ஆயிரம் உண்டிங்கு சாதி...சாதிகள் இல்லையடி பாப்பா...1
மஹாகவி பாரதியாரின் வாக்கு பொய்க்காது. இந்த தொடருக்கும், எனக்கும் கவசம் அவர் தான். ஆம். சர்ச்சை பயின்று வரும், தட தடவென்று. எனவே, எப்படிப்பட்ட கருத்துக்கள் யாரிடமிருந்தும் வரலாம். வராமலும் இருக்கலாம். ஆனால், தொடர் அதன் போக்கில் தனிமொழியாக பயணிக்கும். கருத்துக்களுக்கு பதில் பிற்காலம் என்றோ நாளில் தான்.
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்று உதட்டளவில் கூறி ஊரை இரண்டு படுத்துவது நாம் பலமுறை கண்ணால் கண்டும் காணாத காட்சி. இந்த அழிவுபாதையிலிருந்து திரும்பி, நாம் சமத்துவ ராஜபாட்டையில் பீடு நடை போடும் தினம் தான் நமக்கு உண்மையான விடுதலை தினம். அதை நாடுகிறது, இந்த தொடர்.
ஐம்பது வருடங்கள் முன்னால், அலுவலகத்தில் கெஜட் என்ற அரசு நாளிதழ் எங்களிடையே வலம் வரும். ஆயிரம் உண்டங்கு செய்திகள்- அலுத்து, சலித்து போக வைக்கும் அரசு செய்திகள். திரைப்படங்களை தணிக்கை செய்யும் குழுவின் தீர்மானங்கள் அப்பட்டமாக வரும். சுவாரசியமாக இருக்கும். சான்றாக: ‘கட்! கதாநாயகியின் உதடுகள் மோஹனமாக புன்னகைப்பதை! ஒரு பிரதியில் அற்புதமாக ஒரு வரலாற்று செய்தி கிடைத்தது. அதனால் உந்தப்பட்டு, அலுவலக நூலகத்தில் ஒரு நாள் தேடியதில் திருநெல்வேலி கெஜட்டியர் என்ற தடிமனான செல்லரித்த நூல் கிடைத்தது. அடேயப்பா! வரலாற்று கருவூலம்; ஆய்வு களஞ்சியம். நான் ஒருவன் தான் அவற்றையும், ஜனத்தொகை கணக்கெடுப்பு வெளியீடுகளையும் படித்த பைத்தியம் என்று நினைக்கிறேன்.
இது ஒரு நீண்ட தொடர், தலைப்பை ஒட்டி. ஜனத்தொகை கணக்கெடுப்பு வெளியீடுகளை படித்ததின் பயனாகவும், சில தொகுப்பு நூல்கள் கிடைத்ததாலும். பாசஞ்சர் ரயில். எல்லா ரயில் நிலையங்களில் நிற்கும். சரக்கு வண்டி. மெதுவாகத்தான் ஊர்ந்து வரும். என்னுடைய கருத்துக்களும், மூலநூல்களை பற்றிய விவரங்களும் கடைசி இழையில் தான்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2013
No comments:
Post a Comment