தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 30
இன்னம்பூரான்
வெட்டவெளியில் கரும்புள்ளி: அப்டேட்
இந்த எஸ்-பாண்ட் ஊழல் நமது புகழ் வாய்ந்த விஞ்ஞானிகளில் சிலரின் பொன்னாசையை அம்பலப்படுத்துகிறது. ஆமாம், சார்! காண்டிராக்டர் தங்கக்காசு தருகிறான். இவர்கள் கூறு போட்டுக்கொண்டார்கள்.
கதை சுருக்கம்:
இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (ரூ.2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. குற்றச்சாட்டின் தீவிரத்தின் சூடு தாங்காமல், ஃபெப்ரவரி 2011ல் அரசே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுகிறது, தாங்கொண்ணா தாமதத்திற்கு பிறகு. போனவருடம், சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து, அரசு பிரகடனம் விடுத்தது. முந்திய கட்டுரையில் எழுந்த நான்கு வினாக்களுக்கு விடை தேடுவது தொடர்கிறது. முடிந்தபாடில்லை. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இந்த வெட்டவெளிச்சத்துறையை நன்கு அறிந்திருக்கும் ஜனாப் அப்துல் கலாம் அவர்கள், பொதுநலத்தை முன்னிட்டு, கருத்துக் கூறியிருக்கிறாரா என்று தேடித்தேடிக் களைத்து விட்டேன். அவர் கருத்துக்கூறவில்லையெனின், அதுவே முதல் கேள்வியாகி விடுகிறது.
அடுத்த கட்டம்:
‘சாணோ,முழமோ’ தலைக்கு மேல் நீர் மூழ்கடிக்கிறது என்றால் வாதி-பிரதிவாதிகள் மத்தியஸ்தம் நாடுவார்கள். அது ஆராய்ச்சி மணி நியாயமாகவோ,அல்லது குரங்கின் கை பூமாலையாகவோ அல்லது ருத்திராக்ஷப்பூனையின் தந்திரமாகவோ, அல்லது வேறு எது வைபோகமாகவோ அமையலாம். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் நஷ்டமடைந்த தேவாஸ் மல்டி மீடியா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் மீது மத்தியஸ்தம் கோரி, லண்டனில் உள்ள அகில உலக ‘பஞ்சாயத்திடம்’ (International Court (ICC) of Arbitration in London) முறையிட தீர்மானித்தது. அதற்கு முட்டுக்கட்டை போட விழைந்தது, வெட்டவெளித்துறை. போன மாதம் (மே 2013) இந்திய உச்ச நீதிமன்றம் தேவாஸ் மல்டி மீடியாவின் கோரிக்கைக்கு தடை யாதுமில்லை என்று தீர்ப்பளிக்க, வெட்டவெளித்துறை மருண்டது! ஏன்? இது அடுத்து வரும் கேள்வி. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க விரும்பிய வெட்டவெளித்துறை அதற்காக சட்டத்துறையை அணுகியதும், சட்டத்துறை அதை ஏற்கவில்லை என்பதும் இன்றைய செய்தி. எனினும், அது அரசு வக்கீலாகிய சொலிஸிட்டர் ஜெனெரலிடம் ஆலோசனை கேட்டிருக்கிறது. Everyone is passing on the buck.
இப்போது கேள்விக்களுக்கு தற்காலிக பதில்:
சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து…
அணுகுமுறை சரியாக படவில்லை. அவர்கள் தவறு செய்திருந்தால், தக்கதொரு தண்டனை/ ப்ராஸிக்யூஷன் தான் சரி. இல்லையெனில், இந்த இருண்டுங்கெட்டான் இகழ்ச்சியும் நியாயமில்லை.
2.பிரதமரின் அலுவலகம் இதை அறியாததா?
ஆவணங்கள் பேசட்டும். அவற்றை பொதுமன்றத்தில் வைத்தால் தான் உண்மை தெரியும்.
3. ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஆவணங்கள் இருக்கும். அவற்றை பொதுமன்றத்தில் வைக்கவேண்டும்.
4.இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன?
கதை சுருக்கம் நோக்குக.
இன்னம்பூரான்
Published in Vallamai on 24 06 2013:
No comments:
Post a Comment