வல்லமையில் வந்த கட்டுரை:
வெள்ளைக்கடுதாசில் மஞ்சள்பூச்சு!
Monday, May 28, 2012, 5:54
இன்னம்பூரான்
‘ஓர் ஆவணத்தால் எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்தென்னை ஆளுங் கொண்ட நம்பிரானார்…’ (தி.7 ப.17 பா.5)
என்று ஏழாம் திருமுறை நம்மை நினைவுறுத்த, மாண்புமிகு.பிரணாப் முக்கர்ஜி அவர்கள் பத்துநாட்கள் முன்னால் மே 16, 2012 அன்று ஒரு வெள்ளைக்கடுதாசில் மஞ்சள்பூசி, மெழுகி, எம்மனதை உறுத்திவிட்டு சென்று விட்டார். அந்தோ பரிதாபம்! இதையெல்லாம் அன்றே சூடாக விமரசிக்க விழையும் யான், பயணித்த வண்ணம் இருந்ததால், தாமதம். முழுமையான விமரிசனம் செய்ய நேரமில்லை. இது ஒரு சிறிய அறிமுகமே.
அரசு பிரகடனங்கள், ஆணைகள், விதிகள், கட்டளைகள், அறிவிக்கைகள், விளம்பரங்கள், தகவல் மையங்கள் ஆகியவற்றை பழுதென்று ஒதுக்கமுடியாது. அவற்றில் ஒயிட் பேப்பர் எனப்படும் அறிவிக்கைகள் குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றிய ஆதாரபூர்வமான தன்னிலை விளக்கங்கள். அவை பின்னணியை பாரபக்ஷமில்லாமல் அலசி, அரசின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும்.
ஆனால், மே 16ம் தினத்தைய வெள்ளை அறிக்கை மேற்படி நற்செயல்களை செய்ய துடிக்கவில்லை. நேர்மாறாக:
- முன்னுரையில் நாடாளும் மன்றத்துக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றமட்டும் இதை சமர்ப்பிவித்ததாக சொல்லும் அவர், இதில் நிலைப்பாடு ஒன்றுமில்லை என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார். வயிறு எரிகிறது.
- போதாக்குறையாக, மூன்று ஆய்வகங்கள் கொடுத்த முடிபுகளை இவ்வறிக்கை கொடுக்கவில்லை என்பதை பற்றி தன் மகிழ்ச்சியின்மையை பகிர்ந்து கொள்வது, ‘பிச்சைக்காரனை ஜோட்டால் அடித்த மாதிரி’ இருக்கிறது.
- அவற்றை கொடுத்தால் மட்டும் என்ன பிரயோஜனம்? கறுப்புப்பணத்தைப் பற்றி பேசி பயன் யாதும் இல்லை. அதை அடக்கி, மடக்குவதை பற்றி பேசவேண்டாமோ? இது என்ன மஞ்சள் பூச்சு? யாது பயன், இந்த வெள்ளைக்கடுதாசு என்ற இரங்கல் மடலினால்?
- கறுப்பு செல்வக்குவியல்களை பற்றி ஆய்வுகள் இருந்த போதும், இந்த ‘மஞ்சள்’ கடுதாசி, கறுப்புப்பண போக்குவரத்துக்களைக்கூட அனுமானித்து, பக்கங்களை நிரப்புகிறது.
- முதல் கோணல், முற்றும் கோணல். மரத்தை சுட்டி, அது கானகம் என்பது அரசுக்கு அழகல்ல.
- இந்த கடுதாசியில்,‘மேலும் ஆய்வுகள் தேவை’ என்றதொரு தன்னடக்கமான அத்தியாயம் ஒன்று உண்டு. அதை செய்வதில் தடை என்ன? விருப்பமின்மை.
- கையில் ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளை ஏன் உற்று நோக்கவில்லை? விருப்பமின்மை.
- 1947லிருந்து இன்று வரை இந்தியதிருநாட்டிலிருந்து கொள்ளை போன செல்வத்தைப் பற்றி, அரசின் வேவு இலாக்காக்கள் சேகரித்த ஆதாரங்கள் எங்கே?
- அன்றிலிருந்து இன்றுவரை ‘ஆளைக்காட்டு; ரூலை சொல்கிறேன்’ என்ற அற்பபுத்தியின் திருவிளையாடல்களை பற்றி ஏன் இந்த காஷ்டமெளனம்?
- சுருங்கச்சொல்லின், பினாமி என்றதோர் பிணம்தின்னும் தீய நடைமுறை பூசி மெழுகப்பட்டது.
இந்த மஞ்சள்பூச்சு வெள்ளைக்கடுதாசி, அரசு மக்களை மதிக்கவில்லை என்பதை மட்டும் அறிவித்துள்ளது. மேலும் எழுதப்போனால், படிக்கக்கூட மாட்டார்கள், நாட்டுப்பற்றுள்ள இந்திய மக்கள்.
புகைப்படத்துக்கு நன்றி:
No comments:
Post a Comment