"பத்து மாதம் மின் தமிழ் கர்ப்பத்தில் இருந்த இந்த 'மனித நேயம்' இழை, இன்று 'க்வா! க்வா!' மென்மையான சிசுவின் குரலில், உம்மையெல்லாம் அழைக்கிறது. நேரம் இருந்தால், முந்திய இடுகைகளை ஒரு கண் பார்க்கவும். இன்று ஒரு நிஜக்கதை.
ஸர் அஷுடோஷ் முகர்ஜி வங்காளத்தின் தவப்புதல்வன். தலைமை பதவியில் பணி புரியாத துறை கிடையாது. அக்கால நாடாளுமன்றத்தலைவர், அரசுக்கு முதன்மை ஆலோசகர். தலைமை நீதியரசர், கல்கத்தா பல்கலைகழக இணை வேந்தர் இத்யாதி.வெள்ளைக்காரனுக்கு சிம்ம சொப்பனம். வைதீகப்பார்ப்பனர். அதாவது சாஸ்திரப்படி அந்தணச்சான்றோன். தினந்தோறும் கங்காஸ்நானம். நதிக்கரையிலிருந்து நடந்து தான் வருவார். ஒரு நாள், ஒரு விதவை அவரை நிறுத்தினாள், 'இங்கு இருக்கும் புரோகிதர்கள் அளவுக்குமீறி கேட்கும் தக்ஷிணை கொடுக்க வசதியில்லை. என் கணவனுக்கு இன்று திதி. உம்மை பார்த்தால் படித்த பிராமணன் போல் இருக்கிறது. சிரார்த்தம் செய்து வையும்' என்றாள். கோர்ட்டாவது! கீர்ட்டாவது! ஐயா நிதானமாக, அக்ஷரசுத்தத்துடன், மந்த்ரஹீனம் இல்லாமல்,சிரார்த்தம் செய்து வைத்தார். அவள் கொடுத்த ஒரு ரூபாயையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கிளம்பினார். யாரோ இவரின் பதவியை சொல்லி அவளை அதட்ட, ஓடோடி போய், அவள், அவர் தாள் பணிந்து மன்னிப்பு கேட்டாள். இந்த சிம்மம் சொல்லிற்று, 'நான்அந்தணன். என் குலதர்மத்தை செய்தேன்.' என்று. சற்றே சுதாரித்து, தஷிணை ஏன் வாங்கினீர் என்று கேட்டாள். இல்லாவிடின், நீ சந்தேஹப்படுவாயே, பலன் இருக்காதோ என்று. அதான் என்றார்.
புரிகிறதோ?
அன்புடன்,
இன்னம்பூரான்
16 09 2010"
------------
2. 'நன்றி, தேவ். கோவத்துக்கும் நமக்கும் காததூரம், சின்ன காதம்! அவர்
ஹிமாலயம் என்றால், நான் கூழாங்கல்.
இந்த ஆஷுதோஷரின் திருமகன் ஷியாமப்பிரசாதரும் புகழ் பெற்ற அரசியல், ஹிந்து
முன்னணி தலைவர். கொல்கத்தாவின் முக்ய பகுதிகள் ஆகிய செளரங்கி - பாலிகஞ்ச்
ராஸ்தா மிகவும் நீண்டது. ஒரு பகுதி அப்பா பேரில்; தொடருவது பிள்ளை
பேரில். வங்காளத்தின் தவப்புதல்வர்கள். அந்த ராஸ்தாவில்
ஷியாமப்பிரசாதரின் இறுதி ஊர்வலம் சென்றபோது கல்கத்தாவின் கண்ணீர்
கங்காப்பிரவாகமாக இருந்தது, நினைவில் இருக்கிறது. (ஒரு படம், ஹிந்துவில்)
தேசபக்தியில் காங்கிரஸ்க்காரர்களுக்கு லவலேசமும் குறையாத அவர்,
காஷ்மீரில் நுழைய இருந்த தடையை மீறினார்; கைது செய்யப்பட்டார். நீரழிவு
நோய்க்கு, அவர் கொண்டு வந்திருந்த மருந்துகளை கொடுப்பதில்
தகராறு/குழப்பம், மனிதநேயத்தை மண்ணாங்கட்டியாக கருதிய காஷ்மீர் அரசு.
சான்றோன் இறந்து போனார். சாமான்ய குடும்பமா, சட்டம் அறியாமல் இருக்க!
சகோதரர் ராமப்பிரசாத் நீதியரசர். அன்னை ஜவஹர்லால் நேஹ்ருவுக்கு கடிதம்
எழுதினார். இறுதி வரி, மனக்கண்ணின் முன் நிற்கிறது, "I charge you with
complicity in my son's murder." எனக்கு தெரிந்தவரை, அவர் விடையளித்ததாக
வரலாறு இல்லை. தேடுகிறேன், என்னிடம் உள்ள நூல்களில்.
11/12/10'
----------------
3.
'செப்டம்பர் 20க்கு பிறகு புதிய அங்கத்தினர்கள் வந்துள்ளதால், தொடர்கிறேன். சிலர் ஆர்வம் காட்டலாம் என்ற எதிர்ப்பார்ப்பு. இது ஒரு தனி மொழி இழையாக இருந்துவிட்டால், பிழை எனது.
அந்தக்காலம். ஒரு பிரபல வழக்கறிஞர். அப்பெல்லாம் இரட்டை மாட்டு வண்டி தான் ரோல்ஸ்ராய்ஸ் கார். ஒரு சிற்றூரில் கோர்ட்டு அலுவலாக வந்த அவர், மாலை சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஏதோ கலவரசத்தம். வன விலங்குகள்/ கொள்ளையர்கள் நடமாடும் இடம்.கையில் இருந்த துப்பாக்கியால், திசை நோக்கி சுட்டுவிட்டார். 'ஐயோ' என்ற சத்தம் கேட்டு போய் பார்த்தால், ஒரு பாமர மனிதன் காலைப்பிடித்துக்கொண்டு அலறுகிறான். குறி தப்பவில்லை. அவனை முடக்கத்தானே நினைத்தார். He was a good shot. அவனை வண்டியில் போட்டுக்கொண்டு, வைத்தியம் பார்த்து, ஆயுசு பரியந்தம் பென்ஷன் கொடுத்தாராம். சின்ன வயதில் படித்தது. ஆதாரம் கையில் இல்லை எனினும், நம்பகம் வாய்ந்த இதழில் படித்தததாக நினைவு.
ஊரு சேலம். ஆளு: சக்ரவர்த்தி. சி. ராஜகோபாலாச்சாரியார்.
துணுக்: இந்த தகவல் அநேகருக்கு தெரியாது. இவர் கவர்னர் ஜெனெரலாக இருந்த போது, ராணுவ போட்டி ஒன்றை துவக்க அழைத்து, மரியாதை நிமித்தம், துப்பாக்கியை கொடுத்து ஆகாயத்தைபார்த்து சுடச்சொன்னார்களாம். இவரோ குறியை சுட்டு தள்ளிவிட்டாராம். He hit the Bull's eye! இதுவும் கேள்விப்பட்டது தான்.
ஆமாம்! மனிதநேயம் பேசக்கூட ஆவணம் தேவையா, இடம், பொருள், ஏவல் பொருத்தமாக இருந்தால்?
11/11/10
---------
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
28 06 2011
No comments:
Post a Comment