‘...சிட்டிக்கு நரசைய்யாவின் பெற்றோர் ஆதர்சம். நரசைய்யாவிற்கு
சிட்டி ஆதர்சம். சிட்டி பலருக்கு ஆதர்சம் ;-)...’
- நா. கண்ணன்: மின் தமிழ் (19 04 2009)
எதை எழுதுவது? எதை விடுவது? ‘சிட்டி’யை சிட்டிகையாக குறுக்கி அடைக்க முடியுமோ! இது ஒரு சிறிய அடி பணிந்து வணங்கும் முகாந்திரம் அவ்வளவு தான். அவருக்கு பிடித்திருக்கும் என்பதால், அவரது அபிமான நகைச்சுவை எழுத்தாளரும், பொருளியல் பேராசிரியரும், (எனக்கு இன்னம்பூர் போல, அவருக்கு,தற்காலம் நான் வசிக்கும் ஹாம்ஷையர்.) ஆன ஸ்டீஃபன் லீகாக் மேற்கோள்கள் மூன்றை சமர்ப்பிக்கிறேன். அவர் வங்கிக்கணக்கு திறந்த கதை பிரமாதமாக இருக்கும், நகைச்சுவை ததும்ப. அவரது படைப்புகள் எல்லாம் இணைய தளத்தில். நாம் எப்போது தமிழை அந்த நிலைக்கு உயர்த்துவோம்! (நாம் எப்போது தமிழை அந்த நிலைக்கு உயர்த்துவோம்!
ஒரு முன்னுதாரணம்: http://www.tamilheritage.org/old/text/ebook/chitti_malar_2010.pdf]
ஸ்டீஃபன் லீகாக் :
1. [‘பொருளாதாரமா!] அதற்கு ‘அரசியல்-பொருளியல்’ (political economy) என்று பெயர், இரண்டும் அதில் இல்லையே!’.
2. எழுதுவது பிரச்னையே இல்லை. தோன்றியதை எழுதி விடலாமே. ஆமாம்! தோன்றினால் தானே!
3. ‘முழுச்செங்கலை விட பாதி செங்கல் லேசு. பறக்கும், எறிந்தால். அது மாதிரி, அரை குறை உண்மை தான் தேவலை.’
*****
“இன்று திரு. 'சிட்டி' சுந்தரராஜனின் நூற்றாண்டு விழா இனிது நிறைவேறியது, சாஸ்திரி நகர் மங்கையர் மன்றத்தில். திரு. நரசய்யா ஊக்குவிக்க, முனைவர் சதாசிவம் உறுதுணை அளிக்க, என் பழைய பேட்டை சாஸ்திரி நகருக்கு, க்ரோம்பேட்டையிலிருந்து பயணித்தேன். திரு. நரசய்யா பல சான்றோர்களையும், அறிஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஸத்யபாமா, சுப்ரமணியம், மோஹன் போன்ற பழைய நண்பர்களை கண்டு களித்தேன். 'சிட்டியின்' மகவுகள் பரிவுடன் தந்தையின் பெருமையை கொண்டாடினர். முனைவர். ஸீ.எல்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழ்த்துரைகள் வாசிக்கப்பட்டன். தமிழ் மரபு கட்டளையின் சார்பில் நமது நா. கண்ணன் அவர்களின் நீட்டொலை வாசிக்கப்பட்டபோது, அது மிகப்பொருத்தமாகவும், இலக்கிய நடையில் இருந்ததைக்கேட்ட யான் பெருமிதத்துடன், மற்றவர்கள் செவி சாய்த்ததை அனுபவித்தேன். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தன்னை 'சிட்டி' ஊக்குவித்ததைப் பற்றியும், அவரது (British understatement humour) நகைச்சுவையின் மேன்மையை பாராட்டிப்பேசினார். இதழாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கே உரிய நகைச்சுவையுடன், 'சிட்டியின்' நுட்பமான எள்ளல்களை, பகிர்ந்து கொண்டார். முனைவர் தமிழ்ச்செல்வி எவ்வாறு அவரது 'மணிக்கொடி' ஆய்வுகளுக்கு 'சிட்டி' யும் அனரது துணைவியாரும் ஊக்கம் அளித்தனர் என்பதைக்கூறி மகிழ்ந்தார். மகனுக்கு மேல் மருமான் அல்லவா! அந்த உரிமையுடன், திரு. நரசய்யா, 'சிட்டியை' பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இவர் கடலோடியாகப்போவதை 'சிட்டி' விரும்பாவிட்டலும், இவர் விடுமுறையில் வந்த போது 'சிட்டி' ரயில் நிலையத்து வந்து வரவேற்றதை கூறி மனம் நெகிழ்ந்தார். சிறார்களின் பங்கு மேலும் சிறப்பு சேர்த்தது. ஒரு மழலை எல்லாரின் மனத்தைக் கொள்ளை கொண்டாள்.
'சிட்டியின்' நாமம் என்றும் வாழ்க.”
இன்னம்பூரான்
18 04 2009
********
“சிட்டி என்னும் சிரிப்பாளி” – நரசய்யா:
“ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்களிலேயே எழுதியிருக்கிறார்.
தன்னை ‘சர்க்கஸில் வரும் கோமாளி‘ என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.
சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.
“இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்” (கலாமோஹினி :: 1943)
ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது’ என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.
அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.
சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது “பாசிடிவ் அவுட்லுக்” என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், “இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்” என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!”
(டிசம்பர் 2004)
*********
சிட்டி என்றொரு தகவல் பெட்டகம்:
இடைக்கால இலக்கியத்தில் இளம்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டைப் புலவர்களின் படைப்புகள் உண்டு...இருவர் சேர்ந்து இலக்கியம் படைக்க முடியுமா? முடியும் என்று, அன்றைய இரட்டைப் புலவர்கள் போல் பிற்காலத்தில் சாதித்துக் காட்டியவர் ஒருவர் உண்டு. அவர் சிட்டி என்கிற பி.ஜி. சுந்தரராஜன்... கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து, "கண்ணன் என் கவி' என்ற பாரதி ஆய்வு நூல், தி.ஜானகிராமனுடன் இணைந்து, "நடந்தாய் வாழி காவேரி' என்ற பயண நூல், சிவபாதசுந்தரத்துடன் இணைந்து, தமிழ்ச் சிறுகதை, நாவல் வரலாறுகள், பெ.சு. மணியுடன் இணைந்து "அறிஞர் வ.ரா. வாழ்க்கை வரலாறு' என அவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் மணி மணியானவை... தற்கால இலக்கியத்தின் உ.வே.சா. என்று சிட்டியைச் சொல்லலாம்...அவரது படிப்பறிவு பிரமிக்கவைக்கும் அளவு அசாதாரணமானது...சிலப்பதிகாரக் காப்பியத்தை ஆய்வுசெய்து, "கண்டெடுத்த கருவூலம்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். சிவபாதசுந்தரத்தின் உதவியோடு, முதல் கவிதை நாவலான "ஆதியூர் அவதானி' என்ற படைப்பை வெளிக்கொண்டு வந்தவர்...தி.ஜா. பற்பல சித்தர்களைத் தேடித் தேடி நடந்தவர். சிட்டியோ சித்தர்களில் எல்லாம் பெரிய சித்தர் காஞ்சிப் பரமாச்சாரியார் என்று நிறைவடைந்து விட்டவர்...சிட்டி ஆங்கில எழுத்தாளர் உட்ஹவுசின் பரம ரசிகர்...
சிட்டியை ஒரு "தகவல் பெட்டகம்' என்று சொல்லலாம்..."சாதாரண' ஆண்டில் (தமிழ் வருடம்) பிறந்த சிட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ் எழுத்தாளரும் சிட்டியின் உறவினருமான நரசய்யா "சாதாரண மனிதன்' என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்...சிட்டியின் அதிர்ஷ்டங்களில் ஒன்று அவரது குடும்பம்...சிட்டி 2000-இல் தம் 96-ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து காலமானார்... அமரர் சிட்டிக்கு இப்போதும் ஆண்டுக்கொரு முறை அவரது குடும்பத்தினர் விழா எடுக்கிறார்கள்...
- திருப்பூர் கிருஷ்ணன்
23 01 2011
© Copyright 2008 Dinamani
[முழுக்கட்டுரையையும் நீங்கள் ஆர்வத்துடன் படிக்கவேண்டும் என்று, குறிப்பால் உணர்த்தத் தான், சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவு செய்ததுள்ளேன்.
இன்னம்பூரான்
24 06 2011]
No comments:
Post a Comment