உண்டு. 1959லிருந்து பத்து வருடம் அந்த நாட்டு ஜனாதிபதியாக இருந்த அவர் 1970 ல் இறந்த போது, அந்த ஜோக்:
“Avec quoi a-t-on creusé le tombeau du général de Gaulle? [டி காலின் சமாதியை எதை வைத்துத்தோண்டினார்கள்?]
“Avec la pelle du 18 juin… [ ஜூன் 18 என்ற மண்வெட்டியால்!]
ஜூன் 18 விண்ணப்பம் என்ற அந்த மண்வெட்டியின் சாராம்சம்:
‘நமது நாட்டு தலைவர்கள் (மார்ஷல் பெடைய்ன் & பியரி லவால்) வைரியிடம் சரண் அடைந்து விட்டனர். அவனுடைய வலிமை பெரிது. எதிர்பாராதத் தாக்குதல். ஃபிரான்ஸ் அடி பணிந்தது. ஆனால், அடி பணியவில்லை. இது உலக யுத்தம். நமக்கு ஆதரவு பெருகிறது. உலகத்தின் விதி நம் கையில். நாடு கடந்த ஜெனரல் ஆகிய நான், போர் புரிய ஃபிரான்ஸ் நாட்டு ராணுவத்தையும், வல்லுனர்களையும் அழைக்கிறேன். நம் தீவட்டி அணையாது. கொழுந்து விட்டு எரியும்.”
[கொழுந்து விட்டு எரிந்ததே!]
மூன்று காரணங்களுக்காக, இந்த இடுகை:
(1) அரசை உருப்படியாக இயக்க முடியும்;
(2) தன்னலமற்ற தலைவர்கள் தேவை;
(3) நாட்டுப்பற்று இருந்தாலே, அருஞ்செயல்கள் பல செய்யலாம்.
இன்னம்பூரான்
18 06 2011
|
No comments:
Post a Comment